Home நாடு “புதிய நடைமுறைகளோடும், அக்கம் பக்கத்தாருக்கு உதவியும் கொண்டாடுவோம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

“புதிய நடைமுறைகளோடும், அக்கம் பக்கத்தாருக்கு உதவியும் கொண்டாடுவோம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

486
0
SHARE
Ad

மனிதவள அமைச்சர், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

பெருநாள்கள் என்றாலே ஒன்றாகக் கூடி, உறவுகளோடு கொண்டாடி மகிழ்வதுதான். அதுவும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் “திறந்த இல்ல உபசரிப்பில்” அனைவரும் ஒன்று கூடி உல்லாசமாய்க் கொண்டாடி மகிழ்ந்து வந்தோம்.

ஆனால் கடந்த வருடம் கொரோனா எனும் அரக்கனால் நம்மால் இணைந்து கொண்டாட முடியவில்லை. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு மேலாக நம்மை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா முற்றிலும் அழியவில்லை என்றாலும், பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பயனாக இந்த வருடம் தீபாவளியை உற்றார், உறவினர் நண்பர்களோடு இணைந்து கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்று முற்றிலும் நம்மைவிட்டு அழியவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய நடைமுறைகளில் நாம் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்.

#TamilSchoolmychoice

குடும்பத்தினர்தான் என்றாலும் பலரும் கூடியிருக்கும் வேளையில் முகக்கவசம் அணிவது, இடைவெளி விட்டு இருப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற செயல்களைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீயவை அழிந்து நன்மை தரும் ஒரு பண்டிகைதான் தீபாவளி. அதுவே நமது கவனக்குறைவால் பிறருக்கும் தீங்கு விளைவிப்பதாக மாறக் கூடாது.

கொண்டாடி மகிழ்வோம்
கொரோனாவை மறவோம்
கூடிக் களிப்போம்
கூடல் இடைவெளி தவறோம்

அதே வேளையில் கொரோனாவால் உலகளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த வருடம் விட்டதையும் சேர்த்து இந்த வருடம் கொண்டாடித் தீர்த்து விடுவது எனும் எண்ணம் வேண்டாம்.

ஆடம்பரமாக இல்லாமல் சிக்கனமாகக் கொண்டாடுவோம். குறிப்பாகக் கடன் வாங்கிக் கொண்டாடும் பழக்கம் வேண்டாம். இருப்பதைக் கொண்டு நிறைவடையும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். காலம் இப்படியே இருக்கப் போவதில்லை. நிச்சயம் மாறும் எனும் நம்பிக்கையோடு கொண்டாடுவோம்.

பலருக்கும் வேலையில்லாத சூழ்நிலை என்பதால் கொஞ்சம் கருணையோடும் நடந்து கொள்வோம். அக்கம் பக்கத்தாரின் நிலையறிந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி எனும் சூழல் அமையச் செய்வோம்.

மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

உறவுகள் இணைந்து
உள்ளங்கள் மகிழ்ந்து
இனிப்போடு கொண்டாடுவோம்
இடைவெளியை மறவோம்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal