புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழகுவதற்கு முன்பாக இந்த வழக்கில் தனக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவற்றை ஏற்று வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நஜிப் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை விசாரித்தது.
அந்த மனு போதிய வலுவுடன் இல்லை எனக் கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இன்று நஜிப் துன் ரசாக் நீதிமன்றம் வரவில்லை. அவரின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவும் நீதிமன்றம் வரவில்லை.
இதற்காகவும் மேல்முறையீட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இது காப்பிக் கடை அல்ல, நீதிமன்றம் என்றும் நஜிப் சார்பில் வாதாடிய ஹார்விண்டர் சிங்கை அவர்கள் எச்சரித்தனர்.
எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விசாரணை முடிவில் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் மொத்தம் 210 மில்லியன் அபராதமும் விதித்தது.
எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பில் 42 மில்லியன் நிதியை முறைகேடாகக் கையாண்டதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
நாளை தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு எதிரான எஸ்.ஆர். சி. இண்டர்நேஷனல்– 1எம்டிபி தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை முழுமையாக இரத்து செய்து அவரை விடுதலை செய்யலாம்.
அல்லது நஜிப் மீதான தண்டனையை மறுஉறுதிப்படுத்தலாம்.
நஜிப்புக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை குறைப்பதற்கான முடிவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கலாம். அதே வேளையில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் அபராதத் தொகையை குறைத்தும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கலாம்.
நாளை நஜிப் மீதான சிறைத் தண்டனை மறுஉறுதிப்படுத்தப்பட்டால் அவர் நாளைக்கே சிறை செல்லும் நிலைமையும் ஏற்படலாம்.