Home நாடு இஸ்மாயில் சாப்ரி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்!

இஸ்மாயில் சாப்ரி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்!

908
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி, இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமராகத் தன் முதல் உரையை வழங்கினார்.

வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த உரையில் பிரதமர் தெரிவித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் நன்றி

என்னைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்த மாமன்னருக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கும் எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • சகோதர கட்சிகளுக்கு நன்றி
#TamilSchoolmychoice

தேசிய முன்னணி பாரம்பரியத்தின் அடிப்படையில் நான் பிரதமராக ஆதரவளித்த, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தேசியக் கூட்டணியில் உள்ள உறுப்பியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அவர்களுக்கு நன்றி

கடந்த அரசாங்கத்திற்குப் பிரதமராகத் தலைமையேற்று நாட்டையும், அரசாங்கத்தையும் சிறப்பாக வழிநடத்தப் பாடுபட்ட முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அவர்களுக்கும் இந்த வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • ஒரே மலேசியக் குடும்பம்

அரசாங்க சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

நாம் அனைவரும், நாடு தற்போதைய பாதிப்புகளில் இருந்து மீட்சி பெற பாடுபடுவோம். நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல் நமக்குள் இருக்கும் ஒற்றுமையான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது மலேசியக் குடும்பம் மேம்பாடு காண செயல்படுவோம்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம். மலேசியக் குடும்பம். அந்த உணர்வோடு செயல்படுவோம்.

குடும்ப உறுப்பினர்கள் பலவிதமான இன, மத பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் பலவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே குடும்பமாக  அவர்கள் வாழ்வதை நாம் காண முடியும்.

அதே போல ஒரே மலேசியக் குடும்பமாக நாம் வாழவேண்டும்.

  • மலேசியக் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைப்பேன்

பிரதமர் என்ற முறையில் நமது மலேசியக் குடும்பத்தினர் அனைவரையும் நான் அரவணைப்பேன். அவர்கள் எந்தப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை நான் அரவணைப்பேன்.ஒருவேளை  உணவுக்காகக் கூட பல குடும்பங்கள் சிரமப்படுவதை  நான் உணர்ந்திருக்கிறேன்.

நானும், ஓர் ஏழை விவசாயியின் மகனாகத்தான் வளர்ந்தேன். எனவே, ஏழ்மையின் சிரமங்களை நானும் உணர்ந்திருக்கிறேன்.

  • கொவிட்-19 நமது பொது எதிரி

கொவிட்-19 நம் அனைவருக்குமான பொது எதிரியாகும். உலகம் எங்கும் இந்த கொவிட் பாதிப்புகளால் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த அரசாங்கம் கொவிட்-19 தொற்றை ஒழிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு, நமது நடவடிக்கைகளை மேலும் அதிக அளவில் அதிகரிப்போம்.

பொது சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப, நமது வியூகங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் வடிவமைப்போம்.

  • தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவோம்

முந்தைய அரசாங்கம் நாட்டின் தடுப்பூசித் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திக் காட்டியது. நாள் ஒன்றுக்கு சுமார் 500 ஆயிரம் தடுப்பூசிகளை நமது மக்களுக்குச் செலுத்தும் ஆற்றலை நாம் கொண்டிருக்கிறோம்.

உலகில் மிக விரைவாக தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளில் ஒன்றாக நமது நாடும் திகழ்கிறது. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து விரிவாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்துவோம்.

நமது தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மலேசியர்களுக்கும், நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை தடுப்பூசி செலுத்தாத, நமது மலேசியக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் முன்வந்து, தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளுமாறும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

  • முன்களப் பணியாளர்களை மறக்க மாட்டோம் – மதிப்போம்

கொவிட் பாதிப்புகள் காலகட்டத்தில் – நமக்காக தியாக உணர்வுடனும், அர்ப்பண உணர்வோடும் பாடுபட்ட முன்களப் பணியாளர்களை நாம் மறக்கக் கூடாது. அவர்களின் சேவைகளை நாம் என்றும் மதிப்போம்.

  • மேலும் கூடுதலாக 6 மில்லியன் தடுப்பூசி அளவைகள்

தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை விரைவுபடுத்தும் விதமாக– மேலும் 6 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகளை நாம் பெறவிருக்கிறோம். செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தத் தடுப்பூசி மருந்துகள் நமது நாட்டை வந்தடையும்.

தேசிய தினக் கொண்டாட்டங்கள் ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் கூடுதல் தடுப்பூசி மருந்துகளின் வரவு நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

  • பொருளாதார மீட்சிக்காக இரண்டு வியூகத் திட்டங்கள்

நாட்டைப் பாதித்துள்ள பொருளாதாரத்திலிருந்து மீட்சி பெற இரண்டு வியூகங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவது நமது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வது.

இரண்டாவது வியூகம்- நமது நாட்டின் பொருளாதார வலிமையை எப்போதும் முன்னெடுத்துச் செல்லும், தனியார் வணிகங்கள் வசம் மீண்டும் பொருளாதார பலத்தை  ஒப்படைப்பது.

இதன் தொடர்பில் வேலை இழந்தவர்கள், நடுத்தர வருமானம் கொண்ட மலேசியர்கள், சிறு, நடுத்தர வணிக நிறுவனங்கள், ஆகிய தரப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

உற்பத்தித் தொழில்களும், உள்நாட்டு சுற்றுலாத் துறையும் மேம்பட தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.

எந்த ஒரு மலேசியரும், அவர் எந்த மதம், இனம் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் அரசாங்க உதவித் திட்டங்களில் இருந்து விடுபட்டு விடாமல் இருக்க  நான் தொடர்ந்து தனிப்பட்ட அக்கறை எடுத்து கவனம் செலுத்துவேன்.

  • இளைய சமுதாயத்தின் குரலை செவிமெடுப்போம்நமது இலக்குகளை அடையவும், பொருளாதார மீட்சியை அடையவும் இளைய சமுதாயத்தினரின் பங்கெடுப்பு அனைத்து நிலைகளிலும் இருக்க வேண்டியது முக்கியமாகும்.

இதன் தொடர்பில் எனது தலைமையிலான அரசாங்கம் இளைய சமுதாயத்தினரின் குரல்களை அக்கறையோடு செவிமெடுக்கும் என்பதையும் அவர்களின் கருத்துகளையும் பரிசீலிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  • ஒன்றுபட்டு நாட்டை மீண்டும் மேம்படுத்துவோம்

அடுத்த 15-வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 21 மாதங்களே இருக்கின்றன. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 2 ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

இதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்புத்தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்தித்தபோது /நமது மாமன்னர் மக்களின் நன்மைக்காக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நாம் அனைவரும் ஒரே மிகப் பெரிய மலேசியக் குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றி நமது பாதிப்புகளில் இருந்தும், நாம் பட்ட காயங்களில் இருந்தும் மீண்டு வருவோம்.

நமது நாடு மீண்டும் மீட்சிப் பாதைக்குத் திரும்ப பாடுபடுவோம்.

அரசியல் மோதல்களினால் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றுவதன் மூலமும் எல்லாக் கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து பணியாற்றுவதன் மூலமும் நாம் மீண்டும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவர முடியும் என நம்புகிறேன்.

-செல்லியல் தொகுப்பு