Home நாடு “தீபத் திருநாளை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்

“தீபத் திருநாளை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்

559
0
SHARE
Ad

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

தீபத் திருநாளை ஒற்றுமையுடனும், ஒருமிக்க கருத்துடனும் கொண்டாடுவோம்.

நம் மனங்களில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்பி, நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீபாவளி என்னும் தீபத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தீபத் திருநாளை ஒற்றுமையுடனும், ஒருமிக்க கருத்துடனும் கொண்டாடுவோம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் விடுத்துள்ள தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பலதரப்பட்ட மனிதர்கள் தங்களது எண்ணங்களில் பலவிதமான நோக்கங்களைக் கொண்டிருக்கலாம். இந்தத் தீபாவளி நாளில் தங்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கி செழிப்பான வாழ்வு வாழ்வதற்காகவும், தங்களது வாழ்க்கை, தீபங்கள் போல் ஒளி வேண்டும் என்பதற்காகவும் தீபங்களை ஏற்றி இல்லங்களில் இறைவனை வணங்குகிறோம்.

#TamilSchoolmychoice

இன்றுள்ள சூழ்நிலையில் நாம் கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோயின் தாக்கத்தைத் தாண்டி வந்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில் இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பல சவால்களை எதிர்கொண்டிருந்த நேரத்தில், மஇகா அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வந்தது. மஇகா இந்த உதவிகளை எந்தவித பாகுபாடும் இன்றி, இந்தியச் சமுதாயத்தின் உள்ள ஒவ்வொரின் வாழ்வும் அவசியம் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே உதவிகளைப் புரிந்தது என்றார் விக்னேஸ்வரன்.

இனிவரும் காலத்திலும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும் ஒருமித்தக் கருத்தோடும் வாழ்ந்தால் மட்டுமே, இந்நாட்டில் நமக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் நாம் பெற முடியும். அதற்கு நமக்குத் தேவையானது வலுவான ஒற்றுமையே ஆகும்.

தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் உண்டு களித்துக் கொண்டிருக்கும் வேளையில், நமது பிள்ளைகள் பட்டாசுகளை வெடித்து விளையாடுகின்றபோது, அவர்களைப் பாதுகாப்போடு கண்காணிக்குமாறு இந்த வேளையில் பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளார் விக்னேஸ்வரன்.

இவ்வாண்டு தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதேவேளையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்தோடும் பொய்மைகளை அழித்து – வாய்மைகளை செழிக்க வைப்போம் என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.