Home Photo News “பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-2)

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-2)

889
0
SHARE
Ad

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவரான டான்ஶ்ரீ மாணிக்கவாசகம், பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 – மறைந்த நாள் அக்டோபர் 12! மாணிக்காவின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சிறப்புகளையும், வாழ்க்கைச் சம்பவங்களையும் இரா.முத்தரசனுடன் நடத்திய பிரத்தியேக சந்திப்பில் நினைவு கூர்கிறார் மாணிக்காவின் இளைய சகோதரர் டத்தோ வி.எல்.காந்தன். 2-ஆம் பகுதி தொடர்கிறது)

“மாணிக்கவாசகத்தின் அரசியல் பிரவேசம்”

இளம் வயதிலேயே சமூக, அரசியல் ஆர்வம் கொண்டிருந்த மாணிக்காவுக்கு சரியான களமாக அமைந்தது மலேசிய இந்தியர் காங்கிரஸ். ஆகஸ்ட் 1946-இல் மஇகா கோலாலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டவர்களில் கிள்ளானில் இருந்து வந்திருந்த மாணிக்காவும் ஒருவர்.

தொடர்ந்து மஇகாவின் முதல் கிளை கோலாலம்பூரில் தோற்றுவிக்கப்பட இரண்டாவது கிளை கிள்ளானில் தோற்றுவிக்கப்பட்டது.கிள்ளான் மஇகா கிளையின் செயலாளராகப் பதவி வகித்தார் மாணிக்கா. அப்போது அந்தக் கிளையின் தலைவராக இருந்தவர் ஆர்.எம்.எம்.இலட்சுமணன் செட்டியார்.

#TamilSchoolmychoice

கிளையின் தலைவராக மட்டுமல்லாமல், மாணிக்காவுக்கு தந்தை போன்ற ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தியவராகவும் இலட்சுமணன் செட்டியார் திகழ்ந்தார்.

அந்த இலட்சுமணன் செட்டியார்தான், இன்று கிள்ளானில் இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கம்பீரமாக வீற்றிருக்கும் இலட்சுமணா மண்டபத்திற்கான நிலத்தை  அன்பளிப்பாக வழங்கியவர்.

அப்போது ஜாலான் ஃபோர்ட் (Jalan Fort இப்போது Jalan Kota) என்று அழைக்கப்பட்ட சாலையில் அமைந்திருக்கும் அந்த நிலத்தில்தான் இன்று லெட்சுமணா மண்டபம் அமைந்திருக்கிறது.

நிலத்தை இலட்சுமணன் செட்டியார் வழங்க, 1960-ஆம் ஆண்டுகளில் இலட்சுமணா மண்டபம் கட்டப்பட்ட முன்னின்று பாடுபட்டவரும் மாணிக்காதான். மாநில அரசாங்கம் இந்தத் திட்டத்திற்காக 40 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கியது. எஞ்சிய தொகை மாணிக்காவின் முயற்சியால் நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு சுமார் 100 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டதுதான் இலட்சுமணா மண்டபம்.

1946 முதல் கிள்ளான் மஇகா கிளையின் செயலாளராக மாணிக்கா சமூக, அரசியல் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார்.

“அண்ணன் மாணிக்கா பொதுவாழ்க்கையில் எப்போதும் ஒரு தாரக மந்திரத்தைக் கடைப் பிடித்தார். மக்களுக்கான பொதுவாழ்க்கைச் சேவையில் எதையும் எதிர்பார்த்துச் செய்யாதீர்கள். உங்களின் சேவைகளுக்காக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சன்மானங்களும், பலன்களும் தானே வந்து சேரும் என அவர் அடிக்கடி கூறுவார். அதை என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார் காந்தன்.

மஇகா வளர்ச்சியும் ஆதரவும் பெறத் தொடங்கிய 1950-ஆம் ஆண்டுகளில் நாடு சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. மஇகா எதிர்காலத்தில் அரசாங்கத்தில் இடம் பெறும், ஆட்சியைப் பிடிக்கும், அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்கும் என்பதெல்லாம் யாருமே கனவு கூட கண்டிருக்க முடியாத காலகட்டம் அது.

இருந்தாலும், இந்திய மக்களுக்காக, அவர்களின் அரசியல் நோக்கத்திற்காக உருவான மஇகா மூலமாக தீவிரமாக சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார் மாணிக்கா.

மாணிக்காவுக்குத் திருமணம் – மணமகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாரசியம்.

மாணிக்காவின் துணைவியார் கமலா தேவி அம்மையார் – இளம் வயது தோற்றம்

1948-இல் மாணிக்காவுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவாகி அதற்காகப் பெண்பார்க்கும் படலமும் தொடங்கியது. மாணிக்கா குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஒருவர் மூலம் மாணிக்காவுக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணிக்காவுக்குப் பெண்பார்க்க மாணிக்காவின் நெருங்கிய நண்பர் பி.எல்.இலட்சுமணன் செட்டியாரும், அப்போதைய கிள்ளான் மஇகா தலைவர் நாச்சியப்ப செட்டியாரும் மாணிக்கா தந்தையுடன் சென்றிருந்தனர்.

மாணிக்கா திருமண விவகாரத்தில் அப்போது நடந்த இன்னொரு சுவாரசியத்தையும் காந்தன் விவரித்தார்.

ஒரு பெண்ணை மாணிக்காவுக்காகப் பார்க்கச் சென்றபோது பெண்ணின் குடும்பத்தினர், ‘உப்பு, புளி விக்கிறவனுக்கெல்லாம் நாங்கள் பெண் தர மாட்டோம்’ என்று கூறி மாணிக்காவுக்குப் பெண் தர மறுத்து விட்டனர். “மாணிக்கா ஒரு மளிகைக் கடைக்காரர் மட்டுமே! அரசாங்க ஊழியர் அல்ல. அதுவும் இல்லாமல் சமூக சேவை என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு  நிரந்தர வேலை என்று எதுவும் இல்லை. அதனால் அவருக்கு பெண் தர முடியாது” என்று பெண் வீட்டார் கூறிவிட்டார்கள்.

இதைக் கேட்ட நாச்சியப்ப செட்டியார் ஆத்திரம் கொண்டார். மாணிக்கா மீதிருந்த நம்பிக்கையால் “இந்தப் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த அதே முகூர்த்த நாளில் நான் மாணிக்காவுக்கு இன்னொரு நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறேன்”  என்று சவால் விட்டார்.

உடனடியாக நாகப்ப செட்டியார் என்பவரின் பராமரிப்பில் இருந்த மூன்று சகோதரிகளில் மூத்தவரான கமலா தேவி என்பவரை மாணிக்காவுக்குப் பெண்பார்த்து, தான் சவால் விட்டபடி அதே முகூர்த்த நாளில் திருமணம் செய்து வைத்தார் நாச்சியப்ப செட்டியார்.

அரசாங்க ஊழியர் இல்லை, நிரந்தர வேலையில்லை எனக் கூறி பெண் கொடுக்காமல் தட்டிக் கழிக்கப்பட்ட அதே மாணிக்கா, பிற்காலத்தில் அரசாங்கத்திலேயே மிக உயர்ந்த அமைச்சுப் பதவியை பல ஆண்டு காலம் வகித்தது விதியின் திருவிளையாடல்தான்!

நிகழ்ச்சி ஒன்றில் மாணிக்காவும் அவரின் துணைவியார் கமலாதேவி அம்மையாரும்…

“அப்படி நடந்ததும் மாணிக்காவுக்கும் நன்மையாகவே அமைந்தது. காரணம் எனது அண்ணியார் கமலா தேவி அம்மையார் அவருக்கு மனைவியாக வாய்த்தது. அண்ணியார் ஒரு தெய்வத்தைப் போன்றவர்கள். எங்களையெல்லாம் அரவணைத்து அன்பு காட்டினார். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொண்டார். மாணிக்காவின் பரபரப்பான – காலம் நேரம் பார்க்காத – சமூக சேவைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தரும் – முகம் சுளிக்காத மனைவியாகத் திகழ்ந்தார்” என்பதையும் நினைவு கூர்கிறார் காந்தன்.

“அண்ணன் மாணிக்கா காலையிலேயே வீட்டை விட்டு கிளம்பி விடுவார். பின்னர் எப்போது திரும்புவார், இரவு எத்தனை மணிக்கு வருவார் என்பதும் தெரியாது. இருந்தாலும் அண்ணியார் கமலா அந்த நேரத்தில் குடும்பத்தையும் குழந்தைகளையும் பொறுப்புடன் பார்த்துக் கொண்டார். சில வேளைகளில் திடீரென அண்ணன் வீட்டில் கமலாவை தொலைபேசியில் அழைப்பார். ‘கமலா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு சில பேருடன் வீட்டுக்கு வருகிறேன். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு தயார் செய்து வை’ என்பார். அண்ணியாரும் முகம் சுளிக்காமல் அடுத்த ஓரிரண்டு மணி நேரங்களில் அத்தனை பேருக்கும் சாப்பாடு தயார் செய்து விடுவார்” என்று தன் அண்ணியாரின் விருந்தோம்பல் பண்பைப் பற்றியும், கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றும் நற்குணத்தையும் எடுத்துரைத்தார் காந்தன்.

மாணிக்கா தம்பதியருக்குப் பிறந்த 6 குழந்தைகள்

மாணிக்கா-மனைவி கமலா தேவி அம்மையார் – மூத்த மகன் இரமணி, இரண்டாவது மகன் இராஜேந்திரன்

மாணிக்கா-கமலா தம்பதியருக்கு 6 குழந்தைகள் பிறந்தனர்.  மூத்தவர் இரமணி 1950-ஆம் ஆண்டில் பிறந்தார்.

இரண்டாவதாகப் பிறந்தவர் மகன் இராஜேந்திரன். அடுத்து வரிசையாக 4 பெண்குழந்தைகள் மாணிக்கா தம்பதியருக்கு பிறந்தனர். அவர்களில் பெண் குழந்தையான சுசிலா துரதிர்ஷ்டவசமாக உடல்நலக் குறைவால் தனது இரண்டாவது வயதிலேயே இறந்து விட்டார். அடுத்தவர்கள் இந்திரா, கஸ்தூரி, கல்யாணி என 3 மகள்கள் மாணிக்கா தம்பதியருக்குப் பிறந்தனர்.

இவர்களில் இராஜேந்திரன் தற்போது இலண்டனில் வசிக்கிறார். மாணிக்காவின் மற்ற பெண் பிள்ளைகள் இந்திரா, கஸ்தூரி, கல்யாணி மூவரும் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றவர்கள் காலப் போக்கில் தங்களின் திருமணங்களுக்குப் பிறகு அங்கேயே தங்கி விட்டார்கள்.

தற்போது இரமணி, டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கல்வி நிதி அறவாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் குடும்பத் தலைவராகப் பொறுப்பேற்ற மாணிக்கா!

“எங்களின் தந்தையார் வெங்கடாசலம் 1951 ஜூலை மாத வாக்கில் காலமானார். அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் மாணிக்கா. தனது பொதுவாழ்க்கைப் பணியில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தாலும், தனது சொந்தக் குடும்பத்தைக் கவனித்து கொண்ட அதே வேளையில், அவரின் சகோதர சகோதரிகளையும் தந்தை ஸ்தானத்தில் இருந்து பொறுப்புடன் கவனித்துக் கொண்டார் எங்களின் அண்ணன். தனது சகோதர சகோதரிகளின் கல்வி, மற்ற தேவைகள், உடுத்த வேண்டிய ஆடைகள் முதற்கொண்டு ஒவ்வொரு அம்சத்தையும் அவரே கவனித்துக் கொண்டார்” என நன்றியுடன் நினைவு கூர்கிறார் காந்தன்.

நிகழ்ச்சி ஒன்றில் மாணிக்கா – துணைவியாருடன் கலந்து கொண்டபோது…

“அதனால்தான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அவர், குடும்பத்திலும், சமூகத்திலும், அரசியலிலும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் பண்பு கொண்டவராகத் திகழ்ந்தார்” என்ற காந்தன், “எங்களின் குடும்பத்தில் சகோதரர் கணேசன், இராஜகோபால் ஆகிய இருவரும் இந்தியாவில் மருத்துவர்களாகப் படித்து முடித்ததற்கும் நான் இலண்டன்வரை சென்று சட்டம் படித்ததுக்கும் மாணிக்காவே பொறுப்பேற்றார்” என்கிறார் காந்தன்.

நான் இலண்டன் செல்வதற்கு முன்பு நான் விரும்பிய பெண்ணையே எனக்குத் திருமணம் செய்து வைத்து, என்னை இலண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள் அண்ணன் மாணிக்காவும், அண்ணியார் கமலாதேவியும் என நன்றியுடன் நினைவு கூர்ந்தார் காந்தன்.

அந்த வகையில் ஒரு குடும்பத் தலைவராகவும் தனது பொறுப்புகளை சிறப்பாக ஆற்றியவர் மாணிக்கா. “ஆண்பிள்ளைகளில் நான்தான் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால் மாணிக்காவுக்கு என்மீது தனிப்பாசம் இருந்தது. ஆனால் எங்களுக்கு எல்லாம் செல்லப் பிள்ளை யார் என்றால் எஞ்சியிருந்த நாங்கள் 8 சகோதர சகோதரிகளில் கடைசியாகப் பிறந்த கிருஷ்ணவேணிதான்” என்றும் காந்தன் குறிப்பிட்டார்.

டத்தோ வி.எல்.காந்தன்

“என் தந்தையார் இறந்த அன்று சிறுவனான என்னை அவர் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, ‘லட்சுமிகாந்தன் உன்னை நான் இலண்டன் வரை அனுப்பி படிக்க வைக்கிறேன்’ என்று கொஞ்சினார். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்ட எனது அண்ணன், பொருத்தமான காலகட்டம் அமைந்தபோது நான் இலண்டன் சென்று சட்டம் படிக்க ஏற்பாடுகள் செய்தார்” என நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் காந்தன்.

“எங்களின் தந்தையார் வெங்கடாசலம் 1951-ஆம் ஆண்டில் ஜூலை மாத வாக்கில் காலமானார். அதன்பிறகு குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட அண்ணன் மாணிக்கா, தாயார் சுப்பம்மாவையும் நன்கு கவனித்துக் கொண்டார். எங்களின் தாயார் தனது 67-வது வயதில் 1970-ஆம் ஆண்டில்தான் காலமானார்” என்கிறார் காந்தன்.

-இரா.முத்தரசன்

அடுத்து 3-வது பகுதியில் :

  • 1955-இல் தேசியத் தலைவர் பதவிக்கு சம்பந்தனுக்கு எதிராகப் போட்டியிட்ட மாணிக்கா!
  • கிள்ளான் நகரசபை உறுப்பினராக மாணிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
  • துணைவியார் கமலாவின் மறைவால் மனமுடைந்த மாணிக்கா!
  • 1968-இல் மஇகா துணைத் தலைவர் பதவியைத் துறக்க மாணிக்கா முன்வந்தது ஏன்?

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal