Home நாடு “மொகிதினை இப்போதைக்கு அகற்ற முடியாது” – சுரைடா கூறுகிறார்

“மொகிதினை இப்போதைக்கு அகற்ற முடியாது” – சுரைடா கூறுகிறார்

863
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியையும், பிரதமர் மொகிதின் யாசினையும் ஆட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் அகற்றுவது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் – காரணம் எந்தக் கட்சிக்கும் அதற்கான பெரும்பான்மை இல்லை என வீடமைப்புத் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் (படம்) கூறியுள்ளார்.

சுரைடா பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமாவார். பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சுரைடா, அஸ்மின் அலியோடு இணைந்து பெர்சாத்து கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.

எனவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை அனைத்துக் கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் – பிரதமரின் ஆட்சி தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் சுரைடா கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் மொகிதின் யாசினை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் இன்னொரு முயற்சியை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனினும், இந்த முயற்சிக்கு அம்னோ ஒத்துழைப்பு வழங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதால் அம்னோ திருப்தியடைந்து விடுமா அல்லது ஏற்கனவே அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவின்படி மொகிதின் அரசாங்கத்திற்கு ஆதரவு தராமல் விலகிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியை சந்தித்துப் பேசியிருப்பதும் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.