கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புதிய அரசியல் கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10) பல இனக் கட்சியாக உருவெடுக்கிறது.
அனைத்து இனங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய கட்சியாக அது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவராக பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் மூத்த சகோதரர் கமருசாமான் யாக்கோப் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய முன்னணிக்கு நட்பான கட்சியாக இந்தப் புதிய “குவாசா ராயாட்” கட்சி திகழும் என்றும் கமருசாமான் அறிவித்திருக்கிறார்.
ஒருகாலத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் இயக்கச் செயல்பாட்டாளராக செயல்பட்டவர் கமருசாமான். மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர் கழகத் தலைவராக இயங்கியவர்.
1974-இல் நடைபெற்ற பாலிங் மாணவர் போராட்டத்தின் காரணமாக அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வரலாற்றையும் கொண்டவர் கமருசாமான்.
ஜனநாயக மலர்ச்சிக்காகப் போராடும் செயல்பாட்டாளர்கள் அவரை ஆதரிக்கின்றனர் என்றும், சபா, சரவாக் அரசியல் செயல்பாட்டாளர்களும் அவருக்கு ஆதரவாக அணி திரளக் காத்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவரின் தலைமையின் கீழ் தொடங்கப்படவிருக்கும் கட்சி புதிதாக சங்கப் பதிவகத்தின் அனுமதிக்குக் காத்திராமல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றுடன் இணைந்து செயல்படவும் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன எனவும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று புதிய கட்சி அறிவிக்கப்படும்போது அந்தக் கட்சி சங்கப் பதிவுக்கு அங்கீகாரம் கோரும் புதிய கட்சியாக இருக்குமா அல்லது ஏற்கனவே இருக்கும் இன்னொரு கட்சியுடன் இணையுமா என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்தப் புதிய கட்சியில் இணைவதற்கு பல இந்திய சமூகத் தலைவர்கள் ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, குழம்பிக் கிடக்கும், பிளவுபட்டுக் கிடக்கும் மலேசிய அரசியல் குளத்தில் புதிய குவாசா ராயாட் கட்சி தாக்கங்கள் எதனையும் ஏற்படுத்துமா என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.