Home நாடு மொகிதினுக்கு எதிராக அன்வார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அனுமதிக்கப்படுமா?

மொகிதினுக்கு எதிராக அன்வார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அனுமதிக்கப்படுமா?

785
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

அந்த தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டதை அவைத் தலைவர் அசார் அசிசான் அலுவலகம் உறுதிப்படுத்தியது என்றும் அன்வார் தெரிவித்தார்.

தனது தீர்மானத்தைத் தொடர்ந்தே அச்சம் கொண்ட மொகிதின் அரசாங்கம் நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமையன்று ஒத்தி வைக்கும் முடிவை எடுத்தது என்றும் இப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு முயற்சி செய்கிறது என்றும் அன்வார் சாடினார்.

#TamilSchoolmychoice

நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கேயே பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அன்வார் மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.

அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டு ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்றத்தின் பொது அறிவிப்பு ஒலிபெருக்கியின் வழி அனைவரும் கொவிட் பரிசோதனைகள் நடத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது திசைதிருப்பும் வேலை என்றும் உடனடியாக அன்வார் அப்போது கூறினார்.

மாமன்னர் உத்தரவிட்ட பின்னரும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த மொகிதின் யாசின் அரசாங்கம் தவிர்த்து வருகின்றது. நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் அரசாங்கம் தெளிவாக இழந்து விட்டது என்றும் அன்வார் கூறினார்.

அன்வாரின் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்மானத்திற்கு அவைத் தலைவர் அசார் அசிசான் அனுமதி வழங்குவாரா என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிபா மைடின் ஆகிய இருவரும் மற்றொரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.