Home நாடு ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 3 : சாலாஹூடின் போட்டியிடும் சிம்பாங் ஜெராம்

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 3 : சாலாஹூடின் போட்டியிடும் சிம்பாங் ஜெராம்

620
0
SHARE
Ad
சாலாஹூடின் அயூப்

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதியாக மாறியிருக்கிறது சிம்பாங் ஜெராம். அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சாலாஹூடின் அயோப் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி. மீண்டும் அவர் இங்கே போட்டியிடுவதாலும் – அவர் வெற்றி பெற்று, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றினால் – அவரே மந்திரி பெசார் ஆவார் என்ற ஆரூடம் நிலவுவதாலும் – அனைவரின் பார்வையும் பதிந்து நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கிறது சிம்பாங் ஜெராம். அந்த தொகுதி குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

2018 பொதுத் தேர்தலில் அமானா கட்சியின் துணைத் தலைவரான சாலாஹூடின் அயோப், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் பூலாய் நாடாளுமன்றத்
தொகுதியிலும் போட்டியிட்டார்.

அப்போது ஜோகூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றலாம் என்ற ஆரூடம் நிலவியது.

#TamilSchoolmychoice

அது சாத்தியமானால் பாக்காத்தான் கூட்டணி மந்திரி பெசார் வேட்பாளர் சாலாஹூடின் அயோப்தான் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. சாலாஹூடின், தான் போட்டியிட்ட நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

பக்காத்தான் கூட்டணி மத்திய அரசாங்கத்தையும் கைப்பற்றியதால் சாலாஹூடின் விவசாயத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்போது நான்கு ஆண்டுகள் கழித்து, ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்று சாலாஹூடினும் வெற்றி பெற்றால், அவரே ஜோகூர் மந்திரி பெசாராக பதவி ஏற்பார் என்பதுதான் இப்போதும் எழுந்திருக்கும் ஆரூடம்.

4 ஆண்டுகள் கழிந்தும் இத்தகைய ஆரூடம்
எழுவதிலிருந்து சாலாஹூடினின் ஆளுமையையும், செல்வாக்கையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பிகேஆர் கட்சியின் சார்பில் லாயாங்– லாயாங் தொகுதியில் போட்டியிடும் மஸ்லீ மாலேக் பிகேஆர் முன் நிறுத்தும் மற்றொரு மந்திரி பெசார் வேட்பாளர். ஆனால், எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் அதிகாரப்பூர்வ மந்திரி பெசார்
அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

சலாஹூடின் அயூப் – அமானா கட்சியின் துணைத் தலைவர்

ஆனால், தேசிய முன்னணி கூட்டணியோ நாங்கள் வெற்றி பெற்றால் நடப்பு மந்திரி பெசார் ஹஸ்னி முகமட்தான் மந்திரி பெசாராவார் என பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இது பக்காத்தான் கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாலாஹூடின் போட்டியிடும் சிம்பாங் ஜெராம் தொகுதியை ஒரு வலம் வருவோம்.

2018-இல் சாலாஹூடின் வெற்றி பெற்ற தொகுதி

பக்ரி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சிம்பாங் ஜெராம். பெந்தாயான், புக்கிட் நானிங் ஆகியவை மற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகும். பாக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெகவின் இயோ பீ யின் 2018-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பூலாய் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டாலும் அங்கிருந்து அதிகத் தூரத்தில் உள்ள மூவார் வட்டாரத்தில் சாலாஹூடின் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இருந்தாலும், கடந்த 2018 பொதுத் தேர்தலில் 7,687 வாக்குகள்
வித்தியாசத்தில் சாலாஹூடின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றத் தொகுதி சிம்பாங் ஜெராம் என்பதால் அவரையே மீண்டும் நிறுத்தி அந்தத் தொகுதியைத் தற்காக்க அமானா முடிவெடுத்திருக்கலாம்.

அத்துடன் பக்காத்தான் வெற்றி பெற்றால் மந்திரி பெசார் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் தகுதியும் சாலாஹூடினுக்கு உண்டு.

பாஸ் கட்சியிலிருந்து அமானாவுக்கு…

ஜோகூர் பொந்தியான் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர் சாலாஹூடின். இளம் வயதில் இஸ்லாமிய சமயக் கல்வியைப் பெற்றவர். அதன் பின்னர் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் சேர்ந்து வணிக நிர்வாகத்தில் டிப்ளோமா பெற்றார்.

புத்ரா பல்கலைக்கழகத்தில் 1984ம் ஆண்டில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.

முதலில் வங்கியில் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ‘அபிம்’ (அங்காத்தான் பெலியா இஸ்லாம் மலேசியா) எனப்படும் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பல்கலைக்கழக கல்விக்குப் பின்னர் தொடங்கிய இளைஞர் இயக்கம்தான் ‘அபிம்.’

அதன் பின்னர் பாஸ் கட்சியில் அரசியல் ஈடுபாடு காட்டிய சாலாஹூடின் 1999 பொதுத் தேர்தலில் ஜோகூர் பெனூட் சட்டமன்றத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதே பெனூட் தொகுதியில்தான் நடப்பு மந்திரி பெசார் ஹஸ்னி முகமட் இப்போது போட்டி போடுகிறார் என்பதும் நினைவுகூரத்தக்க சுவாரசியம்.

கிளந்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டி

சாலாஹூடின் போன்ற சிறந்த இளம் பாஸ் தலைவர்களுக்கு ஜோகூர் பொருத்தமான களமாக இருக்கவில்லை. காரணம் அப்போது ஜோகூர் அம்னோவின் கோட்டையாகத்
திகழ்ந்தது.

இதன் காரணமாக பாஸ் கட்சி, சாலாஹூடினை கிளாந்தானிலுள்ள குபாங் கிரியான் நாடாளுமன்றத் தொகுதியில் 2004 பொதுத் தேர்தலில் நிறுத்தியது

அதில் வெற்றி பெற்றவர், தொடர்ந்து 2008 பொதுத் தேர்தலிலும் அதே நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2013 பொதுத் தேர்தலில் தனது பூர்வீக மாநிலமான ஜோகூருக்குத் திரும்பினார் சாலாஹூடின்.

பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், நூர் ஜஸ்லான் முகமட்டிடம் தோல்வி அடைந்தார். முன்னாள் அம்னோ அமைச்சர் முகமட் ரஹ்மாட்டின் மகன்தான் நூர் ஜஸ்லான்.

அதே 2013 பொதுத் தேர்தலில் ஜோகூர் நூசா ஜெயா சட்டமன்றத்திலும் போட்டியிட்டார். அதிலும் தோல்விதான்.

இதற்கிடையில், 2015ஆம் ஆண்டில் பாஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் சாலாஹூடின் உள்ளிட்ட பல தலைவர்கள் முகமட் சாபு தலைமையில் பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து அமானா கட்சியைத் தோற்றுவித்தனர்.

நூர் ஜாஸ்லான்

2018ஆம் ஆண்டில் ஜோகூர் அரசியல் களம் பக்காத்தானுக்கு சாதகமாக மாறியது. மீண்டும் பூலாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சாலாஹூடின் இந்த
முறை நூர் ஜஸ்லானை வீழ்த்தினார்.

அதுவும் 28,924 வாக்குகள் பெரும்பான்மையில் சாலாஹூடின் வெற்றி பெற்றார்.

அதே பொதுத் தேர்தலில் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். அதிலும் 7,687 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
பெற்றார்.

2018 கணக்கெடுப்பின்படி 54 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 43 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 3 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது இந்த சட்டமன்றத் தொகுதி.

இந்த முறை இந்தத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

பெஜுவாங், பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி கட்சிகள் சாலாஹூடின் அயோப்பை எதிர்த்து நிற்கின்றன. ஆனால் அதன் வேட்பாளர்கள் யாருமே சாலாஹூடினுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்களில்லை.

2018-இல் 28,193 வாக்காளர்களைக் கொண்டிருந்த இந்தத் தொகுதியில் இந்த முறை 40,014 வாக்காளர்கள் எண்ணிக்கையில் உயர்ந்திருக்கின்றனர்.

எனவே, ஒரு சவால்மிக்க சூழ்நிலையில் மீண்டும் சிம்பாங் ஜெராம் தொகுதியை சாலாஹூடின் தற்காப்பாரா?

அதே வேளையில் பக்காத்தான் ஹாரப்பானும் அரசியல் கணிப்புகளைப் பொய்யாக்கி பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றினால், சாலாஹூடின் இந்த முறை மந்திரி பெசார் ஆவாரா? என ஆவலுடன் காத்திருக்கின்றனர் அரசியல் பார்வையாளர்களும் அமானா கட்சியினரும்!

-இரா.முத்தரசன்