சிங்கப்பூர் :துணைப்பிரதமராகத் தேர்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் தென் கிழக்கு ஆசியாவுக்கான முதல் வருகை மேற்கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். அந்த வருகையின் முதல் கட்டமாக இன்று காலை அவர் சிங்கப்பூர் வந்தடைந்தார்.
பாயா லெபார் இராணுவ விமானத் தளத்தை வந்தடைந்த அவரை சிங்கையின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேரில் சென்று வரவேற்றார்.
கொவிட்-19 நிபந்தனைகளுக்கு ஏற்ப முகக் கவரி அணிந்திருந்தார் கமலா ஹாரிஸ். அடுத்த இரண்டு நாட்களுக்கு சிங்கப்பூரில் பல்வேறு சந்திப்புகளை நடத்தும் கமலா ஹாரிஸ் செவ்வாய்க்கிழமை சிங்கையிலிருந்து புறப்பட்டு வியட்நாம் சென்றடைவார்.
வியட்நாமுக்கு வருகை தரும் முதலாவது அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார்.
சிங்கப்பூரில் அவர் அதிபர் ஹாலிமா யாக்கோப்பைச் சந்திப்பார். பிரதமர் லீ சியன் லூங்குடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துவார்.
சாங்கி கடற்படைத் தளத்திற்கும் அவர் வருகை மேற்கொள்வார். அங்கு போர்ப் பயிற்சிக்காக வந்திருக்கும் “துல்சா” என்ற அமெரிக்கப் போர்க் கப்பலையும் அவர் பார்வையிடுவார்.
கமலா ஹாரிசுடன் சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தந்திருக்கின்றனர்.
படங்கள் : நன்றி : கமலா ஹாரிஸ் டுவிட்டர் பக்கம்