கோலாலம்பூர் : பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் மதிப்பீடும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அதிரடி முடிவை அம்னோ எடுத்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 14) கூடிய அம்னோ உச்சமன்றம் இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவை அறிக்கை ஒன்றின் வழி அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
மிக விரைவாக பிரதமர் வேட்பாளரை அறிவித்திருப்பதன் மூலம் 15-வது பொதுத் தேர்தலுக்குத் தாங்கள் தயாராகி வருவதை அம்னோ மறைமுகமாக அறிவித்திருக்கிறது.
அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் அம்னோவில் மோதல்கள் எழும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒருமுகமாக பிரதமர் வேட்பாளரை அறிவித்திருப்பதன் மூலம் கட்சியில் ஒற்றுமையே மேலோங்கி இருப்பதை அம்னோ வெளிப்படுத்தியிருக்கிறது.