கோலாலம்பூர், ஏப்ரல் 23- கட்சியின் சட்டவிதிகளை மீறி சட்டமன்ற – நாடாளுமன்றத் தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் 61 பேர் அம்னோவில் இருந்து நீக்கப்படுவர் என்று அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது.
நீக்கப்படுபவர்களில் அம்னோ மகளிர் அணி துணைத் தலைவி டத்தோ கமாலியா மிகவும் முக்கியமானவர்.
கட்சியில் இருக்கும் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டால் அவர்கள் 20.10 விதிமுறைக்கு ஏற்ப கட்சியிலிருந்து நீக்கபடுப்படுவார் என்று கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ தெங்கு அகமட் ரித்தாவுடின் கூறினார்.
ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் என்ற முறையில் தான் கையெழுத்திட்ட கடிதம் நேற்று அவர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் வேட்புமனு தாக்கலின்போது வேட்புமனு பாரங்களை சமர்ப்பிக்காத மூவரிடம் காரணம் கோரும் கடிதமும் அனுப்பி வைக்கபட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
டத்தோ கமாலியா இப்ராஹிம், டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் ஷரிப், டத்தோ ஹாஜி சுஹாய்மி, ஹனாப்பியா முகமட், கசாலி பின் சலோமோன், சுக்ரி பின் அப்துல் சமாட், மொக்தார் பின் சலாவுடின், யாக்கோப் பின் அமாட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டவர் பட்டியலில் அடங்குவர்.