அல்மாட்டி (கசக்ஸ்தான்) : மத்திய ஆசிய நாடான கசக்ஸ்தானில் எழுந்திருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட கைகலப்புகளில் இதுவரையில் 164-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கசக்ஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயெவ் அறிவித்திருக்கிறார்.
சோவியத் ரஷியாவின் பகுதியில் ஒன்றாக இருந்த கசக்ஸ்தான், சோவியத் ரஷியா பிளவுபட்டதைத் தொடர்ந்து தற்போது தனி சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.
இந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயெவ். அவரின் சர்வாதிகார ஆட்சியில் ஊழல், வறுமை பெருகியிருக்கிறது. வாழ்க்கைத் தரம் மோசமாகியிருக்கிறது. அவரின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவே மக்கள் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
சிஎஸ்டிஓ (CSTO) என்ற அண்டை நாடுகளின் கூட்டணிப் பாதுகாப்புப் படைகள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை அடக்க முற்பட்டிருக்கின்றன.
இந்தக் கூட்டணியில் ரஷியா, பெலாரஸ், அர்மேனியா, கசக்ஸ்தான், கிரிக்ஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. கசக்ஸ்தானின் மிகப் பெரிய நகரான அல்மாட்டி நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.