Home நாடு மொகிதினுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118

மொகிதினுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118

883
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்திருக்கிறது.

அம்னோ மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னருக்கு கடிதங்கள் மூலம் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் அடிப்படையில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினை ஆதரிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

மொகிதினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்ட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

அவர்களின் பெயர்ப் பட்டியல் அம்னோவின் வலைத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் மாமன்னரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்மாயில் சாப்ரி தரப்பில் பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 28-இலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 42 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 பேர் பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்கின்றனர் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி இஸ்மாயில் சாப்ரி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த எண்ணிக்கை 31 ஆகக் குறைந்தது.

தங்களின் பக்கம் 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருந்தார்.

ஆனால், அதில் 3 பேர் மொகிதின் யாசினைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 28 ஆகக் குறைந்தது.

அம்னோவின் 9 அமைச்சர்கள் மொகிதினை ஆதரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரையில் 2 அம்னோ அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர்.

கடந்த சில நாட்களாக அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலர் அரசாங்க அமைப்புகளில் இருந்தும், நிறுவனங்களில் இருந்தும் பதவி விலகி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மேலும் சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.