Home நாடு “இந்தியர் புளுபிரிண்ட் செயலாக்கத்திற்கு அமைச்சரவைக் குழுவை நியமிக்க வேண்டும்”- விக்னேஸ்வரன் அறைகூவல்

“இந்தியர் புளுபிரிண்ட் செயலாக்கத்திற்கு அமைச்சரவைக் குழுவை நியமிக்க வேண்டும்”- விக்னேஸ்வரன் அறைகூவல்

501
0
SHARE
Ad

12-வது மலேசியத் திட்டம் குறித்து மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் பத்திரிகை அறிக்கை

 “பிரதமரின் 12-வது மலேசியத் திட்டத்தை வரவேற்கிறோம் – இந்தியர் புளுபிரிண்ட் செயலாக்கத்திற்கு அமைச்சரவைக் குழுவை பிரதமர் நியமிக்க வேண்டும்”

இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 12-வது மலேசியத் திட்டத்தை மஇகா முழுமனதுடன் வரவேற்கிறது.

அந்தத் திட்டத்தின் செயலாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும், மஇகாவும், அதன் தலைவர்களும் முழுமையாக வழங்குவார்கள் என்ற உறுதிப்பாட்டையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

#TamilSchoolmychoice

இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக வரையப்பட்ட புளூபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்திய சமூகத்திற்கான 10 ஆண்டுகால முன்வரைவுத் திட்டம் 12-வது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது மஇகாவுக்கும் இந்திய சமூகத்திற்கும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் வழிகாட்டுதலோடு பெரும் உழைப்போடும், திட்டமிடலோடும், ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டி, செயல்படுத்த முன்வந்திருக்கும் பிரதமரின் அறிவிப்புக்கு இந்திய சமூகத்தின் சார்பில் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

“மலேசியக் குடும்பம்” என்ற பிரதமரின் சித்தாந்தத்திற்கு ஏற்ப மலேசியாவின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியிருக்கும் விதத்தில் 12-வது மலேசியத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

எனினும், பின்தங்கிய சமூகம் என்ற அடிப்படையில் இந்திய சமூகத்திற்கென சிறப்பு உதவிகள், செயலாக்க நடவடிக்கைகள் தேவை என மஇகா நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தது. அந்த அடிப்படையில் மஇகாவின் முயற்சியால் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் ஒத்துழைப்போடு, இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் உருவாக்கம் கண்டது. அதிகாரபூர்வமாக 2017-இல் அப்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பால் வெளியிடப்பட்டது இந்தியர்களுக்கான புளூபிரிண்ட்.

இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு, சமூக, கல்வி, பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இலக்குகளை இந்த புளூபிரிண்ட் கொண்டிருந்தது. இந்திய சமூகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திட்டம் அடுத்து வந்த அரசாங்கங்களால் ஏனோ புறக்கணிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி அவர்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருப்பது இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த புளூபிரிண்ட் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த சிறப்பு அமைச்சரவைக் குழு ஒன்றை பிரதமர் நியமிக்க வேண்டும் எனவும் இவ்வேளையில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அப்போதுதான், புளூபிரிண்ட் திட்ட செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தவும் கண்காணிக்கவும் முடியும். இதன் தொடர்பில் பிரதமருடன் மஇகா, சந்திப்பு ஒன்றையும் விரைவில் நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்