Home நாடு சொல்லாடல் – தமிழில் “Wordle” சொல் விளையாட்டு செயலி

சொல்லாடல் – தமிழில் “Wordle” சொல் விளையாட்டு செயலி

10267
0
SHARE
Ad

கடந்த இரு மாதங்களாக நட்பு ஊடகங்களில் சின்ன வண்ண கட்டங்களை அதிகமானோர் பகிர்வதைக் கண்டிருப்பீர்கள். ஆங்கிலத்தில் ‘வேர்டில்’ (Wordle) சொல் விளையாட்டின் முடிவு தான் அவை.

மிகவும் எளிமையான விளையாட்டுத்தான். ஆனால், உலகமே பித்துப் பிடித்துப் போய் மண்டையைச் சொறிந்துகொண்டு இருக்கிறது. ஐந்து எழுத்து ஆங்கிலச் சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் முறையில் நீங்களாகவே தோராயமாக ஐந்து எழுத்து சொல்லை நிரப்புவீர்கள். அதில் எது சரி, எது தவறென மஞ்சள், சாம்பல், பச்சை வண்ணங்கள் கோடிட்டுக் காட்டும். இதை வைத்து அடுத்த அடுத்த வரிசையில் உங்கள் கணிப்புகளை நிரப்ப வேண்டும்.

ஆறு வாய்ப்புகள் முடிந்து தோற்றாலோ, அல்லது நீங்கள் வென்றாலோ அந்த நாள் முடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில் இந்த விளையாட்டை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே விளையாட முடியும். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளில் ஓர் ஐந்தெழுத்து சொல்லைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிமையில்லை.

#TamilSchoolmychoice

தொடக்கத்தில் வெறும் 90-100 பேர் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த வேர்டிலைத் தற்போது 50 இலட்சத்துக்கும் அதிகமானோர் விளையாடுகிறார்கள். ஜாஷ் வார்டில் தனது காதலிக்காக உருவாக்கிய இந்த விளையாட்டை உலகப் புகழ்பெற்ற ஊடகமான நியூ யார்க் டைம்ஸ் சில நாட்களுக்கு முன் “சில மில்லியன் டாலருக்கு” வாங்கியுள்ளது. இப்படியாக உருவான வேர்டிலை, தற்போது பல்வேறு மொழிகளிலும் கணினி நிரலாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழில் சொல்லாடல் – விளையாட்டு

முகிலன் முருகன்

‘வேர்டிலை’ அடிப்படையாகக் கொண்டு மலேசியாவைச் சேர்ந்த கணினி வல்லுநர் “ஓம்தமிழ்” முகிலன் முருகன் தமிழில் “சொல்லாடல்” விளையாட்டை உருவாக்கியுள்ளார்.

“முதலில் ‘வோர்டல்’ விளையாட்டின் அறிமுகம் கிடைத்த போது, இதனைப் போன்றே தமிழிலும் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணமே தோன்றியது. உடனே இதனை உருவாக்கத் தொடங்கி 5 நாட்களில் செயலியாக வெளியிட்டும் விட்டேன்” என்றார் முகிலன்.

இவ்விளையாட்டின் எளிமையை அப்படியே தமிழுக்கும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட முகிலன், தமிழ் இலக்கண அடிப்படையில் தான் உருவாக்கிய விசைப்பலகையை பயன்படுத்துவோருக்கு வல்லினம் (கசடதபற), மெல்லினம் (ஙஞணநமன), இடையினம் (யரலவழள) வரிசையை எளிதாக கற்கவும் உதவும் என்றார். தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துகள இருப்பதால், சொல் குறிப்பு சொல்லை கண்டுபிடிப்பதற்கு துணைப்புரியும்

முகிலன் ஏற்கனவே திருக்குறள் மற்றும் கலைச்சொல் செயலிகளையும் உருவாக்கி இன்று பல்லாயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்தியும் வருகின்றனர். சென்ற ஆண்டில் “தமிழ்ப்புதிர்” நேரலை விளையாட்டு நிகழ்ச்சியினை வலையொளியில் மலேசிய தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கியும் உள்ளார்.

சொல்லாடல் செயலியின் நோக்கம், தமிழில் ஏற்ற பொருள் உடைய – பொருள் ஆழமுடைய சொற்களைப் பயன்படுத்துவதாகும். தமிழோடு விளையாடி சொற்களைப் பற்றிய அறிவுத்திறனை இவ்விளையாட்டின் மூலம் செம்மைப்படுத்தலாம்.

கற்றல் கற்பித்தலில் ஆசிரியர் பொருந்தகைகள் சொல்லாடல் செயலியை மாணவர்களுக்கு நாள்தோறும் சிறு போட்டியாகவோ பயிற்சியாகவோ நடத்தலாம். நீண்ட காலம் தமிழ் இலக்கியத்தில் பயணிப்போர்க்கு தான் ஒரு சொல் அகரமுதலியாக வீற்று இருப்பதை உணர்த்தவும் ஆய்வுக்கு உட்படுத்தவும் சொல்லாடல் துணை செய்யும்.

Progressive Web Application (PWA) எனும் இணையச் செயலியாகச் சொல்லாடல் உருவாக்கப்பட்டுள்ளதால் இதனைப் பதிவிறக்கத் தேவையில்லை.

சொல்லாடல் விளையாட இத்தளத்திற்குச் செல்லவும் :

https://omtamil.com/soladle