
கோலாலம்பூர் : கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க பேரரசரின் ஆலோசனையை ஏற்று எதிர்கட்சித் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு மூவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பதும், பிரதமரை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருப்பதும் அவர்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது என டான்ஸ்ரீ க.குமரன் கூறியிருக்கிறார்.
குமரன் மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் சுகாதாரத் துணையமைச்சருமாவார். நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குமரன் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களை தனது அலுவலகத்தில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.
இது குறித்துக் கருத்துரைத்த குமரன் “இந்த மூன்று தலைவர்களுக்கும் சமுதாயத்தின் நன்றி. நாடு எதிர்நோக்கும் கொவிட் பரவல், பொருளாதார மந்தநிலை, மக்களிடையே வேலை வாய்ப்பின்மை அதிகரித்தல், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றை சமாளிப்பதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் பிரதமருடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பது நல்ல முன்மாதிரியாகும். இந்த ஒத்துழைப்பு அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் வளமாய் வாழ்வதற்கு இந்த செயல்
முன்மாதிரியாக அமையும்” எனவும் தெரிவித்தார்.