கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் “அனல் பறக்குது” சமையல் கலை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராகேஷைரி நாயுடுவுடனான சிறப்பு நேர்காணல் :
1. கலைத் துறையில் உங்களின் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
17 வயதில், கலைத் துறையில் எனது பயணம் தொடங்கியது. நடனம் மற்றும் நிபுணத்துவம் பெற்ற குத்துச்சண்டைக்குப் பிறகு, தொகுப்பாளராகவும் பாடகராகவும் எனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தேன். ஒரு புகழ்ப் பெற்றக் கலைஞராவது எப்போதும் எனது கனவாக இருந்தது. பல சவால்களுக்குப் பிறகு, தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் ‘காவல்’ (2020), ‘காடிஸ் திஞ்சு’ (2017) உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் (டெலிமூவிக்களில்) நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இந்நிகழ்ச்சிக்காக, எனது ஆடிஷன் காணொலியை அனல் பறக்குது குழுவுக்கு அனுப்பினேன், நான் தேர்வுச் செய்யப்பட்டேன். ஒரு தொகுப்பாளராக எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அனல் பறக்குது. இரசிகர்களை மகிழ்விக்கும் இந்த வாய்ப்புக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
2. அனல் பறக்குது சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய உங்களின் சில அனுபவங்கள் யாவை?
முதலாவதாக, எனது தொகுத்து வழங்கும் திறமையை வெளிக்கொணர உதவிய அனல் பறக்குது சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அதை நான் இரசித்தேன். ஆரம்பத்தில் நான் சற்றுப் பதட்டமாக உணர்ந்தேன். ஆனால், காலப்போக்கில் அணியின் நிபுணத்துவ வழிகாட்டுதலாலும் அவர்களின் ஆக்கப்பூர்வமானச் சிந்தனைகள் பரிமாற்றத்தினாலும் நிகழ்ச்சியைச் சிறப்பாக வழிநடத்த அறிந்துக் கொண்டேன். என் வீட்டில் இருப்பதுப்போல் குழுவினர் என்னை உணரச் செய்தனர். எங்கள் படப்பிடிப்பின் ஒரு பகுதியாகக் கோழி மற்றும் ஆடு பண்ணைகளுக்குச் செல்லும் ஓர் அரிய வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. அனல் பறக்குது நிகழ்ச்சியில் பல உள்ளூர் கலைஞர்களைச் சந்தித்ததோடு அவர்களுடன் மறக்கமுடியாதத் தருணங்களைப் பகிர்ந்துக் கொண்டதையும் நான் விரும்பினேன்.
3. நிகழ்ச்சியின் பிறப் பகுதிகளை நீங்கள் இரசித்தீர்களா?
நான் இதற்கு முன்பு சுவைக்காத எல்லா உணவுகளையும் விரும்பி சுவைத்தேன் – உணவு வகைகள் சுவையாக இருந்தன!
4. நிகழ்ச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் உங்களுக்குப் பிடித்தச் சில உணவு வகைகள் யாவை?
உண்மையாகக் கூறினால், அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தன. மேலும், அவ்வுணவு வகைகள் அனல் பறக்குது நிகழ்ச்சியில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர்கள் தயாரித்ததால் அவை அனைத்தையும் நான் நேசித்தேன். இருப்பினும், ‘மட்டன் சுக்கா’, ‘பால்கோவா’ மற்றும் ‘பாலக் பன்னீர்’ எனக்குப் பிடித்த உணவு வகைகளாகும். மிகவும் அற்புதமான மற்றும் பால் நிறைந்த ‘பால்கோவா’ வகையை நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
5. நிகழ்ச்சியில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு வகைகளை வீட்டில் சமைக்க முயற்சித்தீர்களா?
நான் வீட்டில் ‘மட்டன் சுக்கா’ சமைத்தேன். நிகழ்ச்சியில் சமைத்த அளவுக்கு அது சுவையாக இல்லை என்றாலும், என் குடும்பத்தினர் அதை விரும்பி உண்டனர். சிறந்த அம்சம் என்னவென்றால், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட எனது நண்பர்கள் கூட இந்த உணவை வீட்டில் சமைக்க முயன்றனர். ஏனெனில் செய்முறை மிகவும் எளிதாக இருந்தது. அனல் பறக்குது நிகழ்ச்சி இளைஞர்களை வீட்டில் சமைக்கத் தூண்டியுள்ளது என்றுதான் கூறுவேன்.
6. நீங்கள் கற்றுக்கொண்ட சில சிறந்தச் சமையல் குறிப்புகள் யாவை?
இனிப்பு வகை உணவுகளைத் தயாரிக்கும்போதுப் பொறுமையாக இருத்தல், உணவுகள் அதிகமாக வேகாமல் இருப்பதை உறுதிப்படுத்த நேரத்தை கண்காணித்தல் எனப் பல முக்கிய சமையல் குறிப்புகளை நான் கற்றுக்கொண்டேன். தேங்காய் பாலுக்குப் பதிலாக உணவுகளுக்கு வித்தியாசமான அமைப்பையும் சுவையையும் தரும் பால் மாவைப் பயன்படுத்தும் யுத்தியைக் கற்றுக்கொண்டேன்.
7. நீங்கள் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்பும் உங்களின் சில எதிர்காலத் தொழில் திட்டங்கள் யாவை?
கலைத் துறையில் எனது திறமைகளைத் தொடர்ந்து வளர்ப்பதோடு எதிர்காலத்தில் பல திரைப்படங்களை இயக்குவேன் என்று நம்புகிறேன்.