Home நாடு மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டதில் கேள்விகளுக்கு ஹாலிமா பதிலளிக்க வேண்டும் – வேதமூர்த்தி வலியுறுத்து

மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டதில் கேள்விகளுக்கு ஹாலிமா பதிலளிக்க வேண்டும் – வேதமூர்த்தி வலியுறுத்து

527
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மித்ரா விவகாரத்தில் மானியங்கள் வழங்கப்பட்டதில் எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகள், முரண்பாடுகளைக்கான பதில்களை ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக் மூடி மறைக்காமல் வழங்க வேண்டுமென மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும், அந்தக் கட்சியோடு தொடர்புடைய அரசு சாரா அமைப்புகளுக்கும் மித்ரா நிதி வழங்கப்பட்டதா” என்று வினா எழுப்பியுள்ள பொன்.வேதமுர்த்தி, மித்ரா நிதி தொடர்பில் இந்திய சமுதாயத்திற்கு எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை பட்டியலிட்டுள்ளார்.

ஹலிமாவின் நாடாளுமன்ற பதில்ககளில் மித்ரா நிதியை ஒற்றுமை அமைச்சு கையாண்ட விதத்தில் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் உள்ளன என்பதற்கு சான்றுகள் உள்ளன.

ஹாலிமா சாதிக்
#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களில் பரவும் மித்ரா நிதி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் நாடாளுமன்றதில் தான் அளித்த நழுவலான பதிலுக்கும் மித்ராவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இந்திய சமூகம் கீழே குறிப்பிடப்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை அறிய விரும்புகிறது:

1. ஓர் அரசியல் கட்சிக்கும் அதன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புகளுக்கும் மித்ரா நிதி வழங்கப்பட்டதா?

2. மித்ரா நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதா?

3. இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக மித்ரா நிதியை ஹாலிமா எவ்வாறு, எதற்காக செலவிட்டார்?

4. வெளிப்படைத்தன்மைக்காகவும் நிதி பரிமாற்றத்திற்கான பொறுப்பேற்றலுக்காகவும் உருவாக்கப்பட்ட இணையப் பக்கத்தை ஹலிமா முடக்கியதுடன் நீக்கியதும் ஏன்?

5. வெ.35 மில்லியன் பற்றாக்குறை உண்மையாக இருந்தால், 11-ஆவது மலேசியத் திட்டத்தின் உச்சவரம்பிலிருந்து திரும்பப் பயன்படுத்த நிதி அமைச்சின் வழிகாட்டுதலின்படி ஹாலிமா ஏன் விண்ணப்பிக்கவில்லை?

6. 2021 வரவு செலவுத் திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட வெ.100 மில்லியனில் இருந்து 51 மில்லியன் வெள்ளி எங்கே மாயமானது?

7. ஹாலிமாவின் நாடாளுமன்ற பதில்களின் அடிப்படையில், 11-ஆவது மலேசியத் திட்ட உச்சவரம்பிலிருந்து சுமார் 223 மில்லியன் வெள்ளி பயன்படுத்தப்படவில்லை என்றால் அந்த நிதிக்காக ஹாலிமா விண்ணப்பித்தாரா?

8. 11-ஆவது மலேசியத் திட்ட உச்சவரம்பின்படி மீதமுள்ள வெ.223 மில்லியன் நிதியை முழுமையாகப் பயன்படுத்த முன்னாள் அமைச்சர் பொன் வேதமூர்த்தி காலத்தில் நிதி அமைச்சகத்திடம் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் ஹாலிமா தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாரா?

9. மித்ராவின் தலைமை இயக்குநர் மற்றும் துணை தலைமை இயக்குநர்களின் பதவிக்கான ஜூசா தகுதியில் இருந்து அவர்களை ஏன் பதவி இறக்கம் செய்தார்? இந்தியருக்கான அந்த துறையை தாழ்த்தவும் அதிகாரமற்றதாக ஆக்கவும் அவருக்கு நோக்கமா?

மித்ரா தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஹாலிமா தெரிவித்த பதில்கள் குழப்பமாக இருப்பதால் அவற்றை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் பார்க்கும்பொழுது குறிப்பிட்ட சிலரை தற்காக்க ஹாலிமா முற்படுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

எனவே, இவை அனைத்துக்கும் உரிய பதிலை இந்திய சமூகம் ஹலிமாவிடம் இருந்து எதிர்பார்க்கிறது என மலேசிய முன்னேற்ற கட்சி தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி மேற்கண்ட கேள்விக்கணைகளையும் ஐயங்களையும் முன்வைத்துள்ளார்.