Home நாடு மக்களை வாட்டும் கோவிட் 19, வெள்ளப் பேரிடர்களில் மலேசிய குடும்பமாக நல்லிணக்கம் காண்போம்

மக்களை வாட்டும் கோவிட் 19, வெள்ளப் பேரிடர்களில் மலேசிய குடும்பமாக நல்லிணக்கம் காண்போம்

485
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு விடுத்த வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“மனித வழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசுபிரானின் பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசிய கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் நல்வாழ்த்துகள். இந்த காலகட்டம் இறுக்கமான ஒரு காலகட்டம். கடந்த 2020இல் கோவிட் 19 நாட்டை உலுக்கியது. தற்போது வெள்ளம் நாட்டை சூழ்ந்துள்ளது. மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் கோவிட் 19 பெருந்தொற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் மீண்டு வரும் நிலையில் தற்போது வெள்ளப் பேரிடர் மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது” என தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“இந்த இறுக்கமான காலகட்டத்தில் அனைவரும் மலேசிய குடும்பமாக நல்லிணக்கம் காண வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த சூழலில் கிறிஸ்துவ பெருமக்கள் மிதமான அளவில் மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட வாழ்த்துகிறேன்” எனவும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த வெள்ளப்பேரிடரில் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அனைவரும் இனம், மொழி, மதம் பாராமல் நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். மத சுதந்திரத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் நாடுகளில் ஒன்று மலேசியா. இதன் காரணமாகவே, நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கிறிஸ்துவ மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ தேவாலயங்களும் எல்லா முக்கிய நகர்களிலும் வீற்றிருக்கின்றன. அவற்றில் ஒரு சில தேவாலயங்கள் சில நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டவையாகும். இது போன்ற பழமையான மத வழிபாட்டுத் தலங்களை, அவை எந்த மதத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் நாம் மதித்துப் போற்றிக் கொண்டாட வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொவிட்-19, வெள்ளப்பேரிடர் ஆகிய பாதிப்புகளால் வழக்கமான மகிழ்ச்சி இருக்காது என்றாலும் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இயேசுநாதரின் பல நல்ல போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் மத நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கிறிஸ்துமஸ் பெருநாளை கொண்டாடி மகிழ்வோம் என்றும் விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.