Home Photo News அம்பாங் தொகுதி: சுரைடா கமாருடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? தண்டிக்கப்படுவாரா?

அம்பாங் தொகுதி: சுரைடா கமாருடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? தண்டிக்கப்படுவாரா?

629
0
SHARE
Ad

(சிலாங்கூரில் உள்ள அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி மீது அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது. அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் இதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவாரா? அல்லது அடிக்கடி கட்சி மாறியதால் எழுந்திருக்கும் கண்டனங்களினால் வாக்காளர்களால் தண்டிக்கப்படுவாரா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் இரா. முத்தரசன்)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும்  நிறைந்த தொகுதிகளில் ஒன்றாக அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி  திகழும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன.

2013, 2018 பொதுத் தேர்தல்களில்  கணிசமான வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு அம்பாங் தொகுதியில் வெற்றி பெற்றவர் டத்தோ சுராய்டா கமாருடின்.

#TamilSchoolmychoice

2018 பொதுத் தேர்தலில்  அம்பாங் தொகுதியை 41,956 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றியோடு  தக்க வைத்துக் கொண்டவர் சுரைடா.

மீண்டும் அந்த சாதனையை அவரால் நிகழ்த்த முடியுமா? அல்லது அடுத்தடுத்து கட்சி மாறி  நடுநிலை வாக்காளர்களின் கடுமையான கண்டனங்களை சந்தித்திருக்கும் அவர், இந்த முறை வாக்காளர்களால் தண்டிக்கப்படுவாரா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

பிகேஆர் கட்சி சார்பாக அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தாலும் சுரைடாவை எதிர்த்துப் போட்டியிட வலிமை வாய்ந்த பிரபலமான  வேட்பாளர் ஒருவரை பிகேஆர் கட்சி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

2020ஆம் ஆண்டில் பிகேஆர் கட்சியின் அப்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியோடு சேர்ந்து கட்சியிலிருந்து விலகி டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக ஆதரவு தந்தவர் சுரைடா.

எனவே, பிகேஆர் கட்சியினர் இந்த முறை  அவரை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும். கட்சி மாறியதற்காக தண்டித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக செயல்படுவர் என நம்பலாம்.

அஸ்மின் அலியின் சட்டமன்றம் அம்பாங் நாடாளுமன்றத்தில்…

அம்பாங் தொகுதியில் இன்னொரு சுவாரசியமும் அடங்கியுள்ளது. இந்தத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் புக்கிட் அந்தாரா பங்சா ஒன்றாகும்.

இந்த சட்டமன்றத் தொகுதியில்தான் 2018 பொதுத் தேர்தலில் அஸ்மின் அலி (படம்) போட்டியிட்டு  வெற்றி பெற்றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அஸ்மில் அலி மீண்டும் புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவாரா அல்லது  நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் போட்டியிடுவாரா என்பதும் இன்னும் விடை தெரியாத ஒரு கேள்வியாகும்.

பார்ட்டி பங்சா மலேசியா எந்த கூட்டணியில் இணையும்?

பிகேஆர் கட்சியில் நீண்ட காலம் அரசியல் களமாடிய சுரைடா, அங்கிருந்து பெர்சத்து கட்சிக்குத் தாவினார். சில வாரங்களுக்கு முன்னர் பெர்சத்து கட்சியிலிருந்து விலகி பார்ட்டி பங்சா மலேசியா என்ற புதிய கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

விரைவில் அவருக்கு தலைமைப் பொறுப்பு அந்த கட்சியில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

அவரின் அரசியல் சகாவான அஸ்மின் அலி தொடர்ந்து பெர்சத்து கட்சியில் நீடிப்பாரா? அல்லது அவரும் பார்ட்டி பங்சா மலேசியா கட்சிக்கு தாவி சுரைடாவுடன் இணைந்துக் கொள்வாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

பெர்சத்து கட்சியில்  அவருக்கு முக்கியப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. முஹிடின் யாசின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் அந்த கட்சியின் அதிகார மையமாகத் திகழ்பவர் கட்சியின் தலைமைச் செயலாளரும் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடின் ஆவார்.

அவருக்கும் அஸ்மின் அலிக்கும் அரசியல் உறவு கசந்திருக்கிறது என்ற நிலவரம் நீண்ட நாளாக அந்த கட்சியில் பேசப்பட்டுவரும் ஒன்றாகும்.

அஸ்மில் அலி, சுரைடாவுடன் பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) கட்சியில் இணைந்து கொண்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில்  அவர்கள் இருவரையும்  வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதும் கேள்விகுறிதான்.

நாடெங்கிலும் சுரைடா, அஸ்மின் அலி போன்ற அரசியல் தவளைகளுக்கு  தக்கப் பாடம் கற்றுத் தரப்பட வேண்டும் – அவர்களைப் போன்றவர்களுக்கு எந்த வகையிலும் வாக்களிக்கக்கூடாது –  என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில்  தீவிரமாக முன்வைக்கப்படுகின்றது.

பிபிஎம் தேசிய முன்னணியில் இணையும் திருப்பம் நேருமா?

கட்சி மாறினாலும் ஸுராய்டா  இன்னும் அமைச்சராக பதவியில் தொடர்கிறார். இதுவும் கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது.

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்பது போன்று  சுயேச்சை அமைச்சர்களும்  இப்போது மலேசிய அரசாங்கத்தில் பதவி வகிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

பிரதமரும் மௌனமாக இந்த விவகாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையில், அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒரு புதிய அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

பிபிஎம் கட்சி தேசிய முன்னணியில்  இணைந்தால் அந்த கட்சியிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படிப் போட்டியிடுவார்கள் என்ற ஒரு குழப்பக் கேள்வியைத் தொடுத்திருக்கிறார்.

இதன் மூலம் சுரைடா தலைமையிலான பிபிஎம் கட்சி தேசிய முன்னணியில் ஓர் உறுப்பிய கட்சியாக இணையலாம் என்ற  ஆரூடங்களும்  எழுந்திருக்கின்றன.

தேசிய முன்னணித் தலைவர் அமாட் சாஹிட் ஹமிடியும்  இந்த ஆரூடத்தை மறுக்கவில்லை. பிபிஎம் கட்சி அப்படியே தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ளப்பட்டால் சுரைடாவுக்கே மீண்டும் அம்பாங் தொகுதி ஒதுக்கப்படலாம்.

அப்படி நிகழ்ந்தால்  தேசிய முன்னணி கூட்டணி சார்பாக சுரைடாவை எதிர்த்து பிகேஆர் தனது வேட்பாளரை நிறுத்தும். பிபிஎம் கட்சி தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ளப்படாவிட்டால் சுரைடா அந்த கட்சியின் சார்பில்  மீண்டும் அம்பாங் தொகுதியிலேயே போட்டியிடுவார்.

அவர் தொகுதி மாறுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

பாஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?

அம்பாங் தொகுதியில்  பாஸ் கட்சியின் நிலைப்பாடும் 15ஆவது பொதுத் தேர்தலில் யார் அந்தத் தொகுதியில் வெல்வார்கள் என்பதை நிர்ணயிக்கும்.

2018-ஆவது பொதுத் தேர்தலில்  இங்குப் போட்டியிட்ட பாஸ் கட்சி 9,598 வாக்குகளைப் பெற்றது. தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீச 12,351 வாக்குகளைப் பெற்றது.

எனவே, பாஸ் அம்பாங் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துமா? என்பதும்  இந்தத் தொகுதியில் வெற்றி பெறப் போகும் வேட்பாளரை நிர்ணயிக்கும் ஓர் அம்சமாகும்.

எப்படிப் பார்த்தாலும்  15ஆவது பொதுத் தேர்தலில் அம்பாங் தொகுதி அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் ஒன்றாக மாறும் என்பது திண்ணம்.

-இரா.முத்தரசன்