(ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் யாவை? அவற்றின் நடப்பு நிலவரங்கள் என்ன? வெற்றி வாய்ப்புகள் எப்படி? தனது அரசியல் பார்வையில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா. முத்தரசன்)
2018 பொதுத் தேர்தலில் நான்கு சட்டமன்றங்களில் ம.இ.கா. போட்டியிட்டது. மாநில அளவில் மிக அதிகமான சட்டமன்றங்களில் ம.இ.கா. போட்டியிட்டது பேராக் மாநிலத்திலும் ஜோகூர் மாநிலத்திலும் தான்.
ஸ்கூடாய், காம்பீர், கஹாங், தெங்காரோ ஆகியவையே ஜோகூரில் ம.இ.கா. போட்டியிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகள். இதில் ஸ்கூடாய், காம்பீர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ம.இ.கா. தோல்வியைத் தழுவியது. மற்ற இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
எதிர்வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் ம.இ.கா.வுக்கு மீண்டும் நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை, கெராக்கான், தேசிய முன்னணி கூட்டணியில் இல்லை என்பதால், அந்தக் கட்சிக்கு 2018-இல் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி கட்சிகளால் பிரித்துக் கொள்ளப்படும்.
மஇகா 5 தொகுதிகளில் போட்டியிடக் குறிவைத்திருப்பதாக மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.அசோகன் (படம்) கூறியிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த காம்பீர், ஸ்கூடாய் தொகுதிகளில் மீண்டும் மஇகாவுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது வேறு தொகுதிகளை மஇகா மாற்றிக் கொள்ளுமா? என்பதும் இனிமேல்தான் தெரிய வரும்.
கூடுதலானத் தொகுதிகளில் போட்டியிடுவதை விட, வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதைத்தான் மஇகா விரும்புகிறது என கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் அறிவித்திருக்கிறார்.
ஜோகூர் தேர்தல் நிலவரம் எப்படியிருக்கும்?
பொதுவாக ஜோகூர் மாநிலம் முழுவதும் தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை வீசுவதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் நாட்களில் அலையின் திசைகள் மாறுமா என்பது தெரியவரும்.
2018-இல் நடந்ததைப் போல் அல்லாமல் கூட்டணிக் கணக்குகள் ஜோகூரில் இந்த முறை மாறும் என்பதால், கணிப்புகள் மாறுபடலாம்.
2018-இல் மஇகா போட்டியிட்ட இந்த நான்கு தொகுதிகளின் நிலவரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
கஹாங்
தற்போது தேசிய முன்னணி – அம்னோ சார்பிலான மாநில அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் ஆர்.வித்தியானந்தன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தொகுதி கஹாங். கடந்த சில தவணைகளாக வித்தியானந்தன் இந்தத் தொகுதியை வெற்றிகரமாக தற்காத்து வந்திருக்கிறார்.
செம்பூரோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று கஹாங். நடப்பு தற்காப்பு அமைச்சரான ஹிஷாமுடின் துன் உசேன் ஓன் கடந்த சில தவணைகளாக செம்பூரோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று வந்திருக்கிறார்.
ஹிஷாமுடினுக்கு நெருக்கமானவராகவும் வித்தியானந்தன் கருதப்படுகிறார். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் அபிமானத்தையும் வித்தியானந்தன் பெற்றிருக்கிறார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஇகா ஜோகூர் மாநிலத் தலைவராகவும் வித்தியானந்தனே செயல்பட்டு வருகிறார்.
எனவே, மீண்டும் இந்தத் தொகுதியில் வித்தியானந்தன் போட்டியிடுவதிலும் வெற்றி பெறுவதிலும் பிரச்சினை இருக்காது என்றே கருதப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் கஹாங் தொகுதியில் 10,768 வாக்குகள் பெற்ற வித்தியானந்தன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளரை விட 2,861 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். பெர்சாத்து வேட்பாளருக்கு 7,907 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
தெங்காரோ
ம.இ.கா.வின் தேசிய இளைஞர் பகுதி தலைவராக கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் ரவின்குமார் கிருஷ்ணசாமி. இவர் கடந்த மூன்று தவணைகளாக தெங்காரோ தொகுதியைத் தற்காத்து வந்திருக்கிறார். இவரின் தந்தையார் அமரர் கிருஷ்ணசாமியும் முன்னாள் ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினராவார்.
மீண்டும் ரவினுக்கே இங்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியாக நம்பலாம்.
மெர்சிங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 தொகுதிகளில் தெங்காரோவும் ஒன்று. கடந்த 2018 பொதுத் தேர்தலில் மெர்சிங் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி-அம்னோ கைப்பற்றியது.
தெங்காரோ தொகுதியில் 12,309 வாக்குகள் பெற்று கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார் ரவின். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சி வேட்பாளருக்கு 6,544 வாக்குகள் கிடைத்தன. பாஸ் கட்சியும் இங்கு போட்டியிட்டு 3,543 வாக்குகள் பெற்றன. எனவே, இரண்டு எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்தால் கூட, 2,222 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் ரவின்.
மீண்டும் அவருக்கே இங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்பதோடு அவர் வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் இருக்காது என்றே கருதப்படுகிறது.
காம்பீர்
ம.இ.கா.வின் நடப்பு உதவித் தலைவரான டத்தோ அசோஜன் 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி காம்பீர். அதற்கு முன்னர் மூன்று தவணைகளாக காம்பீர் தொகுதியை வெற்றிகரமாக தற்காத்து வந்தார் அசோஜன்.
ஒரு தவணை மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
2018இல் யாரும் எதிர்பாராத விதமாக பெர்சத்து கட்சியின் தலைவரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் இங்கு போட்டியிட்டார்.
அப்போது பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக வீசிய அலையினால் ஜோகூர் மாநிலத்தையே அந்த கூட்டணி கைப்பற்றியது. அதன் காரணமாக காம்பீர் தொகுதியில் மொஹிடின் யாசினும் வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் அவர் இதே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது தெரியவில்லை.
மீண்டும் இந்தத் தொகுதி ம.இ.கா.வுக்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டால் மீண்டும் அசோஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கின்றன. மொஹிதின் யாசின் மீண்டும் இங்கு போட்டியிட முன்வந்தால் இந்தத் தொகுதிக்கு பதிலாக வேறொரு தொகுதியை மஇகா தேசிய முன்னணியிடம் கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-இல் காம்பீர் தொகுதியை தக்கவைத்துக் கொள்வதில் அசோஜன் தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து ம.இ.கா.வின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் ம.இ.கா. ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் காம்பீர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது சிகாமாட் போன்ற நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்காக 15ஆவது பொதுத் தேர்தல்வரை காத்திருப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஸ்கூடாய்
64 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சீன வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஸ்கூடாய். 2018-இல் இந்தத் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டது. மஇகா-தேசிய முன்னணி சார்பில் இங்கு போட்டியிட்ட எஸ்.கண்ணன் படுமோசமான தோல்வியைத் தழுவினார்.
அவருக்கு 12,233 வாக்குகளே கிடைத்தன. வெற்றி பெற்ற ஜசெகவின் வேட்பாளர் டான் ஹோங் பின் 47,359 வாக்குகளைப் பெற்றார். இதனால், இந்தத் தொகுதிக்கு பதிலாக மற்றொரு தொகுதியை மஇகா கோரும் எனக் கருதப்படுகிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஸ்கூடாய். பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் சாலாஹூடின் அயூப். அமானா கட்சியின் துணைத் தலைவர்.
எனவே, 2018 பொதுத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது கஹாங், தெங்காரோ இரண்டு தொகுதிகளிலும் மஇகா போட்டியிடும் என்றும் ஸ்கூடாய், காம்பீர் தொகுதிகள் மற்ற தொகுதிகளோடு மாற்றிக் கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.