இந்த விசாரணையை நடத்திவரும் நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுயிரா, சாஹிட் மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளின் உள்ளம்சங்களை அரசு தரப்பு நிரூபித்திருப்பதால், தான் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில் அம்னோ- தேசிய முன்னணி தலைவரான, சாஹிட் மீதான இந்தத் தீர்ப்பு அம்னோவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முன்னாள் உள்துறை அமைச்சருமான சாஹிட் மீது யாயாசான் அகால்புடி என்னும் அறவாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய விதத்தில் நம்பிக்கை மோசடி தொடர்பில் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் 27 குற்றச்சாட்டுகளும், இலஞ்ச ஊழல் தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய சாஹிட்டின் வழக்கில் 99 அரசு தரப்பு சாட்சிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர். 50 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கு நடத்தப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது தரப்பு வழக்கை அரசு தரப்பு முடித்துக் கொண்டது. அதன் பின்னர் இருதரப்புகளும் தங்களின் வாதத் தொகுப்பை 24 நாட்களுக்கு சமர்ப்பித்தன.
அந்த வாதத் தொகுப்புகளை செவிமெடுத்த பின்னர் நீதிபதி, சாஹிட்டை எதிர்வாதம் செய்ய உத்தரவிடுவதா இல்லையா என்ற முடிவை இன்று அறிவித்தார்.