Home நாடு மொகிதின் யாசின் : பெர்சாத்துவின் பிரதமர் வேட்பாளர் – இஸ்மாயில் சாப்ரிக்கு சரியான போட்டியா?

மொகிதின் யாசின் : பெர்சாத்துவின் பிரதமர் வேட்பாளர் – இஸ்மாயில் சாப்ரிக்கு சரியான போட்டியா?

706
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமோ இல்லையோ – அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான அறிவிப்புகள் – கூட்டணிக் கட்சிகளின் மோதல்கள் – தொடங்கிவிட்டன.

அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல, அடுத்த பிரதமராக ஒருவரை முன்னிறுத்தி அவரின் தலைமையில் பொதுத் தேர்தலைச் சந்திப்பதும், மக்களுக்கு முன்கூட்டியே அடுத்த பிரதமரின் தகுதிகள் குறித்து ஆராய்ந்து வாய்ப்பை வழங்குவதும் ஆரோக்கியமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

அம்னோவின் பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சாப்ரி

15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக நடப்பு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரியை முன்னிறுத்தும் அதிரடி முடிவை அம்னோ எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை (ஏப்ரல் 14) கூடிய அம்னோ உச்சமன்றம் இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவை அறிக்கை ஒன்றின் வழி அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

மிக விரைவாக பிரதமர் வேட்பாளரை அறிவித்திருப்பதன் மூலம் 15-வது பொதுத் தேர்தலுக்குத் தாங்கள் தயாராகி வருவதை அம்னோ மறைமுகமாக அறிவித்திருக்கிறது.

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் அம்னோவில் மோதல்கள் எழும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒருமுகமாக பிரதமர் வேட்பாளரை அறிவித்திருப்பதன் மூலம் கட்சியில் ஒற்றுமையே மேலோங்கி இருப்பதை அம்னோ வெளிப்படுத்தியிருக்கிறது.

பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் மொகிதின் யாசின்

அதைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் சார்பில் முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசினைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ரசாலி இட்ரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது அதிகாரபூர்வ அறிவிப்பல்ல! மொகிதின் யாசினும் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் பெரிக்காத்தான் கூட்டணி மொகிதினைத் தவிர வேறு யாரையும் பிரதமராக முன்னிறுத்த வாய்ப்பில்லை. மொகிதினின் 17 மாத ஆட்சியின் சிறப்பினால் அவரே அடுத்த பிரதமருக்குத் தகுதி உள்ளவர் என ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்கள் அந்த 17 மாத கால ஆட்சியினால் – அதனால் ஏற்பட்ட பல்வேறு குழப்படிகளால் – மீண்டும் மொகிதினுக்கு வாய்ப்பளிப்பார்கள் எனக் கருத முடியாது.

ஆக, இன்றைய நிலையில் இதுவரையில் அனைத்து அரசியல் தரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் தன்மைகொண்ட – குறிப்பிடத்தக்க தவறுகள்-குளறுபடிகள் – எதுவும் இல்லாமல் ஆட்சி செய்யும் – இஸ்மாயில் சாப்ரிக்கு மொகிதின் சரியான – சமமான பிரதமர் வேட்பாளர் போட்டியல்ல!

பக்காத்தான் ஹாரப்பானின் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம், பிகேஆர் கட்சித் தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னரே, இஸ்மாயில் சாப்ரி – அன்வார் இப்ராகிம் இருவருக்கும் இடையிலான பிரதமர் தகுதிக்கான ஒப்பீடுகள் தொடங்கும்.