Home நாடு “இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் 12-வது மலேசியத் திட்டம்” – சரவணன் பாராட்டு

“இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் 12-வது மலேசியத் திட்டம்” – சரவணன் பாராட்டு

767
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 12 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் திட்டத்திற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

“நாட்டின் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை 9 முக்கிய அம்சங்களை முன்னிறுத்தியுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அவர்களின் அறிக்கையைப் பாராட்டி வரவேற்கிறேன். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட இந்தியக் குடும்பங்களின் சமூகபொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துதல் எனும் பிரதமரின் பரிவுமிக்க திட்டத்திற்கு மலேசிய இந்தியர்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் சரவணன் தனதறிக்கையில் கூறினார்.

“குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்த திட்டம் அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இந்திய சமூகத்தின் செயல்திட்டத்திற்கு (Indian Blueprint) ஏற்ப, குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களின் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்” என்றும் சரவணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த திட்டத்தின் சில முக்கிய கூறுகள் என பின்வரும் அம்சங்களை சரவணன் தனதறிக்கையில் பட்டியலிட்டார்:-

  • தரமான கல்விக்கான வாய்ப்பு மேம்படுத்தப்படும். குறைந்த கல்வியைக் கொண்டிருத்தல் மற்றும் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்படும்
  • இந்தியர்களிடையே வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்
  • வணிக நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்

“மேலும் திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்திய பயிலரங்குகள், குழந்தை வளர்ப்பு குறித்த கருத்தரங்குகளும் இந்தியக் குடும்பங்களுக்கு வழங்கப்படும். அத்துடன் விரிசல் அடைந்துள்ள குடும்ப உறவுகளை மேம்படுத்துதல், பின்தங்கிய இளைஞர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வு காணுதல் போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படும். ஆக, பிரதமரோடு இணைந்து இந்திய சமுதாயத்தின் வெற்றிக்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சர் என்ற முறையில் முன்னெடுப்பேன் என்பதில் தயக்கமில்லை. மலேசியக் குடும்பமாக, மக்களோடு இணைந்து செயல்படுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம் எனும் பிரதமரின் கொள்கையை ஏற்று மனிதவள அமைச்சராக எனது கடமையை நிறைவேற்றுவேன்” எனவும் சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal