Home நாடு சிலாங்கூரில் மக்கள் கூட்டணி சார்பாக முகமட் தாயிப் தீவிர பிரச்சாரம்- உலு சிலாங்கூரில் காலிட் வெல்வது...

சிலாங்கூரில் மக்கள் கூட்டணி சார்பாக முகமட் தாயிப் தீவிர பிரச்சாரம்- உலு சிலாங்கூரில் காலிட் வெல்வது உறுதி

599
0
SHARE
Ad

ulusilaangoor

சிலாங்கூர், ஏப்ரல் 23 – சமீபத்தில் பாஸ் கட்சியில் இணைந்த முன்னாள் அம்னோ துணைத்தலைவரான டான்ஸ்ரீ முகமட் தாயிப், சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் கூட்டணிக்காக தீவிர பிரச்சார வேட்டையில் ஈடுபட்டுவருகிறார்.

தனது சொந்த ஊரான உலு சிலாங்கூரை மக்கள் கூட்டணி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு, அத்தொகுதி பிகேஆர் வேட்பாளர் காலிட் ஜாஃபருக்காக கடந்த ஞாயிற்று கிழமை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அங்குள்ள மலாய் வாக்காளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலா காலும்பாங் என்ற இடத்தில் பிறந்த முகமட் தாயிப், கடந்த 1986ஆம் ஆண்டு முதல்1997ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் மாநிலத்தின் பலம் பொருந்திய மந்திரி பெசாராக வலம் வந்தார்.

அத்துடன் பாத்தாங் காலி சட்டமன்ற தொகுதியில் இரு முறை போட்டியின்றி வெற்றிபெற்றதோடு, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் செல்வாக்கும் ஆதரவும் கொண்டவராக கருதப்படும் முகமட் தாயிப்பின் வருகையால் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் கூடுதல் பலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 நான்கு முனைப் போட்டி

உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதன் படி தேசிய முன்னணி வேட்பாளரான கமலநாதனை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் காலிட் ஜாஃபர் போட்டியிடுகிறார்.

இதுதவிர இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான ஆர். சாந்தாரா குமார் மற்றும் ரஸாலி மொஹ்டார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால் முகமட் தாயிப் உலு சிலாங்கூர் மாநில மலாய் வாக்காளர்களை கவர்ந்து, அங்கு போட்டியிடும் பிகேஆர் வேட்பாளரான காலிட்டுக்கு ஒரு மகத்தான வெற்றியை பெற்றுத்தருவார் என்று அவ்வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.