மலாக்கா : பெர்சாத்து தலைமையிலான தேசியக் கூட்டணிக்கும், அம்னோவுக்கும் இடையில் உறவு முறிந்ததைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
நடப்பு முதலமைச்சர் டத்தோஶ்ரீ சுலைமான் முகமட் அலியை வீழ்த்தி புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளை சில சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் பக்காத்தான் கூட்டணி 11 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. 7 தொகுதிகளை ஜசெகவும், அமானா, பிகேஆர் இரண்டு கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளையும் கொண்டிருக்கின்றன.
14 தொகுதிகளை அம்னோ கொண்டிருக்கிறது. 2 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சாத்து கொண்டிருக்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுயேச்சையாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.
2018-இல் மலாக்கா மாநிலத்தை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி கைப்பற்றியது. ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷெராட்டன் நகர்வு என்னும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அம்னோவும், பெரிக்காத்தானும் இணைந்து மலாக்காவில் ஆட்சி அமைத்தன.
தற்போது 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு நடப்பு முதலமைச்சரை வீழ்த்தி புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எனினும் அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளினாலும், யாருக்கு ஆட்சிக் குழு பதவி என்பது போன்ற மோதல்களினாலும் நடப்பு முதலமைச்சரை வீழ்த்தும் முயற்சி தற்போதைக்கு தோல்வியில் முடிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.