
குவாந்தான் : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பிப்பார் என்ற ஆரூடங்கள் நிலவின.
ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக, மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, பக்காத்தான் கூட்டணித் தலைவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து, சுமார் 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக கலந்துரையாடினார் இஸ்மாயில் சாப்ரி.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலைச் சமர்ப்பித்து மாமன்னரின் ஒப்புதலையும் இஸ்மாயில் சாப்ரி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமையோ அல்லது அடுத்த சில நாட்களிலோ புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்திற்கு முன்பாக முழு அமைச்சரவையும் பதவியேற்று உடனடி செயல் நடவடிக்கைகளில் இறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.