Home இந்தியா தமிழ் நாடு சார்பில் மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழ் நாடு சார்பில் மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

686
0
SHARE
Ad

சென்னை : மாநிலங்கவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகிற 29-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த பதவியிடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்  தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் (படம்) வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேச்சையாக  7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் உத்தரவிட்டார். மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான நேரம் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.

#TamilSchoolmychoice

திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோரும் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர். தர்மர் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.