சென்னை : தமிழ் திரையுலகிலும், தென்னிந்தியத் திரையுலகிலும் பல படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிப் புகழ் பெற்ற சிவசங்கர் காலமானார்! இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதாராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்த சிவசங்கர் மாரடைப்பால் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கரின் மனைவியும் மூத்த மகனும் கூட கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவசங்கருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது என்றும் அதற்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் இருந்தது என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மகன் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, திரையுலகப் பிரமுகர்கள் சிலர் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி, சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.
பல படங்களில் நகைச்சுவை கலந்த சிறந்த இயல்பான நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார். அவரின் சொந்த வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில்தான் அஜித் நடித்த “வரலாறு” படம் உருவானதாக தகவல்கள் அப்போது வெளியிடப்பட்டன. அந்தப் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
வரலாறு படத்தில் அஜித்திற்கு நடனப் பயிற்சியையும் சிவசங்கர் அளித்தார்.
சந்தானம் கதாநாயகனாக நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் சிவசங்கர் நடித்திருந்தார்.
திருடா திருடி படத்தில் வரும் மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் அவர்தான். அதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார்.
800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.