Home நாடு சொஸ்மா: விசாரணை இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீட்டிக்கும் அரசாங்க முயற்சி தோல்வி

சொஸ்மா: விசாரணை இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீட்டிக்கும் அரசாங்க முயற்சி தோல்வி

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் : புதன்கிழமை (மார்ச் 23) கூடிய நாடாளுமன்றம் மலேசிய வரலாற்றில் வழக்கமாக காணாத வித்தியாச சூழ்நிலையைச் சந்தித்தது.

அரசாங்கத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்  கொண்டு வந்த தீர்மானம் ஒன்று தோல்வியடைந்த சம்பவம்தான் அது!

2012ஆம் ஆண்டில் அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அகற்றியது. ஒருவரை விசாரணை இன்றி இரண்டு ஆண்டுகளுக்குத் தடுத்து வைக்கும்  அதிகாரத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதற்குப் பதிலாக சொஸ்மா எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

ஒருவரை பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்து 28 நாட்களுக்கு விசாரணை இன்றித் தடுத்து வைக்கும் அதிகாரத்தை சொஸ்மா சட்டம் அரசாங்கத்திற்கு வழங்கியது.

இந்த அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்றும் அதை நீட்டிப்பதென்றால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சட்டத் தீர்மானம் மூலமே அதை நீட்டிக்க முடியும் என்றும் 2012 சட்டம் வரையறுத்திருந்தது.

5 ஆண்டுக்கான அந்த அதிகாரம் எதிர்வரும் ஜூலை 31, 2022 தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு அந்த அதிகாரத்தை நீட்டிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் புதன்கிழமையன்று தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். சொஸ்மா சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ அசஹான் இந்தப் பரிந்துரையை வாக்கெடுப்புக்கு விட்டார்.

அந்த வாக்கெடுப்பின்போது, 28 நாட்களுக்கு விசாரணை இன்றித் தடுத்து வைக்கும் சொஸ்மா சட்டப் பரிந்துரையை ஆதரிப்பதாக 84 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆனால், அதனை எதிர்த்து 86 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சட்டப் பரிந்துரை தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த வாக்கெடுப்பின்போது 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இல்லை.

விசாரணை இன்றி ஒருவரை சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்களுக்குத் தடுத்து வைக்கும் அதிகாரம் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என 2012இல் நிறைவேற்றப்பட்ட சொஸ்மா சட்டம் நிர்ணயித்திருந்தது.

அதன்படியே, மறுஆய்வு அடிப்படையில் விசாரணை இன்றி 28 நாட்களுக்குத் தடுத்து வைக்கும் பரிந்துரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வண்ணம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.