சுங்கை சிப்புட் : சுகாதார துணையமைச்சர் நூர் அஸ்மி கசாலி நேற்று புதன்கிழமை (ஜூலை 21) கோலகங்சாரிலும், சுங்கை சிப்புட்டிலும் உள்ள கொவிட்-19 தடுப்பூசி மையங்களுக்கு வருகை தந்தார்.
அங்குள்ள தடுப்பூசி போடுவதற்கான வசதிகளையும், நிலைவரங்களையும் பார்வையிட்ட துணையமைச்சர் அங்கு பணிபுரியும் சுகாதார முன்களப் பணியாளர்களோடு கலந்துரையாடினார்.அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
தடுப்பூசி போட வந்த பொதுமக்களோடும் நூர் அஸ்மி கசாலி அளவளாவி, அவர்களின் பிரச்சனைகளையும், கொவிட் 19 தொடர்பான பாதிப்புகளையும் கேட்டறிந்தார்.
அவருடைய வருகையின்போது மஇகா சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் தலைவர் இராம கவுண்டர், மஇகா சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் செயலாளர் மணிமாறன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்தத் தடுப்பூசி மையங்களில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன்அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் மஇகா சேவை மையத்தின் பணிகளையும் துணையமைச்சர் பாராட்டினார்.
குறிப்பாக, சுங்கை சிப்புட்டில் இருந்து தடுப்பூசி செலுத்த கோலகங்சார் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துக்காக வாகனங்களை இலவசமாக ஏற்பாடு செய்திருக்கும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் நடவடிக்கையை நூர் அஸ்மி கசாலி பாராட்டினார்.
சுங்கை சிப்புட் மக்களின் வசதிக்காக அங்கேயே தடுப்பூசி போடும் மையத்தை ஏற்பாடு செய்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் முயற்சியையும் நூர் அஸ்மி சுட்டிக் காட்டி பாராட்டினார்.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் வாழும் பொதுமக்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு, கொவிட் தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, சுங்கை சிப்புட்டிலேயே தற்போது தடுப்பூசி மையம் திறக்கப்பட்டிருக்கிறது.
டான்ஸ்ரீயின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சுங்கை சிப்புட் மக்களுக்கான தடுப்பூசி மையம் கடந்த வியாழக்கிழமை ஜூலை 1 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. சுங்கை சிப்புட் மாவட்ட மன்ற மண்டபத்தில் தடுப்பூசி போடும் இந்த மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் சுங்கை சிப்புட் வட்டார மக்கள் கோலகங்சார் சென்றுதான் தடுப்பூசிகளைப் பெற முடியும் என்ற நிலைமை இருந்தது.
இதனைத் தொடர்ந்து சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கை சிப்புட் வட்டார மக்கள் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள இந்தப் புதிய மையத்தில் பதிந்து கொண்டுள்ளனர்.
கோலகங்சாரில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த காலகட்டத்தில் கூட வசதி குறைந்தவர்கள் கோலகங்சார் சென்று வர வேன் வாகனம் ஒன்றை விக்னேஸ்வரன் இலவசமாக வழங்கியிருந்தார். இந்த வேன் மூலம் பொதுமக்கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பயணம் செய்து கோலகங்சார் சென்று தடுப்பூசிகளைப் பெற்று வந்தனர்.
மேற்கண்ட பணிகளுக்காக மஇகா சேவை மையமும், மஇகா தொகுதி அலுவலகமும் எடுத்து வரும் முயற்சிகளையும் தெரிந்து கொண்ட துணையமைச்சர் பாராட்டு தெரிவித்ததோடு, இந்தப் பணிகள் தொடரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக தற்போது நாடெங்கிலும் தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், விரைவில் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் நூர் அஸ்மி நம்பிக்கை தெரிவித்தார்.