Home நாடு மலாக்கா தேர்தல் : பக்காத்தான் வழக்கால் நிறுத்தப்படுமா?

மலாக்கா தேர்தல் : பக்காத்தான் வழக்கால் நிறுத்தப்படுமா?

433
0
SHARE
Ad

மலாக்கா : மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தேதி வரையில் எல்லாத் தொகுதிகளிலும் எல்லாக் கட்சிகளும் மலாக்கா தேர்தல் களத்தில் சந்திக்க மும்முரமாக வியூகங்கள் அமைத்துத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது மலாக்கா மாநிலம்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நிறுத்தப்பட வேண்டும், காரணம் சட்டமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் செல்லாது என்றும் என வழக்கு ஒன்றை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார் மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் அட்லி சஹாரி.

2018-இல் மலாக்கா மாநிலத்தை பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கைப்பற்றியபோது, அம்மாநில முதல்வராகப் பதவி வகித்தவர் அட்லி சஹாரி.

அட்லி சஹாரி வழக்கால் மலாக்கா சட்டமன்றத் தேர்தல் நிறுத்தப்படுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மலாக்கா மாநில சட்டமன்றக் கலைப்பு செல்லாது என்று தீர்ப்பு வழங்கக் கோரி புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

மேற்கண்ட சட்டமன்றக் கலைப்பு குறித்த Judicial Review என்ற சீராய்வு மனு விசாரிக்கப்படவும் அவர் முன் அனுமதியை இந்த வழக்கில் கோரியுள்ளார்.

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது முறையானதல்ல, சட்டவிரோதமானது என நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

மலாக்கா மாநிலத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் மாநில அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மலாக்காவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி  அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

பெரும்பான்மையை இழந்து விட்ட பின்னரே மாநில முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி, மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநருக்குப் பரிந்துரைத்தார்.

மாநில ஆளுநர் முகமட் அலியும் அதற்கேற்ப சட்டமன்றத்தைக் கலைத்தார். தொடர்ந்து சுலைமான் முகமட் அலியையே காபந்து முதலமைச்சராக நியமித்தார் ஆளுநர்.

பெரும்பான்மையை இழந்து விட்ட சுலைமான் முகமட் அலி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, புதியதோர் அரசாங்கத்தை அமைக்க வழிவிட்டிருக்க வேண்டும் என சில சட்ட அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

அப்படி செய்யாமல் அக்டோபர் 3, 4-ஆம் தேதிகளிலேயே பெரும்பான்மையை இழந்துவிட்ட முதலமைச்சர் ஒருவர் அதன் பின்னர் சட்டமன்றத்தைக் கலைக்க முடியுமா?

அதற்கு மாநில ஆளுநர் ஒப்புக் கொண்டது சட்ட ரீதியாக சரியா? என்பது போன்ற கேள்விகளை நிர்ணயிக்கவே அட்லி சஹாரி மேற்கண்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார்.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்றும் அட்லி சஹாரி தனது வழக்கு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கோவிட்-19 தொற்று மலாக்கா மாநிலத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதாலும், பொருளாதாரத்தை முடக்கியுள்ளதாலும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலை இந்தத் தருணத்தில் நடத்துவது மக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதன் காரணமாகவும் மலாக்கா சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு நடத்தப்படக் கூடாது என்றும் அட்லி சஹாரி தனது வழக்கில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முடிவு தெரிந்த பின்னரே மலாக்கா சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நவம்பர் 20-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுமா என்பது தெரிய வரும்.

வழக்கைத் தொடுத்திருந்தாலும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தங்களுக்கிடையிலான தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.

இன்னொரு புறத்தில் பெர்சாத்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி இல்லை என அம்னோ அறிவித்து விட்டது.

அம்னோவின் அறிவிப்பைத் தொடர்ந்து மலாக்காவின் 28 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் போட்டியிடும் என அதன் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.

இறுதி நேரத்தில் அம்னோவும் பெரிக்காத்தான் கூட்டணியும் ஒன்றுபட்டு இணையுமா அல்லது எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளுமா என்பது நவம்பர் 8-ஆம் தேதி தெரிந்து விடும். அந்த தேதியில்தான் மலாக்கா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்குத் தலைமையேற்கப் போகிறவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆவார். சிகிச்சைக்காக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி ஜெர்மனிக்குச் செல்லவிருக்கும் நிலையில் அம்னோ-தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்கு நஜிப் தலைமையேற்பது இன்னொரு அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

மலாக்கா மாநிலத்தில் தேசிய முன்னணி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் அது நஜிப்புக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படும். அவரின் அரசியல் செல்வாக்கும் உயரும்.

-இரா.முத்தரசன்