Home அரசியல் 222 தொகுதிகளில் இப்ராகிம் அலி தொகுதியில் மட்டும் தே.மு. வேட்பாளர் வராமல் போனது எப்படி?

222 தொகுதிகளில் இப்ராகிம் அலி தொகுதியில் மட்டும் தே.மு. வேட்பாளர் வராமல் போனது எப்படி?

586
0
SHARE
Ad

Tengku-adnan-featureஏப்ரல் 23 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கலின்போது, தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் சரியான நேரத்தில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய, பாசிர் மாஸ் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளரான சே ஜோஹான் மட்டும் தனது வேட்பு மனுவை சமர்ப்பிக்கவில்லை.

#TamilSchoolmychoice

இப்ராகிம் அலியை மறைமுகமாக ஆதரிக்கும் தேசிய முன்னணி-அம்னோவின் மற்றொரு திட்டம் இது என்பது வேட்பு மனுத் தாக்கல் முடிவுகளின் போது எல்லா மலேசியர்களுக்கும் தெளிவாக தெரிந்தது.

மேலும், இத்தனை ஆண்டுகளாக அம்னோவுக்கும், பெர்காசாவுக்கும் இடையில் இருந்து வந்து நெருக்கமும் இணக்கமும், இப்ராகிம் அலி தொகுதியில் தெரிந்தது. ஏற்கனவே, சுல்கிப்ளி நோர்டின் போட்டியிட்ட ஷா ஆலாம் தொகுதியிலும் ஏற்கனவே தெரிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்காசா என்பதே அம்னோவின் வியூகத்தில் கருவாகி உருவானதுதான் என்பதும் இப்போது நம்பக் கூடியதாகிவிட்டது.

சே ஜோஹான் மீது நடவடிக்கை – தெங்கு அட்னான்

இவ்வளவு பட்டவர்த்தனமாக எல்லாம் தெரிந்த பிறகும் இப்போது தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் “சே ஜோஹான் செயலால்மிகவும்அதிருப்தியடைந்ததேசியமுன்னணி, சேஜோஹான்மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கதிட்டமிட்டுவருகிறது” என்று கூறியுள்ளார்.

தெங்கு அட்னானை ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம்.

தேசிய முன்னணி போட்டியிட்ட 222 தொகுதிகளில் இப்ராகிம் அலி போட்டியிட்ட பாசீர் மாஸ் தொகுதியில் மட்டும் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட மர்மம் என்ன?

அது மட்டும் அல்லாமல், வேட்பு மனுத் தாக்கல் நடந்த இடத்தில் சே ஜோஹான் இருந்ததாகவும் பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.

தேசிய முன்னணிக்கும்-அம்னோவுக்கும்-பெர்காசாவுக்கும் இடையில் உள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் நாடு முழுவதும் அம்னோ மீதும் தேசிய முன்னணி எழுந்துள்ள வெறுப்பு, எதிர்ப்பு – இவற்றையெல்லாம் தணிப்பதற்காகத்தான் தெங்கு அட்னான் இவ்வாறு கூறியிருக்கின்றார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிகின்றது.

இப்ராகிம் அலி விவகாரத்தில் அம்னோ-தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு சம்பந்தமில்லை என வெளியுலகிற்கு காட்டுவதற்குத்தான் தெங்கு அட்னானின் இந்த அறிவிப்பு முயற்சி!

அதுவும் மக்களுக்கு புரியாமல் இல்லை!

இப்ராகிம் அலியின் மற்றொரு நாடகம்

ஆனால் இவர்களையெல்லாம் விட தான் ஒரு சிறந்தநடிகர் என்று இப்ராகிம்அலி தனது அறிக்கையின் மூலம் இந்த விவகாரத்தில் நிரூபித்திருக்கிறார்.

அதாவது, கடந்தவாரம்  தான் அழகாக இல்லாததால் தான் தனக்கு தொகுதி தரவில்லை, சுல்கிப்ளிக்கு தொகுதி கொடுக்கும் தேசியமுன்னணி எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த அவர், இன்று வேட்புமனுதாக்கல் செய்யவராத சேஜோஹான் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று தேசியமுன்னணியிடம் கேட்டுக்கொண்டு, தான் ஒரு நல்லபிள்ளையென பொதுமக்களுக்கு காட்ட நினைக்கிறார்.

சரி! அப்படியே பார்க்கப் போனால் சுயேச்சையாகப் போட்டியிடும் இப்ராகிம் அலிக்கு அம்னோவையும் தேசிய முன்னணியையும் பார்த்து சே ஜோஹான் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று கூற என்ன உரிமை இருக்கின்றது?

இதிலிருந்தே அவர்களுக்குள் இருக்கும் கூட்டும் உறவும் மக்களின் கண்களுக்குத் தெரியாதா?

கடந்த பொதுத் தேர்தல்களில் கூட இது போன்று எப்போதும் தேசிய முன்னணிக்கு நடந்தது இல்லையே? இப்போது மட்டும் எப்படி?

பெர்க்காசாவும், அம்னோவும் இணைந்து செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இப்ராகிம்அலிக்கு வழிவிடும் நோக்கில் தான் தேசியமுன்னணி வேட்பாளர் தடுக்கப்பட்டுள்ளார் என்பது மக்களுக்குத் தெரியாதா?

அதைவிடுத்து ஏன் இந்த ஏமாற்றுவேலை?

இப்ராகிம்அலிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் நேரடியாகவே அவரை தேசியமுன்னணி வேட்பாளராக நிறுத்தியிருக்கலாமே – சுல்கிப்ளிக்கு ஷா ஆலாம் தொகுதியைக் கொடுத்ததைப் போன்று.

முழுக்க நனைந்தபின் – சுல்கிப்ளிக்கே தொகுதி கொடுத்த பின் – இனிமேல் முக்காடு எதற்கு?

எனவே, தெங்கு அட்னான் மலேசியர்களை இவ்வளவு தூரத்திற்கு அரசியல் தெரியாத மாங்காய் மடையர்களாக இருப்பார்கள் என தயவு செய்து கருதக் கூடாது!

-இரா.முத்தரசன்