Home நாடு செல்லியல் பார்வை : சரவாக் தேர்தல்! மலேசிய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?

செல்லியல் பார்வை : சரவாக் தேர்தல்! மலேசிய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?

867
0
SHARE
Ad

(இன்று சனிக்கிழமை டிசம்பர் 18-ஆம் தேதி சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது. அவ்வளவாகப் பரபரப்பு இல்லாத பிரச்சாரங்கள் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம். மலேசிய அரசியலில் இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றங்களை ஏற்படுத்துமா? சரவாக் தேர்தலின் சில முக்கிய அரசியல் அம்சங்களை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா. முத்தரசன்)

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி எத்தனை தொகுதிகளைப் பெறும் என ஆர்வத்துடன் காத்திருந்தோம்.

ஆனால், இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெறும் சரவாக் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து யாரும் – குறிப்பாக மேற்கு மலேசியாவாசிகள் ஆர்வம் காட்டவில்லை.

#TamilSchoolmychoice

காரணம், எல்லாக் கணிப்புகளும் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற ஆரூடத்தையே முன்வைக்கின்றன. எத்தனைத் தொகுதிகளை அவர்கள் பெறப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி!

எந்தவித பரபரப்போ ஆரவாரமோ இன்றி சரவாக் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

இதற்குக் காரணம் கோவிட்–19 தொற்றை முன்னிட்டு சுகாதார அமைச்சும் தேர்தல் ஆணையமும்  அறிமுகப்படுத்தியிருக்கும் கடுமையான நிபந்தனைகளாக இருக்கலாம். அதைத் தவிர்த்து  வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்!

2 கூட்டணிகள் ஒதுங்கிக் கொண்டது காரணமா?

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. அதன் காரணமாக மக்களிடையே ஓர் எதிர்பார்ப்பும் ஆர்வமும் இயல்பாகவே இருந்தது.

ஆனால், சரவாக் சட்டமன்றத் தேர்தலில்  தேசிய முன்னணியும், பெரிக்காத்தான் நேஷனலும் களமிறங்கவில்லை. சரவாக் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜிபிஎஸ் கூட்டணிக்குத்தான் எங்களின் ஆதரவு என இரண்டு கூட்டணிகளும் அறிவித்து விட்டன.

ஏற்கெனவே,  சரவாக் மாநில தேசிய முன்னணியில் அங்கம் பெற்றிருந்த நான்கு உள்ளூர் மாநிலக் கட்சிகள், தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி தங்களுக்குள் அமைத்துக் கொண்ட கூட்டணிதான் கபோங்கான் பார்ட்டி சரவாக் என்னும் ஜிபிஎஸ் கூட்டணி. தற்போது 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜிபிஎஸ் கூட்டணி, மத்திய அரசாங்கத்திற்கு  தனது ஆதரவை வழங்கி வருகிறது.

அதன் மூலம் சில அமைச்சர், துணை அமைச்சர் பொறுப்புகளையும் பெற்றிருக்கிறது.

எனவேதான் சரவாக் சட்டமன்றத் தேர்தலில் தலையிடாமல், ஜிபிஎஸ் கூட்டணிக்கு ஆதரவாக தேசிய முன்னணி ஒதுங்கிக் கொண்டுவிட்டது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் போட்டியிடவில்லை

மொஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் கூட்டணியும் சரவாக்கில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் சரவாக்கில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

மொஹிடின் யாசின் பிரதமராக வருவதற்கும், தொடர்ந்து ஆட்சி செய்வதற்கும்  துணை நின்றது இந்த ஜிபிஎஸ் கூட்டணிதான்.

அதற்கு நன்றிக் கடனாகவே சரவாக் தேர்தலில் ஜிபி.எஸ். கூட்டணியோடு மோதுவதை பெரிக்காத்தான் கூட்டணி தவிர்த்துவிட்டது. 15-வது பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் ஜிபிஎஸ் கூட்டணி தங்களுக்கு ஆதரவு தரும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக மொஹிதின் யாசினே அண்மையில் அறிவித்திருந்தார்.

முஹிடின் அரசாங்கமும், தற்போது உள்ள  இஸ்மாயில் சப்ரி அரசாங்கமும்  ஆட்சியில் நீடிக்க முடிந்ததற்குக் காரணம் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவுதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்கத்தான் ஹராப்பான் மட்டுமே ஜிபிஎஸ் கூட்டணியோடு மோதல்

தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் என்ற இரண்டு கூட்டணிகளும் சரவாக் தேர்தலிலிருந்து  ஒதுங்கிக் கொள்ள  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மட்டுமே சரவாக் தேர்தலில்  ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடுகின்றது.

அதனால்தான் இந்த முறை சரவாக் தேர்தலில் எந்தவிதப் பரபரப்பும் காணப்படவில்லை

பக்கத்தான் கூட எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. மொத்தமுள்ள 82 தொகுதிகளில் தேர்ந்தெடுத்த 62 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றது.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் பிகேஆர் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பக்காத்தானின் மற்றொரு உறுப்பியக் கட்சியான ஜசெக 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பார்ட்டி அமானா நெகாரா 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வெற்றி வாய்ப்பு அதிகமில்லாத தொகுதிகளில் தங்களின் ஆற்றலையும் நேரத்தையும் செலவிட விரும்பவில்லை என பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

பக்கத்தான் கூட்டணி கூட, மலாக்கா போன்று, அவ்வளவு ஆர்வத்துடன்-வேகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. காரணம் இந்த தேர்தலில் ஜிபிஎஸ் கூட்டணியை வெல்வது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

சரவாக் மாநிலத்தின் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சி பார்ட்டி சரவாக் பெர்சாத்து என்னும் பிஎஸ்பி கட்சி. இதன் தலைவர் டத்தோஸ்ரீ வோங் சூன் கோ (படம்).

இந்தக் கட்சி மொத்தமுள்ள 82 சட்டமன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எங்களின் சார்பிலான முதலமைச்சர் ஒரு டாயாக் இனத்தவராக இருப்பார் என்ற அறிவிப்பையும் செய்திருக்கிறது பிஎஸ்பி.

பரபரப்பே இல்லாததற்குக் காரணம் என்ன?

பக்கத்தான் கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்ல முடியும் என்பதையும் மற்றோர் உள்ளூர் கட்சியான பிஎஸ்பி எத்தனை தொகுதிகளை வெல்ல முடியும் என்பதையும்  காணத்தான் அரசியல் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

மற்றபடி வெற்றி என்பது ஜிபிஎஸ் வசம் என்னும் காரணத்தால்தான் பரபரப்புகள் இந்தத் தேர்தலில் குறைந்து விட்டன.

சரவாக் தேர்தலில் பரபரப்பு குறைந்திருப்பதற்கு இன்னொரு காரணம் அடுத்த சில மாதங்களிலோ ஒரு வருடத்திலோ 15-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என்பதும் அதிலும் கணிசமான தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி வெல்லக்கூடும் என்பதும்தான்.

தற்போது சரவாக்கின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளை தன் வசம் வைத்திருக்கிறது ஜிபிஎஸ்.

அடுத்த 15-ஆவது பொதுத் தேர்தலிலும் ஏறத்தாழ இதே எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி கைப்பற்றும் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் ஆரூடம்.

15ஆவது பொதுத் தேர்தலில் எந்த கூட்டணியும் தனித்து நின்று பெரும்பான்மை தொகுதிகளை வெல்ல முடியாமல் கூட்டணி அரசாங்கமே அமைக்க முடியும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய, மத்திய அரசாங்கத்தை அமைப்பதில், தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் நேஷனலும் இப்போதே ஜிபிஎஸ் கூட்டணியிடம் மறைமுகமாக  வைத்திருக்கும்  கோரிக்கைதான் சரவாக் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் அரசியல் வியூகம்.

தப்பித் தவறி தாங்களும்  ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு கணிசமான  தொகுதிகளை 15-வது பொதுத் தேர்தலில் வென்றுவிட்டால்  அப்போதும் ஆட்சி அமைக்க ஜிபிஎஸ் கூட்டணியின் ஒத்துழைப்பு தேவைப்படலாம் என்பது பக்கத்தானின்  எண்ணம்போல் தெரிகிறது.

அதனால்தான்  சரவாக் தேர்தலில் போட்டியிட்டாலும் ஜிபிஎஸ் கூட்டணி கட்சிகளை கடுமையான சாடும் போக்கை இந்த முறை பக்கத்தான் கொண்டிருக்கவில்லை.

ஜிபிஎஸ் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்பதற்கான காரணங்கள் உண்டு.

சரவாக் மாநிலத்தில்  உள்ளூர் கட்சிகளுக்கே ஆதரவு தரவேண்டும் என்ற மனப்போக்கு வாக்காளர்களிடையே பரவி வருகிறது.

மேற்கு மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள் சரவாக் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற வாதங்களும்  சரவாக் அரசியல் தலைவர்களால் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன.

எனவே, இத்தகைய பிரச்சார அலைகளினால்தான் ஜிபிஎஸ் கூட்டணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தல் இன்று முடிந்ததும், 15ஆவது பொதுத் தேர்தலில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி கைப்பற்றும் என்ற ஆரூடங்கள் தொடங்கிவிடும்.

அதுவே மலேசிய அரசியலில்  மிக முக்கியமான அம்சமாகும். காரணம் ஜிபிஎஸ் கூட்டணி 15ஆவது பொதுத் தேர்தலில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறார்கள். மத்திய அரசாங்கம் அமைப்பதில் எந்தக் கூட்டணியை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதை வைத்துத்தான் அடுத்து மத்திய அரசாங்கத்தை அமைக்கப் போகும் கூட்டணி எது என்பது முடிவாகும்.

-இரா.முத்தரசன்