Home உலகம் பிப்ரவரி 21 – உலக தாய்மொழி நாள் உதயமானதன் பின்னணி

பிப்ரவரி 21 – உலக தாய்மொழி நாள் உதயமானதன் பின்னணி

1022
0
SHARE
Ad

(பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி நாள் என ஏன் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் கொண்டாடப்படுகிறது? அந்த நாள் உதயமானதன் பின்னணி என்ன? இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? இந்த சிறப்புக் கட்டுரையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • உலக தாய்மொழி நாள் 2022-இன் கருப்பொருள்
  • வங்க மொழிக்காக 1952-இல் நடத்தப்பட்ட  போராட்டம்
  • போரினால் வங்காள தேசம் புதிய நாடாக உருவானது

உலக தாய்மொழி தினமாக பிப்ரவரி 21, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியம். அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர்களின் தாய்மொழியை தங்களின் இன்னுயிருக்கு நிகராக மதிக்க வேண்டும் – பயில வேண்டும் – என்னும் நோக்கங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ இந்த தாய்மொழி நாளை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை இந்தக் கொண்டாட்டத்திற்காக வடிவமைக்கிறது யுனெஸ்கோ. 2022-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “பன்மொழிகளைக் கற்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் – சவால்களும் வாய்ப்புகளும்” (Using technology for multilingual learning: Challenges and opportunities) என்பதாகும்.

இன்றைய கல்விமுறை எதிர்நோக்கும் பல மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வு காணும் ஆற்றம் தொழில்நுட்பத்திற்கு உண்டு. அனைவரும் சரிசமமாக வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்பம் துரித வளர்ச்சியை வழங்கும். இந்த அடிப்படையில்தான் இந்த ஆண்டுக்கான கருப்பொருளை வடிவமைத்துள்ளது யுனெஸ்கோ.

அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைப்பது, நியாயத்துடன் நடந்து கொள்வது என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த வளர்ச்சி அமைய வேண்டும். கல்வி முறையில் தாய்மொழி ஒரு முக்கிய அங்கம் வகிக்கவேண்டும் – அதன் மூலமே பன்மொழிக் கல்வி என்பது கட்டமைக்க வேண்டும் – என்பதெல்லாம் யுனெஸ்கோ முன்வைக்கும் சித்தாந்தங்கள்.

தாய்மொழியும், பன்மொழித் திறனும் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் மேலும் கூடுதலாக உதவும் என்ற கருத்தை இந்த ஆண்டுக்கான கொண்டாட்டத்தில் முன்வைக்கிறது யுனெஸ்கோ. மொழிகளின் வளர்ச்சிக்கான இலக்குகளில் எந்த இன மொழியும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதிலும் யுனெஸ்கோ உறுதியாக இருக்கிறது.

குழந்தைகளின் கல்வி அவர்களின் முதல் மொழியில் அல்லது தாய்மொழியில் தொடங்குவதே சிறப்பு என ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது யுனெஸ்கோ. அதன் மூலம் தொடக்கத்திலேயே குழந்தை நலனைக் கவனிப்பதற்கும் அவர்களின் கற்றலுக்கும் பள்ளிக் கல்வி சிறந்த ஆதாரமாக அமையும் என வாதிடுகிறது யுனெஸ்கோ.

ஐக்கிய நாடுகள் மன்றமே முக்கியத்துவம் கொடுத்து பிப்ரவரி 21-ஆம் தேதியை ஏன் உலக தாய்மொழி தினமாகத் தேர்ந்தெடுத்தது என்பதைப் பார்ப்போம்.

தாய்மொழி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தானும் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட இரண்டு நிலப்பகுதிகள் – ஒன்றிணைக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது.

மேற்கு-கிழக்கு பாகிஸ்தான் என பிரிந்திருந்த பாகிஸ்தானின் பழைய வரைபடம் -1947-1971

இந்தியாவின் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தை ஒட்டிய பகுதி கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது.

குஜராத், பஞ்சாப், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இந்திய மாநிலங்களோடு எல்லைகளைக் கொண்டிருந்த நிலப்பகுதி மேற்கு பாகிஸ்தான் என அப்போது அழைக்கப்பட்டது.

கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் பகுதிகளை இணைத்துத்தான் பாகிஸ்தான் என்ற நாடு உருவானது.

மதத்தால்தான் அவர்கள் இணைக்கப்பட்டிருந்தார்களே தவிர. மொழி, இனம் என்ற அடிப்படையில் அந்த இரண்டு பகுதி மக்களும் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள்.

மேற்கு பாகிஸ்தானில் உருது மொழி முதன் மொழியாகத் திகழ்ந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழிக்கே முதன்மை. உருது மொழியை கிழக்கு பாகிஸ்தானின் அதிகாரத்துவ மொழியாகப் புகுத்த முற்பட்டது மேற்கு பாகிஸ்தான்.

கிழக்கு பாகிஸ்தானின் தேசிய மொழியாக வங்காள மொழியே இருக்கவேண்டும் என்பதற்காக 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது “வங்க மொழி இயக்கம்”.

இன்றைய வங்காளதேசத்தில் பாலர் பள்ளி ஒன்றில் பெங்கால் மொழி எழுத்துகள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன

அந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாளில்தான் வங்க மொழி இயக்கத்திற்காக ஒன்று திரண்ட மாணவர்களும் போராளிகளும் மொழி ஆர்வலர்களும், தாய்மொழிக்காகப் போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் சில ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்தன.

இறுதியில், 1956 ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

மொழிக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் மதிக்கும் வகையில் உலக மக்களின் தாய்மொழி உரிமையைப் பாதுகாக்க 1999 ஆம் ஆண்டில், 21 பிப்ரவரியை உலகத் தாய்மொழி நாள் என  ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) அறிவித்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகத் தாய்மொழி நாள் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

வங்காளதேசமாக உருமாறிய கிழக்கு பாகிஸ்தான்

கால ஓட்டத்தில், கிழக்கு பாகிஸ்தானுக்கான அதிகாரத்துவ மொழிப் பிரச்சனை முடிவுக்கு வந்தாலும், கிழக்கு- மேற்கு பாகிஸ்தான் நிலப்பகுதிகளுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்தன.

கிழக்குப் பாகிஸ்தானியர் – அதாவது வங்காள மக்கள் – மேற்குப் பாகிஸ்தானியரின் இராணுவ அடக்குமுறைகளால் துன்புறுத்தப்பட்டனர். மிகப் பெரிய எண்ணிக்கையிலான அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

அதைத் தொடர்ந்து 1971-இல் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய வங்காள தேசப் போரினால் கிழக்கு பாகிஸ்தான், தனிநாடாக சுதந்திரம் பெற்றது, வரலாற்றின் இன்னொரு பக்கம்.

இன்றைய தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் நமது தாய்மொழியாம் அன்னைத் தமிழ் மொழியைத் தொடர்ந்து உலகின் தொன்மை மிக்க மொழியாக நிலைநிறுத்த, பாதுகாக்க, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய கடப்பாடு கொள்வோம்!

-இரா.முத்தரசன்