Home நாடு பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

672
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே பிரதமர் மொகிதின் யாசின் அவசர கால சட்டங்களை இரத்து செய்யுமாறு மாமன்னருக்கு அறிவுரை வழங்கியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மலேசிய அரசியலமைப்பு சட்டம் 40 (1) இன்படி மாமன்னர் பிரதமரின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

சிறப்பு நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே அமைச்சரவை அவசர கால சட்டங்களை இரத்து செய்யுமாறு மாமன்னருக்கு அறிவுரை வழங்கிவிட்டது என பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

“அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் எடுக்கப்பட்டன என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. பிரதமருக்கு சட்டத்தின்படியும், அரசியலமைப்பிற்கு ஏற்பவும் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இருக்கிறது” எனவும் பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

“ஜூலை 22-ஆம் தேதி அவசர கால சட்டங்களை இரத்து செய்யும் நகல்வரைவு ஆவணத்தை பிரதமர் துறை அலுவலகம் பெற்றது. அதன்படி ஜனவரி 11-ஆம் தேதி அமுலாக்கத்திற்கு வந்த அவசர காலசட்டம் ஜூலை 21 முதல் இரத்து செய்யப்படுகிறது என அந்த ஆவணம் குறிப்பிட்டது. அவசரகால சட்டங்களை இரத்து செய்யுமாறு மாமன்னருக்கு ஆலோசனை வழங்கி பிரதமர் ஜூலை 23-ஆம் தேதி கடிதம் எழுதினார். மாமன்னரோ ஜூலை 24-ஆம் தேதி சட்ட விவகார அமைச்சர் தக்கியூடின் ஹாசான், சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் இருவரையும் அரண்மனைக்கு அழைத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டார்” எனவும் பிரதமர் அலுவலக அறிக்கை மேலும் தெரிவித்தது.

ஆனால்,மாமன்னரின் அரண்மனை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்பதே மாமன்னரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இதனை செயல்படுத்த ஆளும் தேசியக் கூட்டணி முன்வரவில்லை .

இதன் அடிப்படையில் ஜூலை 27-ஆம் தேதி தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றத்தில் ஜூலை 21-ஆம் தேதியே அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் 40 (1) இன்படி பிரதமரும் அமைச்சரவையும் வழங்கும் ஆலோசனைக்கு ஏற்பவே மாமன்னர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கை சுட்டிக் காட்டியது.

ஜூலை 27-ஆம் தேதி நண்பகலில் பிரதமரும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருணும் மாமன்னரைச் சந்தித்தனர். அப்போதும் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்பதை விளக்கி, அவசரகால சட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை மாமன்னருக்கு ஆலோசனை வழங்கி விட்டதால், நாடாளுமன்றத்தில் அவசர கால சட்டங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும் பிரதமர் மாமன்னரிடம் விளக்கினார். நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அவசர கால சட்டம் இரத்து குறித்த அங்கம் இடம் பெறவில்லை என்பதையும் மாமன்னரிடம் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அவசர கால சட்டங்களை அகற்ற அமைச்சரவை முடிவு செய்து விட்டதால் அவற்றை இரத்து செய்ய மாமன்னரிடம் ஆலோசனை வழங்கிவிட்டதாலும், மீண்டும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பதையும் பிரதமர் மாமன்னரிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

“அரசியலமைப்பு சட்டம் 150-இன்படி அவசர கால சட்டங்களை நாடாளுமன்றத்தின் முன் அரசாங்கம் சமர்ப்பித்து விட்டது. அவசர கால சட்டங்களை இரத்து செய்யாவிட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே அவசரகால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டு விட்டதால் அவற்றை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அவசியம் இல்லை” எனவும் பிரதமர் அலுவலக அறிக்கை வலியுறுத்தியது.

எனினும் மாமன்னரின் இன்றைய அறிக்கை, அவசர கால சட்டங்களை இரத்து செய்ய மாமன்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தியது.