கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் அவசரகால சட்டத்தை அதிபர் கோத்தாபாய ராஜபாக்சே அறிவித்திருக்கிறார்.
மக்கள் போராட்டங்கள் இலங்கை அரசுக்கு எதிராக வலுத்து வரும் வேளையில், பதட்டத்தைத் தணிக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு, ஏப்ரம் மாதம் 21ம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அவசரகால நிலைமையை அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பிரகடனப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சே அவசர நிலையை இப்போது பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலை நேற்று முதல் (ஏப்ரல் 1) இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
நேற்று, அந்நாட்டின் அதிபர் மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் பலர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 10க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.