Home Photo News “பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-4 நிறைவு))

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-4 நிறைவு))

845
0
SHARE
Ad

(டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நினைவு நாளை (அக்டோபர் 12) முன்னிட்டு, அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் அவரின் இளைய சகோதரர் டத்தோ வி.எல்.காந்தன். சிறப்பு சந்திப்பு-செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1973-இல் தேசியத் தலைவரான மாணிக்காவின் சாதனைகள்

“பொதுச்சேவையில் கடமையைச் செய்யுங்கள் – பலனை எதிர்பாராதீர்கள்” – தாரகமந்திரத்தைக் கொண்டிருந்த மாணிக்கா

“நான் தொடக்கத்திலேயே கூறியிருந்தபடி அண்ணன் மாணிக்கா எனக்குத் தெரிந்த நாள்முதல் ஒரு தலைவராகவே காட்சியளித்தார். சமூகத் தலைவராக, அரசியல் தலைவராக, குடும்பத் தலைவராக – இப்படி எல்லா நிலைகளிலும் தனது தலைமைத்துவ ஆற்றலை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதே சமயம் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். மக்களுக்கான பொதுச் சேவையில் பலனை எதிர்பார்த்து எதையும் செய்யாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே சேவைகள் செய்தால் அதற்கான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பார். அதன்படியே அவரும் நடந்தார்” என நினைவு கூர்கிறார் காந்தன்.

டத்தோ வி.எல்.காந்தன் இளம் வயதில்…
#TamilSchoolmychoice

“அதற்கேற்ப, தனது பதின்ம வயதில் ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் இந்திய சமூகத் தலைவராகச் செயல்பட்ட மாணிக்கா, தொடர்ந்து பல பதவிகள் பெற்று அரசியலில் உச்சத்தை அடைந்தார். தன்னலமற்ற அவரின் சேவைகளுக்காகவும், நேர்மைக்காகவும் இந்தப் பதவிகள் எல்லாம், தானே அவரைத் தேடி வந்தடைந்தன” என்கிறார் காந்தன்.

மஇகாவின் தேசியத் தலைவர் பதவியும் மாணிக்காவுக்கு வாய்த்தது. 1969 பொதுத் தேர்தலில் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமைத்துவத்தில் நேஷனல் அலையன்ஸ் என்ற தேசியக் கூட்டணிக்கு (பின்னாளில் பாரிசான் நேஷனல் என்ற தேசிய முன்னணி) நேர்ந்த தோல்விகள், அதைத் தொடர்ந்த மே-13 கலவரங்கள், அம்னோவில் தலைமைத்துவ மாற்றத்திற்கு வித்திட்டன.

மஇகாவிலும் 15 ஆண்டுகளைக் கடந்து விட்ட துன் சம்பந்தனின் தலைமைத்துவம் மாற வேண்டும் என்ற நெருக்குதல்கள் ஏற்பட்டன.

முதலில் மாணிக்காவுக்கு தேசியத் தலைவராவதிலும், சம்பந்தனை அகற்றுவதிலும் ஆர்வமோ, விருப்பமோ இருக்கவில்லை. மிகச் சிறந்த அரசியல் நட்புறவுடன் அவர்கள் திகழ்ந்தார்கள். சம்பந்தன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் மாணிக்கா.

ஆனால், விதியின் வலிமை அவர்கள் இருவருக்கும் இடையில் விளையாடியது.

அமரர் டான்ஶ்ரீ ஆதி.நாகப்பன்

டான்ஶ்ரீ ஆதி.நாகப்பன் தலைமையிலான ஒரு குழுவினர் மாணிக்காவிடம் சென்று “அடுத்த தலைமைத்துவத்தை நீங்கள் ஏற்க முன்வர வேண்டும், இல்லாவிட்டால், ஆதி.நாகப்பன் தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவார்” என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மாணிக்காவுக்கும் கட்சியில் சில மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கொண்டு வர வேண்டும், இந்திய சமுதாயத்துக்காக சில திட்டங்களை செயல்படுத்த  வேண்டும்  என்ற கனவு இருந்தது. கட்சி நடத்தப்பட்ட விதத்தில் சில அதிருப்திகளும் மாணிக்காவுக்கு இருந்தன.

அதைத் தொடர்ந்து நடந்த தலைமைத்துவப் போராட்டத்தில், அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் சம்பந்தன்-மாணிக்கா இருவருக்கும் இடையில் சமரசத் தீர்வு கண்டார். அதன்படி 1973 ஜூன் மாதத்தில் மஇகாவின் 6-வது தேசியத் தலைவரானார் மாணிக்கா.

மஇகா தலைமையகக் கட்டடம்

மாணிக்காவின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட மஇகாவின் புதிய தலைமையகக் கட்டடம் 1973-இல் தான் துன் அப்துல் ரசாக்கால் திறந்து வைக்கப்பட்டது.

“அரசியலில் ஈடுபட்டால் அண்ணன் என்று என்னிடம் வராதீர்கள்” சகோதரர்களுக்கு மாணிக்கா கூறிய அறிவுரை

“அண்ணன் தேசியத் தலைவரானதும் ஒருமுறை சகோதரர்களாகிய நான், டாக்டர் கணேசன், டாக்டர் இராஜகோபால் ஆகிய மூவரையும் அழைத்தார். அந்த சந்திப்புக்கு டாக்டர் கணேசன் வரவில்லை. “இதோ பாருங்கள். நான் தேசியத் தலைவராகி விட்டேன். உங்களுக்கு ஏதாவது அரசியல் ஆசை இருந்தால் என்னிடம் இருந்து எந்த ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்காதீர்கள். அண்ணன் என்ற முறையில் என் வீட்டுக்கும் வராதீர்கள். அப்படி நீங்கள் அரசியலில் ஈடுபட விரும்பினால் தனித்து இயங்கிக் கொள்ளுங்கள். எந்த வகையிலும் உங்களுக்கு நான் உதவமாட்டேன்” என்று திட்டவட்டமாக எங்களிடம் கூறிவிட்டார் மாணிக்கா. டாக்டர் இராஜகோபோல் தனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை எனத் தெளிவாக அப்போது கூறிவிட்டார்.

“எனக்கு நேரடி அரசியலில் ஆர்வமில்லை. பின்னணியின் இருந்து கட்சிக்கும் உங்களுக்கும் ஆதரவாக பணிகள் ஆற்றுவதையே விரும்புகிறேன்” என அப்போது வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நான் அண்ணனிடம் கூறிவிட்டேன்”

“இந்த நிலையில்தான் 1974 பொதுத் தேர்தல் வந்தபோது, டான்ஶ்ரீ ஆதி நாகப்பன் என்னை அழைத்து சுங்கைவே சட்டமன்றத்திற்கு நிறுத்தப் போவதாகத் தெரிவித்தார். நான் மறுத்துவிட்டேன். உண்மையில் எனது வழக்கறிஞர் பின்னணி, திறமைகள் அடிப்படையில், நான் சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வேண்டும் என்பதில் ஆதி நாகப்பன் உறுதியாக இருந்தார். மாணிக்காவிடமும் வற்புறுத்தினார். அதன் காரணமாகவே நானும் 1974 பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கைவே சட்டமன்றத்திற்குப் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டேன். மாணிக்காவும் இறுதியில் ஒப்புக் கொண்டார். சட்டமன்றத்தில் வெற்றி பெற்றதும் ஆட்சிக் குழு உறுப்பினர் நியமனம் என்று வரும்போது ஏற்கனவே ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த என்.எஸ்.மணியம்தான் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பார் என மாணிக்காவும் ஆதி நாகப்பனும் முடிவெடுத்து அதன்படி மந்திரி பெசார் ஹாருண் இட்ரிசிடம் பெயரையும் சமர்ப்பித்தனர். ஆதி.நாகப்பன் குழுவினர் ஹாருண் இட்ரிசைச் சந்தித்தபோது அவர் தனது மேசையிலிருந்து கையெழுத்துப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அதில் அம்னோ உட்பட மஇகா சார்பிலும் யார் யார் ஆட்சிக் குழு உறுப்பினராக இடம் பெறவேண்டும் என ஹாருணுக்கு எழுத்து மூலம் பிரதமர் துன் ரசாக் உத்தரவிட்டிருந்தார். அந்தப் பட்டியல்படி துன் ரசாக் எனது பெயரை ஆட்சிக் குழு உறுப்பினராகக் குறிப்பிட்டிருந்தார். எனவே ஹாருண்  “நீங்கள் காந்தன் வேண்டாம், என்.எஸ்.மணியம்தான் வேண்டும் என்றால் பிரதமர் துன் ரசாக்கிடம் இருந்து எனக்கு உத்தரவு பெற்றுத் தர வேண்டும். பிரதமரின் கோரிக்கையை நான் மாற்ற முடியாது. இல்லாவிட்டால் சிலாங்கூர் ஆட்சிக் குழு மஇகா பிரதிநிதித்துவம் இல்லாமல் பதவியேற்கும்” என்று கூறிவிட்டார். அப்படித்தான் நான் ஆட்சிக் குழுவிலும் இடம் பெற்றேன். அண்ணன் இறுதியில் சம்மதம் தந்தாரே தவிர, தொடக்கம் முதல் சிபாரிசோ, பரிந்துரையோ எதுவும் எனக்காகச் செய்யவில்லை” என்றார் காந்தன்.

கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்த மாணிக்கா

தேசியத் தலைவரானதும் அடுத்தடுத்து கட்சியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தார் மாணிக்கா. கட்சியின் தலைமைச் செயலாளராக 29 வயது இளைஞரான (டான்ஶ்ரீ டத்தோ) சி.சுப்பிரமணியத்தை நியமித்தார்.

டான்ஶ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம்

அதுவரையில் மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுப்ரா. சுப்ராவின் நிருவாக அனுபவத்தைக் கொண்டு அவர் மூலம் கட்சியின் நிருவாகத்தை மாற்றி சீரமைத்தார் மாணிக்கா.

டான்ஶ்ரீ ஆதி.நாகப்பன் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரானார்.

மாணிக்காவின் திட்டமிட்ட சாதனைகள்

“அண்ணன் எப்போதும் ஒன்றைச் சொல்வார். “Plan your work and work your plan” என்ற சித்தாந்தம்தான் அது. அதாவது “உங்கள் வேலைகளைத் திட்டமிடுங்கள். நீங்கள் திட்டமிட்டதற்கேற்ப அதன்படி செயல்படுங்கள்” என்பதுதான் அதன் பொருள்.

இரா.பாலகிருஷ்ணன்

அதற்கேற்ப, தேசியத் தலைவரானதும் முதலில் என்ன செய்யவேண்டும் என்பதைத் திட்டமிடுவதற்காக 1973 ஜூன் 30-ஆம் தேதி இந்தியர்களுக்கான பொருளாதார முன்னேற்றக்  கருத்தரங்கு ஒன்றைக் கூட்டினார். நாட்டின் சிறந்த கல்விமான்களையும், பொருளாதார, மற்ற துறை சார்ந்த அறிஞர்களை அந்தக் கருத்தரங்கில் ஒன்று திரட்டினார். அரசாங்க சேவையில் இருந்த (டான்ஶ்ரீ) ரேய்மண்ட் நவரத்தினம், எஸ்.வி.வேலு, இரா.பாலகிருஷ்ணன் (மலேசிய வானொரி தமிழ்ப் பகுதியின் தலைவர்), (டான்ஶ்ரீ) இராமா ஐயர், (டத்தோ) கு.பத்மநாபன், (டான்ஶ்ரீ டத்தோ) சுப்ரா ஆகியோர் அந்தக் கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களில் சிலர். அந்தக் கருத்தரங்கின் பரிந்துரைகள் நீலப் புத்தகத் திட்டமாக உருவெடுத்தன. இதற்கெல்லாம் முன்னின்று பாடுபட்டவர் டத்தோ கு.பத்மநாபன்தான். இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் என்னவென்று நீலப் புத்தகத் திட்டத்தின் வழி முடிவானதும் அதைச் செயல்படுத்த முனைந்தார் மாணிக்கா.

படித்த பட்டதாரிகளை, இளைஞர்களை கட்சி அரசியலில் முன்னிறுத்தினார். அவர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்தார். அரசாங்க சேவையிலும், தனியார் நிறுவனங்களிலும் நன்கு படித்து பெரிய பதவிகளில் இருந்த இளைஞர்களை அவர் அரசியலுக்குள் வர நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி அழைப்பு விடுத்தார்.

“அந்த வகையில் அப்போது அரசாங்கப் பணியில் இருந்த (டான்ஶ்ரீ ரேய்மண்ட் நவரத்தினம், எஸ்.வி.வேலு (பின்னர் வீடமைப்புத் துறை இலாகாவின் தலைமை இயக்குநராக இருந்தவர்) மலேசியத் தமிழ் வானொலியின் தலைவராக இருந்த இரா.பாலகிருஷ்ணன், (டத்தோ) கு.பத்மநாபன் ஆகியோரை அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார். இவர்களில் பத்மா அவரை அழைப்பை ஏற்று அரசியலில் ஈடுபட்டார். இரா.பாலகிருஷ்ணனோ (ரேடியோ பாலா) தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என ஒதுங்கிக் கொண்டார். ஆனால், திறமைசாலிகள் என்று கூறி பத்மாவையும், சுப்ராவையும் அரசியலில் முன்னிறுத்த வேண்டுமென மாணிக்காவிடம் பரிந்துரைத்தார்” என்கிறார் காந்தன்.

1974 பொதுத் தேர்தலில் முற்றிலும் புதுமுகங்கள்

அமரர் டத்தோ கு.பத்மநாபன்

மஇகா தேசியத் தலைவராக மாணிக்கா சந்தித்த முதல் பொதுத் தேர்தல் 1974-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலாகும். அந்தத் தேர்தலில் மஇகாவுக்கு நான்கு நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மாணிக்கா போர்ட் கிள்ளான் தொகுதியில் போட்டியிட்டார். 30 வயது சி.சுப்பிரமணியம் டாமன்சாராவில் போட்டியிட்டார். மாஸ் விமான நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சுப்ரா அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு டாமன்சாராவில் போட்டியிட்டார். ஏறத்தாழ 38-ஆம் வயதுகளில் இருந்த கட்டடக் கலைஞரான ச.சாமிவேலு, அரசாங்க சேவையில் இருந்து ராஜினாமா செய்த கு.பத்மநாபன் இருவரும் முறையே சுங்கை சிப்புட், தெலுக் கெமாங் தொகுதிகளில் போட்டியிட்டனர்.

அவர்கள் நால்வருமே வெற்றி பெற்றனர்.

இவர்களைத் தவிர சட்டமன்றத் தொகுதிகளிலும், வழக்கறிஞர்கள், பட்டதாரிகள் என பலர் புதுமுகங்களாக  அந்தப் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றனர்.

மாணிக்கா கொண்டு வந்த திட்டங்கள்

1973 பொருளாதார முன்னேற்றக் கருத்தரங்கின் வழி உருவான நீலப் புத்தகத் திட்டம் வரையறுத்தபடி திட்டங்களைச் செயல்படுத்தினார் மாணிக்கா. நேசா கூட்டுறவு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

மலேசியப் பங்குச் சந்தையில் இந்தியர்களும் பங்கு பெற மஇகா யூனிட் டிரஸ்ட் நிதிகள் தொடங்கப்பட்டன.

தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தை வகுத்து, சில தோட்டங்களில் அதனை முன்னின்று வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.

கல்வித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. சிரம்பானில் செயல்பட்ட ஐடிஎன் என்ற தொழில் நுட்பப் பயிற்சிக் கல்லூரியை வாங்கினார் மாணிக்கா. அதன்வழி இந்தியர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகள் வழங்கி அவர்கள் வேலைவாய்ப்புகள் பெறும் முன்னோடித் திட்டம் அப்போதே உருவாக்கப்பட்டது.

மஇகா உறுப்பினர்களுக்கான அங்கத்தினர் கட்டணத்தில் கூடுதலாக 1 ரிங்கிட் வசூலிக்கப்பட்டு அந்தப் பணம் மஇகா கல்வி நிதியாக உருவாக்கப்பட்டது. பல ஏழை மாணவர்களுக்கு இதன் மூலம் நிதி உதவிகள் வழங்கப்பட்டன. இன்று வெற்றிகரமாகச் செயல்படும் எம்ஐஇடியின் முன்னோடித் திட்டம்தான் மாணிக்கா கொண்டு வந்த இந்தத் திட்டம்.

கட்சியின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டன. கட்சி நிருவாகத்தில் ஒழுங்கு முறைகள் செயல்படுத்தப்பட்டன. கிளைகளுக்கான ‘பி’ பாரங்கள் வழங்குவது போன்ற நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த நடைமுறைகளும், மாணிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தங்களும் இன்றுவரை பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன என்பதுதான் மாணிக்காவின் தூரநோக்கு சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி.

1974-பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாணிக்கா மட்டுமே ஒரே அமைச்சர் என்ற நிலைமை இருந்தது.

1976-இல் செனட்டர் ஆதி.நாகப்பன் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்தியர்களின் அரசியல் பிரதிநிதித்துவ கட்சியாக – இரண்டு அமைச்சர்கள், இரண்டு துணையமைச்சர்கள் என மஇகா பீடு நடை போட்டுக் கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

நாடெங்கிலும், மஇகா சார்பில் நிலங்கள் வாங்கப்பட்டன. அரசாங்கத்திடம் மஇகா சார்பில் நிலம் கோரி விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மஇகாவுக்கென தலைமையகக் கட்டடம் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடனும் செயலாற்றினார் மாணிக்கா.

கட்சியின் துணைத் தலைவரான ஆதி.நாகப்பன் 1976 -இல் மே 9-ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு வயது 50-தான்! அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்த அவர், அமைச்சராகப் பதவியேற்ற அடுத்த சில மாதங்களில் அவர் காலமானது மாணிக்காவையும், கட்சியினரையும் ஒரு சேர உலுக்கியது.

அதைத் தொடர்ந்து ஆதி.நாகப்பன் வகித்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் போராட்டத்தில் கட்சியில் பிளவுகள், அணிகள் ஏற்பட்டன. மாணிக்காவின் திட்டங்களும், சமுதாய நோக்கங்களும் கட்சிப் போராட்டங்களால் திசைமாறின.

துன் சம்பந்தனின் இறுதிச் சடங்கின்போது தோபுவான் உமா சம்பந்தனுக்கு ஆறுதல் கூறும் மாணிக்கா – அருகில் டத்தோ பத்மா

இதற்கிடையில், 1979-ஆம் ஆண்டில் மே மாதம் 18-ஆம் தேதி துன் சம்பந்தன் தனது 60-வது வயதில் காலமானார்.

அதே ஆண்டில் அக்டோபர் 12-ஆம் தேதி மாணிக்கா தனது 53-வயதில் காலமானார். 1955-ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளுக்கு, இந்திய சமுதாயத்திலும், மஇகாவிலும் வலிமைமிக்க ஆளுமைகளாகத் திகழ்ந்த சம்பந்தன்-மாணிக்கா இரண்டு தலைவர்களும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து சில மாதங்கள் இடைவெளியில் காலமானது இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்புதான்.

“மாணிக்காவின் பதவிக் கால சேவைகளும், அவரின் தலைமைத்துவமும் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்? அவர் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளில் எதை நீங்கள் இறுதிவரைப் போற்றிப் பின்பற்றி வருகிறீர்கள்?” என்று காந்தனிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்:

“முதலாவது அவர் திட்டமிட்டபடி செயலாற்றினார். முதலில் அவர் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டு வகுத்துக் கொண்டு அதன் பின்னர் அந்தத் திட்டங்களை செயல்படுத்தினார். அவரின் எண்ணங்கள், நோக்கங்கள் எல்லாம் கட்சியையும், சமுதாயத்தையும் எப்படி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் முழுக்க முழுக்கப் பதிந்திருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடமைத் திட்டத்தை முன்னெடுத்தார். இந்தியர்களை வணிகத்திலும், கல்வியிலும் உயர்த்த விரும்பினார். எல்லா அம்சங்களிலும் தூரநோக்கு இலக்கோடு செயல்பட்டார். இதற்காகத்தான் அவர் என்றும் நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புகிறேன். அவரின் அந்தக் கனவுகள் நிறைவேறும் முன்னே அகால மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்தது. அவர் மரணமடையும் தறுவாயில் அவர் அரசியல், கட்சி நிலவரம், என பல முனைகளிலும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் எதிர்கொண்ட நிலையில்தான் மரணமடைந்தார்” என்கிறார் காந்தன்.

“அவரின் அறிவுரை என்று வரும்போது மக்களுக்கான பொதுச் சேவையில் பலனை எதிர்பார்த்து எதையும் செய்யாதீர். நீங்கள் உண்மையிலேயே சேவைகள் செய்தால் அதற்கான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்ற அவரின் அறிவுரையைத்தான் நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன். மற்றவர்களுக்கும் அறிவுரையாகக் கூற விரும்புகிறேன். அதன்படியே மாணிக்காவும் நடந்தார். நானும் இறுதிவரை அவரின் அந்த அறிவுரையைப் பின்பற்றினேன் என்பதில் பெருமையும் மனநிறைவும் கொள்கிறேன்” என மாணிக்கா குறித்த தனது நினைவுகளை நிறைவு செய்தார் காந்தன்.

-இரா.முத்தரசன்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal