Home நாடு நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?

நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?

995
0
SHARE
Ad

(எதிர்வரும் டிசம்பர் 8-ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு  வழக்கில்  தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. அதற்கு முன்பாக இந்த வழக்கில் தனக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவற்றை ஏற்று வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நஜிப் சமர்ப்பித்திருக்கும் மனுவை நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது. அதுகுறித்து தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு எதிரான எஸ்.ஆர். சி. இண்டர்நேஷனல்– 1எம்டிபி தொடர்பான வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு எதிர்வரும்  டிசம்பர் 8 ஆம் தேதி வழங்கப்படும் என அந்த நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், அந்த வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தாம் விரும்புவதாகவும் நஜிப் துன் ரசாக் மனு செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அந்த மனுவை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக டிசம்பர் 7 ஆம் தேதி செவிமடுக்கவிருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தேதி நிர்ணயித்திருக்கிறது. இதனா நஜிப் தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவும்  அரசாங்கத் தரப்பு  வழக்கறிஞராக செயல்படும் டத்தோ வி. சிதம்பரமும்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய திருப்பத்தினால்  நஜிப் வழக்கில் தீர்ப்பு மாற்றப்படுமா? வழக்கின் திசை மாறுமா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த வழக்கை அணுக்கமாக கண்காணித்து வரும் சில வழக்கறிஞர்கள் வழங்கிய கருத்துகள் அடிப்படையில் அடுத்து நஜிப் வழக்கில் என்ன நடக்கலாம் என்பது குறித்து  ஆராய்வோம்.

12 வருட சிறைத்தண்டனையும் 210 மில்லியன் அபராதமும்

எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விசாரணை முடிவில் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் மொத்தம் 210 மில்லியன் அபராதமும் விதித்தது.

எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பில் 42 மில்லியன் நிதியை முறைகேடாகக் கையாண்டதற்காக  அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த தீர்ப்பை எதிர்த்து  நஜிப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சமர்ப்பித்திருந்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை டிசம்பர் 8ஆம் தேதி வழங்குவதாக அறிவித்தது.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விடுத்த அறிக்கை ஒன்றில் சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து 15.4 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்தப் பணம் டத்தோ டாக்டர் தவுபிக் அய்மான் என்பவர் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிசின் கணவர்தான் இந்த டாக்டர் தவுபிக் அய்மான்.

இதைத் தவிர்த்து 1எம்பிபி  தொடர்புடைய முறைகேடான பணம் செத்தி அக்தார் அசிஸ் குடும்பத்தினருக்கு  சென்றது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது.

1எம்பிபி விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஜோலோ என அழைக்கப்படும் லோ தெக் ஜோ மில்லியன் கணக்கான பணத்தை செத்தி அக்தார்  குடும்பத்திற்கு வழங்கியதாகவும் இணைய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தப் புதிய விவரங்களைத் தொடர்ந்து இவை தங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் செத்தி அக்தார் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவதும் தங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா  கூறியிருந்தார்.

அப்படி எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் செத்தி அக்தாரை சாட்சியாக விசாரித்திருப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் இவற்றை நஜிப்பின் மேல்முறையீட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் என அவரின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த மனு டிசம்பர் 7 விசாரிக்கப்படவிருக்கிறது.

இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுமா?

பொதுவாக மேல்முறையீடு என்று வரும்போது, புதிய ஆதாரங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால்,  உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அந்த புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தால்  மேல்முறையீட்டு நீதிமன்றம் அவற்றை பரிசீலிக்கும். எதிர்வரும் 7 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப்பின் புதிய ஆதாரம் மீதான மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்யலாம்.

அதன் பின்னர் அடுத்த நாள் டிசம்பர் 8 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கலாம்.

ஆனால்,  நஜிப்பின் புதிய ஆதாரங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால்,  அந்த ஆதாரங்களை மேல்முறையீட்டு ஆவணங்களுடன் சேர்த்து  மீண்டும் பரிசீலிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

அதுமட்டுமன்றி நடப்பிலுள்ள சட்டங்களின் படி தேவைப்பட்டால் ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை விசாரிக்கும்போது, சாட்சிகளையும் நேரடியாக அழைத்து விசாரிக்கலாம்.

இந்த சட்ட அடிப்படையில் டிசம்பர் 7ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் எத்தகைய முடிவை நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீது எடுக்கப்போகின்றது என்பதைப் பொறுத்தே எஸ்.ஆர். சி. இன்டர் நேஷனல்-நஜிப் மீதான மேல்முறையீட்டுக்கான  தீர்ப்பு எப்படி அமையும் என்பதை நாம் கணிக்க முடியும்.

நஜிப் மனுவை எதிர்க்கத் தயாராகும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள்

இதற்கிடையில், நஜிப் செய்திருக்கும் புதிய மனு தீர்ப்பை தாமதப்படுத்தும் செயல் என்றும் அவரின் மனுவை அரசு தரப்பு எதிர்க்கும் என்றும் சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.