கோலாலம்பூர் : “அரசியலில் கடின உழைப்பு, விசுவாசம் இரண்டும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இது அரசியலுக்கு மட்டுமல்ல எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் இரண்டும் இருந்தால் இயற்கையே நம்மைப் பாதுகாக்கும்” என டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்ற ம.இ.கா தித்திவங்சா தொகுதி ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியபோது சரவணன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மஇகாவில், இன்று துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் சரவணனின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது இதே தித்திவாங்சா மஇகா தொகுதிதான். அவர் தலைவராக இருக்கும் மஇகா கிளை இந்தத் தொகுதியில்தான் அமைந்திருக்கிறது.
மஇகா கிளைத் தலைவராக இருந்து மஇகா தித்திவாங்சா தொகுதியின் தலைவரான பின்னர் கூட்டரசுப் பிரதேச மாநில மஇகா தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர், தேசிய உதவித் தலைவர், தேசியத் துணைத் தலைவர் என கட்டம் கட்டமாக சரவணன் கட்சியில் அடைந்த அரசியல் வளர்ச்சிக்கு அடிப்படையில் உறுதுணையாக இருந்தது மஇகா தித்திவாங்சா தொகுதியின் ஆதரவுதான்.
ம.இ.கா தித்திவங்சா தொகுதியின் தலைவராக தற்போது சுந்தரம் பொறுப்பேற்றிருக்கிறார். அந்தத் தொகுதியின் 27-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மனிதவள அமைச்சருமான சரவணன் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து சரவணன் அவர்கள் தமது உரையில், ” காய்ச்ச மரம்தான் கல்லடி படும் என்பதுபோல பல அவதூறுகளையும், அர்த்தமற்ற பேச்சுகளையும் ம.இ.கா சந்தித்து வருகிறது. ஆனால் மடியில் கனம் இல்லையேல் வழியில் பயம் இல்லை என நாம் தொடர்ந்து நம் கடமையைச் செய்வோம். தலைவர் என்பது பதவி மட்டும் அல்ல, அது ஒரு தலைமைத்துவம். எதிர்காலம் என்பது நம் கையில் இல்லை. ஆனால் வரக்கூடிய எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் தற்போதைய ம.இ.கா தலைமைத்துவத்தில் நாங்கள் செயலாற்றி வருகிறோம். ம.இ.கா வால் தனித்து நின்று நம் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியும் எனும் சூழலை நாம் உருவாக்கி வருகிறோம். ஒரு தலைமைத்துவம் அதை விட்டுச் செல்லும்போது சமுதாயத்திற்கு நாம் இருந்ததற்கான அடையாளத்தையும் விட்டுச் செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசிய “வாழ்க்கை என்பது இரண்டு குடத்திற்கு மத்தியில். ஒன்று பனிக்குடம் உடைந்து வருகிறோம். பின் தண்ணீர்குடம் உடைத்து விடைபெறுகிறோம். ஆக இந்த இடைவெளியில் நாம் என்ன செய்தோம், எதை விட்டுச்செல்கிறோம் என்பதே கேள்வி” என்றும் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய தொகுதித் தலைவர் சுந்தரம், “தொகுதியின் நிரந்தரத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கடந்த காலம் தொட்டு இன்றுவரை தித்திவாங்சா தொகுதிக்கு ஆற்றிய, ஆற்றி வரும் சேவை அளப்பரியது” என நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
மஇகா கட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டு தடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சரவணனுக்கு தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் பிளவுபடாத ஆதரவை அளித்து, அவர் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் மஇகா தித்திவங்சா தொகுதியின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.