Home நாடு “சுப்ராவுடனான முதல் சந்திப்பு – காதல் – கல்யாணம் – குடும்பம்” – தீனா சுப்பிரமணியத்தின்...

“சுப்ராவுடனான முதல் சந்திப்பு – காதல் – கல்யாணம் – குடும்பம்” – தீனா சுப்பிரமணியத்தின் இனிய நினவுகள்

911
0
SHARE
Ad
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது துன் சாமிவேலு-டான்ஶ்ரீ சுப்ரா – தீனா சுப்பிரமணியம்

(இன்று அக்டோபர் 26-ஆம் தேதி மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான “மக்கள் தலைவர்” டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியத்தின் பிறந்த நாள். 1944-இல் பிறந்த அவர் இன்று தனது 77 -வது வயதைக் கடக்கிறார். அதனை முன்னிட்டு அவரை முதன் முதலாக சந்தித்துப் பழகிய அழகான தருணங்கள், நட்பாகத் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய இனிய அனுபவங்கள், அவருடனான திருமணம், மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை என பல சுவாரசிய விவரங்களை  செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடனான சந்திப்பில் விவரிக்கிறார் புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம்)

1973-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மஇகாவின் 6-வது தேசியத் தலைவராகப் பதவியேற்ற டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், கட்சியின் தலைமைச் செயலாளராக சி.சுப்பிரமணியம் என்ற மலாயாப் பல்கலைக் கழக முதுகலைப் பட்டதாரி ஒருவரை நியமிக்கிறேன் என அறிவித்தார்.

அப்போது சுப்ராவுக்கு 28 வயதுதான்! புதிதாகத் தொடக்கம் கண்டிருந்த மாஸ் விமான நிறுவனத்தில் ஓர் நிர்வாக அதிகாரியாக அப்போது பணியில் இருந்தார்.

#TamilSchoolmychoice

யார் இந்த சுப்பிரமணியம்? என மஇகா வட்டாரங்கள் எங்கும் பேச்சுகள் விவாதங்கள், எழுந்தன!

அதுவரையில் மஇகா தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராக சில ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சி.சுப்பிரமணியத்தின் நிர்வாகத் திறன், உழைப்பு, கல்வித் திறன், அரசியல் அறிவு ஆகியவற்றின் அடிப்படையிலே அவரை அந்த முக்கியப் பொறுப்புக்கு நியமித்தார் மாணிக்கா.

தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் சுப்ராவை வேட்பாளராக நிறுத்தினார் மாணிக்கா. தலைமைச் செயலாளராகப் பதவி வகித்துக் கொண்டு அரசாங்கத்திலும் நாடாளுமன்றச் செயலாளர், துணை அமைச்சர் என உயர்ந்தார் சுப்ரா.

அப்போது அவர் திருமணம் ஆகாத இளைஞர். பொதுவாக இந்தியத் தலைவர்கள் பதவிகளுக்கும், பொதுவாழ்க்கை வெளிச்சத்துக்கும் வரும்போது திருமணம் முடிந்து குடும்பத்தினராக இருப்பார்கள்.

அழகான கவர்ச்சியான தோற்றத்தோடும் சுப்ரா திகழ்ந்ததால்,  துணையமைச்சராக வலம் வந்த நாட்களில், பல தருணங்களில், எப்போது திருமணம், யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது போன்ற கேள்விகளும் ஆரூடங்களும் மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் எழுந்தன.

1977-ஆம் ஆண்டில் பிப்ரவரி 20-ஆம் தேதி சுப்ரா, துணையமைச்சராக இருந்தபோது, தீனா சுகந்தி என்பவரைத் திருமணம் புரிந்தார் சுப்ரா.

சுப்ரா-தீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன்

தலைநகர் டேவான் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் இந்து முறைப்படியான திருமண நிகழ்ச்சி, அதன் பின்னர் அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன் தலைமையுரையுடன், பல பிரமுகர்களும் கலந்து கொண்ட விருந்துபசரிப்பு நிகழ்ச்சி என கோலாகலமாக நடந்தேறியது சுப்ரா-தீனா திருமணம்.

முதன் முதலாகச் சந்தித்தபோது…

“எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் பயணத்தில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவரை நான் முதன் முதலாக சந்தித்தபோது அவர் மாஸ் நிறுவனத்தில், மனித வளப் பிரிவில் (Human Resources Department) ஒரு சாதாரண அதிகாரிதான். மலாயாப் பல்கலைக் கழகத்தில் டியூட்டராக – பயிற்சி விரிவுரையாளராக இருந்தார். வோக்ஸ் வோகன் (Volkswagen) என்ற சாதாரண காரைத்தான் பயன்படுத்தினார். எனவே, அவர் அரசியலில் இந்த அளவுக்கு உயர்வார், துணையமைச்சராவார் என்ற எண்ணத்துடன் நான் அவருடன் பழகவில்லை. அவரின் அழகான தோற்றம், தனிப்பட்ட குணம், நல்ல பண்பு போன்ற அம்சங்களுக்காகவே அவரை விரும்பினேன். அதைவிட முக்கியமாக தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி அவரும் என்னைப் பின்தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்” என தனது காதல் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் தீனா.

“அவரைக் கண்டவுடன் காதல் பிறந்தது என்று கூற முடியாது. மாஸ் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய அதே பிரிவில் நானும் பணியாற்றினேன். எனவே, சக ஊழியர்கள் என்ற முறையில் எங்களுக்கு இடையில் நட்பு பிறந்தது. நாளடைவில் எங்கள் பழக்கத்தினால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். மூன்றாண்டுகளாகத் தொடர்ந்த நட்பு-காதலாக மாறி திருமணமும் நடந்தேறியது” என்றார் தீனா.

சுப்ரா-தீனா குடும்ப வாழ்க்கையில் ஆனந்த், (டத்தோ) சுந்தர், பிரியா என்ற  மூன்று பிள்ளைச் செல்வங்கள் அவர்களுக்கு வாய்த்தனர்.

குடும்ப வாழ்க்கையில்…

அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மிக முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அம்சம் அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் ஒற்றுமையாக பல ஆண்டுகள் வாழ்ந்தனர் என்பதுதான்!

அதைவிட முக்கியமாக, அவர்களின் இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்கள். தீனாவின் குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்தினர். இருந்தாலும் அவர்களின் வேறுபாடுகள் அவர்களின் குடும்ப உறவையோ, ஒற்றுமையையோ எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

“அதற்கு முக்கியக் காரணம் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எனது கணவரின் பண்புதான். அவர் உலகளாவிய மனிதராக அனைத்தையும் – வேற்று மதங்களையும், வேற்று இனங்களையும் – ஒரே மனதுடன்  ஏற்றுக் கொள்ளும் மனித நேயப் பக்குவத்தைக் கொண்டிருந்தார். அதை என் குடும்பத்திலும் பொது வாழ்க்கையிலும் எப்போதும் அவர் கடைப் பிடித்தார். அவரின் குணாதிசயத்துக்கு ஏற்ப நானும் அவரின் குடும்பத்தினரை அரவணைத்து எங்களுடனேயே தங்கியிருக்கச் செய்தேன்” எனத் தெரிவித்தார் தீனா.

சுப்ரா குடும்பத்தினர் – இடமிருந்து டத்தோ சுந்தர், பிரியா, ஆனந்த், தீனா-சுப்ரா தம்பதியர்

“நான் திருமணம் புரிந்து கொண்ட பின்னர் அவரின் தாய் தந்தையர், இளைய சகோதரர், தங்கை என அவரின் அனைத்துக் குடும்பத்தினரும் எங்கள் வீட்டில் வசித்தனர். அதே போல, எனது தந்தையும் தாயாரும் எங்களுடன் வசித்தனர். இவர்களுக்கிடையில்தான் எங்களின் 3 பிள்ளைகளும் பிறந்து வளர்ந்தனர்” என்கிறார் தீனா.

கால ஓட்டத்தில் சுப்ரா, கட்சியில் உதவித் தலைவர், துணைத் தலைவர் என்றும் அரசாங்கத்தில் துணையமைச்சர் என்றும் அரசியலில் வளர்ச்சியடைந்தார்.  “இருந்தாலும் அரசியல் வெளிச்சமோ, பெரிய பதவிகளோ எங்களின் குடும்ப வாழ்க்கையில் எந்தவிதத் தாக்கத்தையும், வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. நாள்தோறும் அரசியல் கூட்டங்கள், கட்சிப் பணிகள், அரசாங்கப் பயணங்கள் என அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் குடும்பத்தை நன்கு கண்காணித்து, அவரின் அபிமானத்தையும், மரியாதையையும் பெற நானும் கடுமையாகப் பாடுபட்டேன். அவரின் தேவைகளையும் எனது பிள்ளைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ததோடு, இல்லத்தில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் கவனித்துக் கொண்டேன். இதனால் குடும்பத்தைப் பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாகப் பொதுவாழ்க்கையில் கவனம் செலுத்தவும், ஈடுபடவும் அவரால் முடிந்தது” என்று குறிப்பிட்டார் தீனா.

எல்லாவற்றையும் சரிசமமாக அனுபவித்தவர் சுப்ரா

துன் மூசா ஹீத்தாம் தம்பதியருடன் சுப்ரா தம்பதியர்

தன் கணவரின் மற்ற சில வித்தியாச குணநலன்களையும் அவரின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்தார் தீனா.

“எனது கணவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரி சமமாக (balanced) பார்த்தார். அனுபவித்து வாழ்ந்தார். ஒன்றுக்காக இன்னொன்றை அவர் விட்டுக் கொடுத்ததில்லை. அவர் மிக முக்கியமாக நட்புக்கும் தனது நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அவரைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். வீட்டிலும் அடிக்கடி நண்பர்களை அழைத்து உணவருந்துவார். கலந்துரையாடுவார். எந்த நண்பர் அழைத்தாலும், சாதாரண நபராக இருந்தாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று விசேஷங்களில் கலந்து கொள்வார். விருந்துபசரிப்புகளில் பங்கெடுப்பார். அவரின் நெருங்கிய நண்பர்கள்தான் அவருக்கு அரசியலிலும் தீவிர ஆதரவாளர்களாகத் துணை நின்றார்கள் என்பதுதான் அவரின் இன்னொரு சிறப்பு குணம். அரசியலிலும் பொதுவாழ்விலும் தீவிரமாக ஈடுபட்ட காலகட்டத்திலும் தான் வாழ்க்கையில் இரசித்த, விரும்பிய அம்சங்களை அவர் அனுபவித்தார் என்பது அவரின் இன்னொரு சிறப்பு குணம். எல்லாப் பணிகளுக்கும் இடையிலும் பேட்மிண்டன் விளையாடுவார். தனக்குப் பிடித்த காற்பந்து, டென்னிஸ் போட்டிகளை நேரம் கிடைக்கும்போது தவறாமல் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பார். ஓய்வெடுக்கப் பயணங்கள் செல்வார். சில சமயங்களில் நல்ல படங்கள் என்றால் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பார். நல்ல உணவுகள் எங்கு கிடைத்தாலும் தேடிச் சென்று சாப்பிடுவார். விரும்பிய நூல்கள் படிப்பார். அதே சமயம் எல்லா வேளைகளிலும் எல்லா விஷயங்களிலும் நண்பர்களுடன் இணைந்தே இருப்பார். எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் ஒன்று குடும்பத்தினருடன் இருப்பார் அல்லது நண்பர்களுடன் இருப்பார். அந்த அளவுக்கு அவர் நட்புக்கு முக்கியத்துவம் தந்தவர். வீட்டிற்கு யாராவது டுரியான் பழம் அனுப்பினால் கூட, அதைச் சாப்பிடும் முன்னர் தனது நண்பர்களில் யாருக்கு டுரியான் பிடிக்கும் என்பதைத் தெரிந்து, அவர்களை அழைத்து அவர்களோடு சாப்பிடுவார். நண்பர்கள் யாராவது விருந்துக்கு அழைத்தால், தன்னோடு இன்னும் சில நண்பர்களையும் கூடவே அழைத்துச் செல்வார். அவரின் அரசியல் ஆதரவாளர்கள் நெருங்கிய நண்பர்களாக நாளடைவில் மாறினார்கள். வெறும் நட்புக்காக அவருடன் பழகியவர்கள் நாளடைவில் அவருக்காக அரசியலில் ஈடுபட்டார்கள். போராடினார்கள். இது அவருக்கு வாய்த்த – அவரே கட்டமைத்துக் கொண்ட – அவரின் வாழ்க்கை முறை. இப்படியாக எல்லா அம்சங்களிலும் அனைத்திற்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்து, வாழ்க்கையில் தனக்குப் பிடித்தவற்றை இரசித்து அனுபவித்து வாழ்ந்தவர் எனது கணவர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு” என டான்ஸ்ரீ சுப்ரா குறித்த நினைவுகளை நிறைவு செய்தார் புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம்.

-இரா.முத்தரசன்