ஷா ஆலாம் : குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முடிவை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என கணபதி ராவ், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதி ராவ், “மலேசிய அரசியலமைப்புச் சட்டம் ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடுகள் பார்ப்பதில்லை. எனவே, அரசாங்கம் மேலும் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது” என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தினார்.
மேலும் இதுபோன்ற பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் மகளிர், தனது அலுவலகத்தில் அமைந்திருக்கும் தனது மைசிலாங்கூர் பிரிவை (MySel Unit) உதவிக்காக நாடலாம் எனவும் கணபதி ராவ் கூறினார்.
மலேசியக் குடியுரிமை பெற்ற பெண்மணி ஒருவருக்கும், மலேசியர் அல்லாத ஆண்மகன் ஒருவருக்கும் பிறந்த குழந்தை மலேசியக் குடியுரிமை பெற உரிமை பெற்றுள்ளது என, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “தந்தை” என்ற சொல் தாயாரையும் குறிக்கும் என்பதால், மலேசியக் குடியுரிமை பெற்ற பெண்மணி ஒருவருக்குப் பிறந்த குழந்தையும் மலேசியக் குடியுரிமை பெற உரிமை கொண்டுள்ளது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் (அட்டர்னி ஜெனரல்) மேல்முறையீடு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்திருப்பது பெண்களிடையே, குறிப்பாக மகளிர் இயக்கங்களிடையே, கடுமையான கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஜோகூர் சுல்தானும் தாய்மார்களுக்கு ஆதரவாகக் குரல்
ஜோகூர் சுல்தானும் மலேசியத் தாய்மார்களுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அரசாங்கம் மேற்குறிப்பிட்ட வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதை மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் விவாதங்களிலும் இந்தப் பிரச்சனையைத் தொட்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.
நேற்று, திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் “இன்னும் பழைய காலத்திலேயே இருக்காதீர்கள். மேல்முறையீட்டை மீட்டுக் கொள்ளுங்கள்” என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal