கோலாலம்பூர் : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொவிட் மீட்சித் திட்டங்கள் தொடர்பான பிரதமரின் விளக்க உரைக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார்.
நாட்டின் அவசர கால சட்டங்கள் மாமன்னருக்கு மரியாதை கொடுக்காத வண்ணம் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன என அவர் சாடினார்.
ஏதோ “பாசார் மாலாம்” நடைமுறை போன்று இந்த அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
அவசர கால சட்டங்கள் மாமன்னரின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்பட்டன. இப்போதும் அதே போன்று மாமன்னரின் ஒப்புதலோடு இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே நாடாளுமன்றத்தில் அவசர கால சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
தக்கியூடின் ஹாசான் அறிவித்தபடி அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் கையெழுத்திட்டாரா என்றும் அன்வார் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு மாமன்னர் கையெழுத்திடாவிட்டால் தக்கியூடின் ஹாசானின் அறிவிப்பு செல்லாது என்றும் அன்வார் தனது உரையில் கூறினார்.
இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில், சுமார் ஒரு மணி நேர விவாதங்களுக்குப் பின்னர் சட்டத் துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் எழுந்து, அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டு விட்டன என்றும் எனவே, அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
உடனே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து எப்போது அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டன என வினவினர்.
அதற்கு பதிலளித்த தக்கியூடின் ஹாசான் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவை இரத்துச் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். இனி அவசர கால சட்டங்களின் நீட்டிப்பும் இல்லை என தக்கியூடின் மேலும் குறிப்பிட்டார்.