மலேசிய நாட்டின் அரசியலமைப்புச் சாசனம், மக்களால் தேர்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரைப் பிரதமராகத் தேர்வு செய்யப் பேரரசருக்கு உரிமையையும் பிரதமரைத் தேர்வு செய்யும் வழிகாட்டலையும் தெளிவாக வரையறுத்திருக்கிறது.
அத்தோடு, பிரதமராகத் தேர்வு பெற்றவர் மக்களவை அல்லது மேலவை (செனெட்) உறுப்பினர்களில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்குப் பேரரசருக்குப் பரிந்துரை செய்வார். பிரதமரின் ஆலோசனைபடி பேரரசர் அமைச்சரவை உறுப்பினர்களை நியமனம் செய்வார்.
இவர்களின் பரிந்துரையை அலசி ஆராய்ந்த பேரரசர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை தற்சமயமுள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மையாகக் காட்டுவதாலும் இஸ்மாயில் சப்ரியை மாமன்னர் நாட்டின் 9-ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில் இயங்கும் ம.இ.காவும் முழு ஆதரவு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இஸ்மாயில் சப்ரி தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் தொடர்ச்சி என்றால் மிகையாகாது. முன்பு பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தார். தற்பொழுது அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
ஆகவே, புதிய அரசாங்கக் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பெரிய மாறுதல்களை மக்கள் எதிர்பார்க்காவிடினும் இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வரவும் ஒரு சில உருமாற்றங்களைச் செய்யுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


நமது நாடு குறுகிய காலத்திலேயே இருமுறை பிரதமர் பதவி மாற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.
ஆகவே, இஸ்மாயில் சப்ரி தலைமையில் அமையவிருக்கும் அரசாங்கம் கட்சி தாவல்களைத் தடுக்கும் சட்டங்களைக் கொண்டுவர முனைப்புக் காட்டுவதோடு முகிதீன் யாசின் அவர்கள் முன்மொழிந்த ஆளுங் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படும் (bi partisan) நடைமுறையை உருவாக்க முற்படுமா?
இப்புதிய அரசாங்கம் நாட்டு மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் ஆக்ககரமான ஒற்றுமையை வளர்க்கும் முதிர்ச்சியான அரசியல் சிந்தனையை முன்னெடுக்குமா?
அடுத்து வரும் நாட்களில் நமக்குத் தெரியவரும்!