Home உலகம் ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?

ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?

765
0
SHARE
Ad
விஸ்மா புத்ரா – மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரோடு இணைந்து போராடியதற்காக தாலிபான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மலேசிய ஐஎஸ் போராளிகள் 2 பேரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது தாலிபான் இயக்கம். இதைத் தொடர்ந்து அங்கு இயங்கி வரும் ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் போராளிகளாக பங்கேற்ற இரண்டு மலேசியர்களை தாலிபான் அரசாங்கம் சிறைப்பிடித்திருக்கிறது.

ஐஎஸ்-கே எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்திற்கு எதிராகவும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது.

#TamilSchoolmychoice

தாக்குதல் ஒன்றின்போது சில ஐஎஸ் போராளிகளை தாலிபான் அரசாங்கம் சிறைப்பிடித்தது. அவர்களில் நால்வர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இருவர் மலேசியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்களின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் தலைவர் அக்ரில் சானி அக்ரில் அப்துல்லா அறிவித்துள்ளார். இதுவரையில்,  சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு மலேசியர்கள் குறித்த அதிகாரத்துவ தகவல்கள் எதையும் தாங்கள் பெறவில்லை எனவும் அக்ரில் சானி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஈராக், சிரியா நாடுகளில் நடந்த போர்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பங்கு பெற்றிருக்கின்றனர்.

அந்தப் போர்களில் பங்கு பெற 102 மலேசியர்கள் நமது நாட்டிலிருந்து சென்றனர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர்களில் சுமார் 40 பேர் போர்களில் மரணமடைந்தனர்.

தாலிபான்களும் ஐஎஸ் தீவிரவாதக் குழுக்களும் ஆப்கானிஸ்தானில் மோதல்

ஆப்கானிஸ்தானில் இப்போது புதிய திருப்பமாக தாலிபான் அமைப்புக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் இடையில் மோதல்கள் தொடங்கியிருக்கின்றன.

தாலிபான் அரசாங்கம் வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாதச் சக்திகளை நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கத்திய நாடுகளுக்கு உறுதி கூறியுள்ளது.

ஆனால் அங்கு இயங்கிக் கொண்டிருக்கும் ஐஎஸ் தீவிரவாதக் குழு அண்மையில் காபூல் விமான நிலையம் அருகே நடத்திய பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். அவர்கள் அமெரிக்க இராணுவ வீரர்கள் 13 பேர்களும் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஐஎஸ் மையங்கள் விமானத் தாக்குதலையும், டுரோன் எனப்படும் ஆளில்லா சிறு விமானம் மூலமான தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் இரண்டு மலேசியர்கள் ஐஎஸ் போராளிகளாகச் செயல்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்திருக்கிறது.

தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர்களின் நிலைமை என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை.

இதற்கிடையில் மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal