Home நாடு கவிஞர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி நினைவலைகள்!

கவிஞர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி நினைவலைகள்!

1248
0
SHARE
Ad
பொன் கோகிலம், மறைந்த தன் தந்தையார் அமரர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி அவர்களுடன்

(தன் வாழ்நாளில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டி.எஸ்.பொன்னுசாமி. தீப்பொறி பறக்கும் தன் கவிதைகளின் தொகுப்பு நூலுக்கு “தீப்பொறி” என்றே பெயர் வைத்ததால், அவருக்கும் தீப்பொறி என்ற  சொற்றொடரே அடையாளப் பெயரானது. தீப்பொறிக் கவிஞரின் புதல்வி பொன் கோகிலமும் தந்தையின் வழியில் தன் பாணியில் மலேசியாவில் இலக்கியப் பணியாற்றி வருகிறார். தன் தந்தை குறித்து பொன் கோகிலம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 22) தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சுவாரசியமான பதிவை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்)

அப்பாவின் பிறந்த நாள் இன்று.

தீப்பொறி கவிஞராய் பல கவிதை மாணவர்களை மலேசியாவில் உருவாக்கியவர்.

#TamilSchoolmychoice

பெரியார் கொள்கையில் திடமாய் வாழ்ந்தவர்.

தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கோம்பாக் ஆறு எனும் இவரது கவிதை நூல் பாட நூலாக உள்ளது.

தீப்பொறி எனும் இவரது முதல் நூல் மூன்று பதிப்புகளாக வெளிவந்துள்ளன. அந்நூலுக்கு மலேசியத் திராவிடக் கழகம் 1985-ஆம் ஆண்டில் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது.

அனலான பேச்சும் கனல் தரும் கவிதைகள் மட்டும்தான் சமுதாயத்திற்கு தெரிந்ததாக உள்ளது. பழகியவருக்குத் தெரியும் அவர் இனிமையானவர. மிகுந்த நகைச்சுவைத் தன்மை உடையவர்.

தமிழ் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்துபவர். அவ்வாறே என்னையும் பழக்கியவர்.

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் பல சமய நிகழ்ச்சிகள் நடக்கும் போது, என்னைக் கலந்து கொள்ளாதே எனத் தடுத்தது இல்லை. உன் அறிவுக்கு எது சரியோ அதைச் செய் என்பதே அவரின் வாசகம். ஆனால் மூட நம்பிக்கைகளை முற்றாக எதிர்ப்பவர். எது மூட நம்பிக்கை என எங்களுக்கு அறிவுறுத்தி வளர்த்தவர்.

இன்றுவரை என் பிறப்பு பத்திரத்தில் Tiada Agama என்றுதான் இருக்கும். அவர் நினைத்திருந்தால் Tamil என்று குறிப்பிட்டு இருக்கலாம். தமிழ் என்பது மதமல்ல மொழி.
நாங்கள் தேர்ந்தெடுக்க எங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையாகவே நான் இதைக் கருதுகிறேன்.

“சுட்டத்திரு நீரெடுத்து” எனும் சூலமங்கல சகோதரிகள்  பாடலை எனக்கு அறிமுகம் செய்தவர் அப்பாதான். அதுமட்டுமல்ல பல பக்தி இலக்கியச் சுவையினை நிறைய நாங்கள் பேசி இருக்கிறோம்.

ஒரு முறை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் நானும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். அருமை நண்பர் நாகபஞ்சு ஐயா அவர்கள் நான் கையில் கட்டியிருந்த கயிறைப் பார்த்து இது எதுக்கு எனக் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.

“அது அவங்க விருப்பம்” என்று அப்பா பதிலளித்தார்.

கையில் கயிறு கட்டுவது தவறல்ல. காரணம் அறிந்து கட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், பல முறை என் கைகளில் பார்த்தும் கூட எதுவுமே கேட்டதில்லை. அவர்தான் எங்கள் அப்பா. எங்கள் விருப்பத்திற்கு எதிரானவர் அல்ல. எங்கள் மீது அவர் கொள்கைகளைத் திணித்ததும் இல்லை.

சமுதாயத்தில் சுயமரியாதைக் கொள்கை, கடவுள் மறுப்பு என பேசுகின்றவர்களின் ஒரு சிலர் வீட்டில் பூஜை அறை இருக்கத்தான் செய்கிறது. சமுதாயத்திற்கு மட்டும் கொள்கைவாதிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர்.

நான் அப்படி இருக்க விரும்பவில்லை. என் மதத்தைத் தேர்ந்தெடுக்க எனக்கு முழு உரிமையை என் அப்பா எனக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு சிலர் என்னைச் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது, “அவங்க அப்பா யாரு! இவங்க அவர் பெயரக் கெடுக்கிறாங்க “என ஆதங்கப்பட்டார்கள்.

அப்பாவின் மீது அவர்கள் கொண்ட பற்றாகவே இதனை நான் பார்க்கிறேன். என் கணவர் இந்து, என் பிள்ளைகள் இந்து. என் குழந்தைகளுக்கு முறையான சமய அறிவைக் கொடுக்க வேண்டியது என் கடமை. அதற்கு எனக்கு முறையான சமய அறிவு இருக்க வேண்டும்.

இந்த தெளிவைக் கொடுத்த அப்பாவிற்கு அன்பும் ❤️ நன்றியும்!