Home நாடு ஜோகூர் : பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி – மஇகா  வரலாற்றுப் பக்கங்களில் சில நினைவுகள்

ஜோகூர் : பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி – மஇகா  வரலாற்றுப் பக்கங்களில் சில நினைவுகள்

803
0
SHARE
Ad

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பூலோ காசாப் தொகுதியில் பிகேஆர் சார்பில் இந்தியர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். மஇகா வரலாற்றில் பல அரசியல் நகர்வுகளால் பிணைக்கப்பட்ட பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி குறித்த சில கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் இரா. முத்தரசன்)

  • நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதியில் இந்தியர் ஒருவர் போட்டி
  • 1978-இல் பாசமாணிக்கத்திற்கு வாய்ப்பு வழங்காமல் எம்.கே.முத்துசாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிய மாணிக்கவாசகம்
  • மஇகா வேட்பாளராக யாரை நியமிப்பது என ஜோகூர் மந்திரி பெசாருக்கும், மாணிக்காவுக்கும் நிகழ்ந்த மோதல்

இதுவரையில் இரண்டு இந்திய வேட்பாளர்களை ஜோகூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட பிகேஆர் கட்சி அறிவித்துள்ளது. தீராம், பூலோ காசாப் ஆகியவையே அந்த இரண்டு தொகுதிகளாகும்.

தீராம் சட்டமன்றத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு பிகேஆர் கட்சி சார்பாக வெற்றி பெற்ற கோபாலகிருஷ்ணன் மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குகிறார்.

#TamilSchoolmychoice

மற்றொரு தொகுதியான பூலோ காசாப் சட்டமன்றத்தில் சுப்பிரமணிசாமி போட்டியிடுவார் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

பல தவணைகளாக மஇகா வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்த சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பூலோ காசாப். மற்றொரு தொகுதி ஜெமந்தா.

55 வயதான சுப்பிரமணிசாமி பாகோ பிகேஆர் தொகுதியின் தலைவராவார்.

இன்றைய தலைமுறையினருக்கு பூலோ காசாப் என்பது முதன் முறையாக இந்தியர் ஒருவர் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி என்பது போன்ற தோற்றத்தை அளிக்கலாம்.

ஆனால், மஇகா வரலாற்றை அறிந்தவர்களுக்கும் ஜோகூர் மஇகாவின் மூத்த தலைவர்களுக்கும் “பூலோ காசாப்” என்ற பெயர் பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறி இருக்கும்.

அந்த அளவுக்கு ஜோகூர் மஇகா வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பல அரசியல் சம்பவங்களைக் கொண்டது பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி.

பாசமாணிக்கம் தற்காத்த தொகுதி

அமரர் டான்ஶ்ரீ ஜி.பாசமாணிக்கம்

1973ஆம் ஆண்டில் பூலோ காசாப் தொகுதி உருவாக்கப்பட்டது. 1974 பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட (அமரர்) டான்ஸ்ரீ ஜி. பாசமாணிக்கம் வெற்றி பெற்றார்.

1978ஆம் ஆண்டு வரை அவர் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அதன் காரணமாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

அப்போது மந்திரி பெசாராக இருந்தவர் அம்னோவில் பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட டான்ஸ்ரீ ஓஸ்மான் சாட். அவருடன் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தவர் பாசமாணிக்கம்.

இந்த சூழ்நிலையில்தான் 1977ஆம் ஆண்டில் மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலில் (துன்) சாமிவேலுவும் (டான்ஸ்ரீ) சி. சுப்ரமணியமும் போட்டியிட்டனர்.

அமரர் டான்ஶ்ரீ ஆதி.நாகப்பன்

மஇகா துணைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ ஆதி. நாகப்பன், 1976ஆம் ஆண்டு காலமானார். அதைத் தொடர்ந்து காலியான துணைத் தலைவர் பதவிக்கு “யாரையும் இடைக்காலத்திற்கு நியமிக்க மாட்டேன். தேர்தலின் மூலம் மஇகா பேராளர்களே அடுத்த துணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என அறிவித்தார் அப்போதைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்.

அதன் காரணமாகத்தான் 1977ஆம் ஆண்டு, சாமிவேலு – சுப்ரா இருவரும் துணைத் தலைவருக்கான போட்டியில் குதித்தனர். மாணிக்கவாசகம் சுப்ராவை அந்தத் தேர்தலில் ஆதரித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அந்தக் காலகட்டத்தில் ஜோகூர் மாநிலத் தலைவராக இருந்த பாசமாணிக்கம், மாணிக்காவுக்கும் நெருக்கமானவராக இருந்தார்.

1977 மஇகா துணைத் தலைவர் தேர்தலில் இறுதி நேரத்தில் பாசமாணிக்கம், சாமிவேலுவுக்கு தனது ஆதரவை வழங்கினார். அந்தத் தேர்தலில் 26 வாக்குகள் வித்தியாசத்தில் சாமிவேலு துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.

அந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று பாசமாணிக்கத்தின்  இறுதிநேர ஆதரவுதான் எனக் கூறப்பட்டது. இதனால் பாசமாணிக்கத்திடம் அதிருப்தி அடைந்த மாணிக்கவாசகம் 1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பூலோ காசாப் சட்டமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பை பாசமாணிக்கத்திற்கு வழங்கவில்லை.

டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம்

மாறாக அப்போது பாசமாணிக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்த பள்ளி ஆசிரியர் எம்.கே. முத்துசாமி என்பவருக்கு அந்த பூலோ காசாப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

மஇகா ஜோகூர் மாநிலத்தில் வெடித்த மோதல்கள்

இதனால் ஜோகூர் மஇகாவில் மோதல்கள் வெடித்தன. பாசமாணிக்கத்திற்கு நெருக்கமாக இருந்த ஜோகூர் மந்திரி பெசார் ஓஸ்மான் சாட்,  மாநிலத்தின் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் 1978 பொதுத் தேர்தலில் பாசமாணிக்கம்தான் பூலோ காசாப் வேட்பாளர் என அறிவித்தார்.

துன் ஹூசேன் ஓன்

ஆனால் மாணிக்காவோ, முத்துசாமிதான் பூலோ காசாப் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது பிரதமராக இருந்தவர் துன் ஹுசேன் ஓன்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக பாசமாணிக்கம்தான் பூலோ காசாப் வேட்பாளர் என்ற அதிகாரத்துவ கடிதத்தை மந்திரி பெசார் ஓஸ்மான் சாட் முதலில் வெளியிட்டார்.

மாணிக்காவோ இதைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். உடனடியாக பிரதமர் ஹுசேன் ஓனைத் தொடர்பு கொண்டார். அப்போது ஹுசேன் ஓன் 1978 பொதுத்தேர்தலில் போட்டியிட அதே ஜோகூர் மாநிலத்தின் ஸ்ரீ காடிங் தொகுதியில் தங்கியிருந்தார்.

பிரதமரைத் தொடர்பு கொண்டார் மாணிக்கவாசகம். “கட்சியின் தேசியத் தலைவர்தான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்  என்பதுதான் தேசிய முன்னணி கட்சிகளுக்கு இடையிலான உடன்பாடு. அதன்படி மஇகா வேட்பாளர் முத்துசாமிதான். அவர் போட்டியிட அதிகாரத்துவக் கடிதத்தை ஜோகூர் தேசிய முன்னணியோ அல்லது மந்திரி பெசாரோ வழங்காவிட்டால் நாடு தழுவிய நிலையில் மற்ற மஇகா வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள்” என அதிரடியாக ஹுசேன் ஓனிடம் மாணிக்கா தெரிவித்தார் என இது தொடர்பான சம்பவங்களை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம்

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஹுசேன் ஓன், மஇகாவின் முடிவுக்கு ஏற்ப அதிகாரத்துவ கடிதத்தை முத்துசாமிக்கு ஆதரவாக வெளியிட வேண்டும் என மந்திரி பெசாருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் முத்துசாமிதான் பூலோ காசாப்  வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை அப்போதைய மஇகா தலைமையக நிர்வாகச் செயலாளர் அ. துரைராஜ் (பின்னாளில் மாணிக்கவாசகத்தின் அரசியல் செயலாளராகவும் மஇகா யூனிட் டிரஸ்ட் நிர்வாகியாகவும், பணியாற்றினார்) என்பவர் மூலமாக மாணிக்கா ஜோகூர்பாருவுக்கு அனுப்பினார்.

அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜோகூர் பாரு சென்று இரவோடு இரவாக மந்திரி பெசாரிடம் சமர்ப்பித்தார் துரைராஜ். மறுநாள் பூலோ காசாப் தொகுதியில் முத்துசாமியே மஇகா தேசிய முன்னணி வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

மஇகாவுக்கு ஆட்சிக்குழு மறுக்கப்பட்டது

தனக்கு நெருக்கமான பாசமாணிக்கத்திற்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படாததால் சினமடைந்த மந்திரி பெசார், மாநில ஆட்சிக் குழு என்பது முழுக்க முழுக்க எனது உரிமையாகும் – நான் மஇகாவுக்கு அந்தப் பொறுப்பை வழங்க மாட்டேன் என முடிவெடுத்தார்.

ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ ஓத்மான் சாட்

அதன்படி 1978ஆம் ஆண்டு தேர்தலில் ஜோகூர் மாநில அரசாங்கத்தின் மந்திரி பெசாராக மீண்டும் பதவியேற்ற அவர், முத்துசாமிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை வழங்கவில்லை. இதனால் 1978 –1982 தவணைக் காலத்தில் ஜோகூரில் ஒரே ஒரு சட்டமன்றத்தைக் கொண்டிருந்தாலும் மஇகாவுக்கு ஆட்சிக்குழுவில் இடம் கிடைக்கவில்லை.

1982 பொதுத் தேர்தல் – மாறிய அரசியல் காட்சிகள்

1982ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தபோது மஇகாவிலும் அம்னோவிலும் அரசியல் காட்சிகள் முற்றாக மாறியிருந்தன. 1979ஆம் ஆண்டில் மாணிக்கா காலமாகிவிட சாமிவேலு தேசியத் தலைவராகியிருந்தார்.

1981ஆம் ஆண்டில் துன் ஹுசேன் ஓன் பதவி விலக இப்போது துன் மகாதீர் பிரதமராகி இருந்தார்.

1982 பொதுத்தேர்தலில் பூலோ காசாப் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை நிர்ணயிக்கும் உரிமை தற்போது தேசியத் தலைவர் என்ற முறையில் சாமிவேலு வசம் இருந்தது.

மீண்டும் பாசமாணிக்கமே அங்கு நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பாசமாணிக்கம்தான் ஜோகூர் மஇகாவின் தலைவராகவும் இருந்தார்.

அமரர் எம்.கே.முத்துசாமி –
பூலோ காசாப் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் 1978-1982

1981ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் ஜோகூர் மாநிலத் தலைவருக்கு மீண்டும் போட்டியிட்ட பாசமாணிக்கம், அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முத்துசாமியைத் தோற்கடித்தார். இருந்தாலும் 1982 பொதுத்தேர்தலில் சாமிவேலு ஏனோ சில காரணங்களால் மீண்டும் பாசமாணிக்கத்திற்கு பூலோ காசாப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

மாறாக தனது தீவிர ஆதரவாளரான வி. ஆறுமுகம் என்பவருக்கு பூலோ காசாப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் சாமிவேலு. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆறுமுகம், இந்த முறை மஇகா சார்பாக ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவிலும் இடம்பெற்றார்.

1982 பொதுத் தேர்தலோடு மந்திரி பெசார் பதவியிலிருந்தும் விலகினார் ஓத்மான் சாட். அவருக்குப் பின்னர் அந்த ஆண்டில் டத்தோ அப்துல் அஜிப் அகமட் புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.

1986 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பூலோ காசாப் தொகுதி எல்லை மாற்றங்களால் பெயர் மாற்றம் கண்டது. செபினாங் என அழைக்கப்பட்டது. 2004 முதல் இந்தத் தொகுதி மீண்டும் பூலோ காசாப் எனப் பெயரிடப்பட்டது.

கால ஓட்டத்தில் பூலோ காசாப் தொகுதி மஇகாவுக்கு வழங்கப்படாமல் அம்னோவுக்கு வழங்கப்பட்டது. மஇகாவுக்கு வேறு மாற்று சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால் பூலோ காசாப் சட்டமன்றத்தை உள்ளடக்கிய, சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதி 1982 முதல் 2018 வரை தொடர்ந்து மஇகாவுக்கே வழங்கப்பட்டு வந்தது.

அன்று பூலோ காசாப் என்ற ஒரே ஒரு தொகுதியில்  போட்டியிட்ட மஇகா 2018இல் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மீண்டும் பூலோ காசாப் இந்தியர் வசமாகுமா?

இப்போது வரலாறு திரும்பும் விதமாக பூலோ காசாப் தொகுதியில் இந்தியர் ஒருவர் பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். 2018 கணக்கெடுப்பின்படி 13 விழுக்காடு  இந்தியர் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பூலோ காசாப்.

57 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும் 30  விழுக்காடு சீன வாக்காளர்களும் இந்தத் தொகுதியில் இருக்கிறார்கள். பூலோ காசாப் தொகுதியில் இந்தியர் ஒருவர் போட்டியிடுவதால் இந்தத் தொகுதி மீண்டும் தேசிய முன்னணி கூட்டணி சார்பில் மஇகாவுக்கே வழங்கப்படுமா என்ற ஆர்வமும் மஇகாவினரிடையே எழுந்துள்ளது.

2018 பொதுத்தேர்தலில் இங்கு போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் ஸஹாரி பின் சாரிப் 877 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்சத்து வேட்பாளரைத் தோற்கடித்தார்.

அதே 2018 பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தோல்வியடைந்தார்.

எதிர்வரும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ, பெர்சத்து, பெஜுவாங் என மூன்று மலாய்க் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பிளவுபடுத்தப்போகும் நிலையில் பூலோ காசாப் தொகுதியை மீண்டும் அம்னோ தற்காத்துக்கொள்ள முடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் போட்டியால் பூலோ காசாப் தொகுதியில் மீண்டும் போட்டியிடப்போவது அம்னோவா அல்லது மஇகாவா என்ற சுவாரசியமான கேள்வியும் எழுந்துள்ளது.

– இரா.முத்தரசன்