Home நாடு 15வது பொதுத் தேர்தல் : 2022 ஆம் ஆண்டிலா? 2023-ஆம் ஆண்டிலா?

15வது பொதுத் தேர்தல் : 2022 ஆம் ஆண்டிலா? 2023-ஆம் ஆண்டிலா?

638
0
SHARE
Ad

(பெரிதும் எதிர்பார்க்கப்படும்   15ஆவது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறுமா? அல்லது எழுந்திருக்கும் புதிய ஆரூடங்களின்படி 2023 மே மாதத்தில்தான் நடைபெறுமா? ஏன் அவ்வாறு நீட்டிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது? தன் பார்வையில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

2022 புத்தாண்டு தொடங்கியது முதல் அரசியல் களமும், அதன் தொடர்பிலான ஆரூடக் களமும் இந்நேரம் சூடுபிடித்திருக்க வேண்டும். ஆனால், வெள்ளம் நாடெங்கிலும் பரவியதால், தற்போதைக்கு அரசியல் வெப்பம் சற்றே தணிந்திருக்கிறது.

இருந்தாலும், 15ஆவது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற ஆரூடங்கள் மெல்லப் பரவத் தொடங்கி விட்டன.

#TamilSchoolmychoice

அரசியலமைப்புச் சட்டத்தின்படி 2023 மே மாதம்தான் நடப்பு நாடாளுமன்றத்தின் 5 ஆண்டுகால தவணை நிறைவடைகிறது.

எனினும்,

2022ஆம் ஆண்டிலேயே 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் எனப் பொதுவாகக் கணிக்கப்படுகிறது.

ஆனால், பிரதமர் இஸ்மாயில் சப்ரி அடுத்த ஆண்டு மே மாதம் வரை 15 ஆவது பொதுத் தேர்தலை நீட்டிக்க வியூகம் வகுத்துள்ளார் எனத் தெரிகிறது. இதற்கு முக்கிய அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியினருடன் இஸ்மாயில் சாப்ரி அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த ஆண்டில் கையெழுத்திட்டது.

எதிர்வரும் 2022 ஜூலை மாதம் வரை இந்த ஒப்பந்தம் நடப்பில் இருக்கும். அதுவரையில் பொதுத் தேர்தலை நடத்துவது இல்லை, ஆட்சியை கவிழ்ப்பது இல்லை என்ற உடன்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

2022 ஜூலைக்குள்  சில சீர்திருத்த சட்டங்களை நாடாளுமன்றத்தில்  கொண்டு வரவேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மற்றொருஉடன்பாடாகும்.

ஜூலை மாதம் வரை இந்த ஒப்பந்தம் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

சீர்திருத்த சட்டங்கள் அமல்படுத்தப்படாவிட்டால், புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் என பக்கத்தான் தலைவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

இந்த ஒப்பந்தம் காரணமாக ஜூலை மாதம் வரை பொதுத் தேர்தல் வர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியின் அம்னோ தேர்தல் வியூகம்

இஸ்மாயில் சப்ரி ஆதரவாளர்கள் குறி வைத்திருப்பது, பொதுத் தேர்தலை மட்டுமல்ல! அம்னோ கட்சித் தேர்தலையும்தான்!

பொதுத் தேர்தலுக்கு முன்பாக அம்னோ தேர்தலை நடத்தப்பட  வேண்டும் என்பதுதான் இஸ்மாயில் சப்ரியின் வியூகம்.

அப்படி செய்தால் அம்னோ தேர்தலில்  தேசியத் தலைவருக்குப் போட்டியிட்டு  பிரதமர் என்ற அதிகாரத்தைக் கொண்டு எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார் இஸ்மாயில் சப்ரி.

ஆனால், அவருக்கு எதிராக முகாம் அமைத்திருக்கும்   அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடியும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் வேறொரு கோணத்தில்  வியூகம் வகுத்திருக்கின்றனர்.

நடந்து முடிந்த மலாக்கா தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்ததால் அதன் அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு தீவிரமாக நெருக்குதலை தந்து வருகின்றனர் சாஹிட் ஹமிடியும் நஜிப் துன் ரசாக்கும்.

அப்படி பொதுத் தேர்தலை நடத்திவிட்டால் தற்போது தங்களுக்கு எதிராக இருக்கும்  அம்னோ தலைவர்களையும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களையும் கழற்றிவிட்டு தங்களுக்கு ஆதரவானவர்களை பொதுத் தேர்தலில் நிறுத்தலாம் என்பது அவர்களின் திட்டம். அதன் மூலம்  அம்னோவுக்குள்ளும் தங்களின் தலைமைத்துவத்தை வலிமைப்படுத்திக் கொள்ளலாம் என்னும் வியூகத்தோடு சாஹிட்டும், நஜிப்பும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா?

நடப்பு  சூழ்நிலையில் இஸ்மாயில் சப்ரி அரசாங்கம்
கவிழ்வதற்கு வாய்ப்பில்லை. நாடாளுமன்ற பெரும்பான்மையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கான  போதிய எண்ணிக்கை பக்கத்தான் கூட்டணி கைவசமும் இல்லை.

எனவே, பக்கத்தான்  கூட்டணி, இஸ்மாயில் சாப்ரி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டாலும் நடப்பு அரசாங்கம் கவிழப் போவதில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், சாஹிட் தலைமையிலான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இஸ்மாயில் சப்ரிக்கான  ஆதரவை மீட்டுக் கொண்டாலும் இஸ்மாயில் சப்ரி அரசாங்கம் கவிழாது.

அதற்கான எண்ணிக்கையை சாஹிட் சார்பு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை. மேலும், அப்படி செய்தால் அம்னோ பிளவுபடும் சாத்தியமே அதிகம் என்பதால் அத்தகைய அபாய முடிவை சாஹிட் எடுக்கமாட்டார் என்று நம்பப்படுகிறது.

அப்படியே சாஹிட்டும் நஜிப்பும் இணைந்து அந்த துணிச்சலான முடிவை எடுத்தால் அதற்குப் பதிலடியாக  தனக்கு ஆதரவான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பிரதமராக நீடிக்கும்  முடிவை இஸ்மாயில் சப்ரி எடுக்கக்கூடும்.

பக்கத்தான் கூட்டணி, சபாவின் வாரிசான் கூட்டணி உள்ளிட்ட மற்ற கட்சிகள் இஸ்மாயில் சப்ரிக்கு  ஆதரவளிக்கும்  சாத்தியங்கள் இருக்கின்றன.

இதனால், தேசிய முன்னணிக்கு வெளியிலுள்ள கட்சிகளின் ஆதரவோடு தொடர்ந்து இஸ்மாயில் சப்ரி பிரதமர் பதவியில் நீடிக்க முடியும். அரசாங்கத்தையும் நடத்த முடியும்.

இப்போதும்  அவ்வாறுதான் அவர் பிரதமராக தொடர்ந்து கொண்டிருக்கிறார் நாம் மறந்து விடக் கூடாது.

பாதுகாப்புக்கு ‘அண்ணனின்’ கட்சியை வைத்திருக்கும் இஸ்மாயில் சப்ரி

யாரும் எதிர்பாராமல் பிரதமர் பதவியைத் தனது வியூகத்தால் கைப்பற்றிய இஸ்மாயில் சப்ரி அடுத்தக் கட்ட அரசியல் வியூகங்களையும் திறமையாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளதாக  தெரிகிறது.

கடந்தாண்டின் இறுதியில் இஸ்மாயில் சாப்ரியின் அண்ணன் கமாருசமான் யாக்கோப் தலைமையில் குவாசா ராயாட் என்ற புதிய பல இன கட்சி அறிவிக்கப்பட்டதும் அத்தகைய வியூகங்களில் ஒன்று என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது “குவாரா ராயாட்” கட்சி “மீரா” (MIRA) என்ற  – இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட  சிறியதொரு கட்சியுடன் இணைந்திருக்கிறது. இந்த இணைப்பைத் தொடர்ந்து டிசம்பர் 18-இல் நடைபெற்ற அந்தக் கட்சியின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் மீரா கட்சியின் தலைவராக கமாருசமான் யாக்கோப் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீரா கட்சியின் பெயரும் குவாசா ராயாட் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

தேசிய முன்னணிக்கு ஆதரவான  கட்சியாக குவாசா ராயாட் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்னோ கட்சியில் பிளவு ஏற்பட்டால் அதிலிருந்து பிரியும்  நாடாளுமன்ற– சட்டமன்ற உறுப்பினர்களுக்கான   புகலிடமாக குவாசா ராயாட் திகழும்.

இப்படிப்பட்ட  பல கோண வியூகங்களை கட்டமைத்திருக்கும் இஸ்மாயில் சப்ரி பொதுத் தேர்தலை 2023, மே மாதம் வரை  நீட்டிக்கச் செய்வதில் வெற்றி அடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதை வேறு எதிர்பாராத மற்ற அரசியல் வியூகங்கள் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

-இரா.முத்தரசன்