Home Uncategorized டான்ஸ்ரீ மகாலிங்கம் மறைவு – விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி

டான்ஸ்ரீ மகாலிங்கம் மறைவு – விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி

603
0
SHARE
Ad

டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி

எங்களின் அன்புக்குரிய மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா மத்திய செயலவை சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக நீண்ட காலமாக மஇகாவின் அரசியல் பாதையில் தன்னைப் பிணைத்துக் கொண்டு பயணம் செய்தவர் டான்ஸ்ரீ மகாலிங்கம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த டான்ஸ்ரீ மகாலிங்கம், மிக இளம் வயதிலேயே மஇகாவில் இணைந்து துன் சம்பந்தன் காலம் தொடங்கி சேவையாற்றியவர்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் பதவிக் காலத்தில் மத்திய செயலவை உறுப்பினராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவதற்கு முன்னர் 1979-ஆம் ஆண்டில், டான்ஸ்ரீ மகாலிங்கத்தை தலைமைச் செயலாளராக நியமித்தார். அதன் பின்னர் துன் சாமிவேலு தேசியத் தலைவராக இருந்தபோதும் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார் டான்ஸ்ரீ மகாலிங்கம்.

தலைமைப் பொருளாளர், மஇகா தேசிய உதவித் தலைவர் போன்ற பதவிகளையும் வகித்தவர் டான்ஸ்ரீ மகாலிங்கம்.

அரசாங்கத்திலும், மஇகா சார்பில் பல பதவிகளை வகித்தவர் அவர். சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர், மத்திய அரசாங்கத்தில் துணையமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த மகாலிங்கம், இந்தப் பதவிகளின் வழி கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றியிருக்கிறார்.

அதேவேளையில், ஒரு காலகட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர் டான்ஸ்ரீ மகாலிங்கம். எனினும், தனது இறுதிக் காலம் வரை கட்சிக்கும், எல்லா தேசியத் தலைவர்களுக்கும் விசுவாசமாக இருந்தவர்.

அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டபோதும் யாருக்கும் முரண்பாடான கருத்துகளையோ, எதிர்மறையான அறிக்கைகளையோ வெளியிடாத நற்பண்பு அரசியலை அவர் இறுதி வரை கடைப்பிடித்தார்.

கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்குமான அவரின் சேவைகள் என்றும் நினைவு கூரப்படும்.

அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்